இமாம் ராமஹுர்முஸியின் “அல் முஹத்திஸுல் பாஸில்” பற்றிய சுருக்கமான தேடல்
(ஹதீஸ் கலை அடிப்படை விதிகள் பற்றிய தனித்துவமிக்க முதல் நூல்)
“அல் முஹத்திஸுல் பாஸில் பைனர் ராவி வல் வாஈ” என்ற இந்த நூலே (உலூமுல் ஹதீஸ்) ஹதீஸ்கலையின் அடிப்படை விதிகள் என்ற பாடப்பகுதியில் முதன் முதலாவது எழுதப்பட்ட தனித்துவம் வாய்ந்த நூலாகும். இதனை அல் இமாம் அல் ஹாபிழ் அபூ முஹம்மத் அல் ஹஸன் பின் அப்துர் ரஹ்மான் பின் ஹல்லாத் அர்ராமஹுர்முஸி அவர்கள் எழுதியுள்ளார்கள்.
இந்த நூலின் உள்ளடக்கங்கள் அதன் பாடப்பகுதிகள் , சிறப்பம்சங்கள் , இமாமவர்கள் இந்த நூலில் கடைப்பிடித்திருக்கும் போங்கு , அதனை அவர்கள் முன்வைக்கும் பாங்கு போன்றவற்றை இந்த தேடலில் சுருக்கமாக ஆராயவுள்ளோம்.
இமாம் ராமஹுர்முஸி அவர்கள்; தனது நூலின் ஆரம்பப் பகுதியில் ஹதீஸின் முக்கியத்துவத்தையும் முஹத்திதீன்களின் சிறப்புக்களையும் விளக்கி அவர்கள்தான் இந்த மார்க்கத்தின் பாதுகாவலர்கள் என்றும் நபி மொழிகளில் பலவீனமானவற்றிலிருந்து நம்பகமானவற்றை பிரித்து விளக்கியவர்களும் அவர்களே என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அத்தோடு ஹதீஸ்கலை மாணவர்கள் தூய்மையான சுன்னாவை மாத்திரம் விளங்கி அதனை பற்றிப்பிடிக்கும் படி அறிவுரையும் வழங்கியுள்ளார்கள்.
(அல் முஹத்திதுல் பாஸில் – 159-161)
(இஸ்னாத்) அறிவிப்பாளர் வரிசை என்ற ஆய்வுப் பகுதியில் அதன் உயர்ந்த , தாழ்ந்த (அல்இஸ்னாதுல் ஆலி அல் இஸ்னாதுந் நாஸில் )பகுதிகள் பற்றி விளக்குகிறார்கள் மேலும் (ரிவாயத் , திராயத் ) ஹதீஸ் கலையின் அறிவிப்பாளர் வரிசை மற்றும் (மதன்) ஹதீஸின் உள்ளடக்கம் இரண்டையும் ஒன்றிணைத்து நோக்குவதின் அவசியமும் அதன் சிறப்பும் பற்றி விளக்கியுள்ளார்கள்.
ஹதீஸ் கலை ஆய்வாளர்களால் சந்தேகிக்கப்படுகின்ற அதிகமான அறிவிப்பாளர்களின் பெயர்களையும் அங்கு விளக்கியுள்ளார்கள்.
பெயர்கள் தந்தையர்களோடு இணைக்கப்படாது பாட்டன் மாரோடு இணைக்கப்பட்டு பிரபல்யமடைந்த அறிவிப்பாளர்கள், பெயர்கள் தாய்மாரோடு இணைக்கப்பட்ட அறிவிப்பாளர்கள், புணைப்பெயர்களும் வாழ்ந்த காலப்பகுதியும் உறுதியாக அறியப்பட்ட அறிவிப்பாளர்கள் போன்றவற்றை அடுத்த கட்டமாக விளக்கியுள்ளார்கள்.
ஒரு முஹத்திதுக்கு இருக்க வேண்டிய பண்புகள் ஹதீஸ்களை அறிவிப்பதற்கான ஆரம்ப வயதெல்லையும் ஹதீஸ்களை அறிவிப்பதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டிய வயதெல்லை பற்றியும் விளக்கியுள்ளார்கள் .
மாமேதை இமாம் சுப்யான் அத் தௌரி அவர்கள் மாமேதை இமாம் சுப்யான் பின் உயைனா அவர்களிடம் நீங்கள் ஏன் ஹதீஸ்களை அறிவிப்பதில்லை என்று கேட்டதும் நீங்கள் உயிரோடு இருக்கும் போது நான் எவ்வாறு அறிவிப்பது என்று கூறிய சம்பவத்தையும் சிறந்த முஹத்திதீன்களின் உயர்ந்த நற்குணத்திற்கு உதாரணமாக குறிப்பிட்டுள்ளார்கள்.
(அல் முஹத்திஸுல் பாஸில் – 352)
ஹதீஸ்களை எழுதுதிப் பாதுகாத்தல் என்ற பகுதியில் யார் அதனை அனுமதித்துள்ளார்கள், யார் அதனை வெறுக்கத்தக்கதாக கருதியுள்ளார்கள், எழுதுவதை தடை செய்யும் காரணிகள் எவ்வாறு நீங்குகின்றன என்ற பகுதியையும் விளக்கி, ஹதீஸ்களை பாதுகாக்கும் விடயத்தில் எழுதிப் பாதுகாத்தலின் அவசியம் பற்றியும் தெளிவு படுத்தியுள்ளார்கள்.
இந்த பகுதியில் இமாமவர்கள் தனது சொந்த அறிவிப்பாளர் வரிசையினூடாக அபூ சஈத் அல் ஹுத்ரி (ரழி) அவர்களின் அறிவிப்பையும் பதிவு செய்துள்ளார்கள்.
நாம் நபியவர்களிடம் ஹதீஸ்களை எழுதுவதற்கு அனுமதி கோரினோம் அவர்கள் அதனை மறுத்து விட்டார்கள்.
இமாம் இப்னு ஸீரீன் (ரஹ்) அவர்கள் ஹதீஸ்களை எழுதுவதில் எவ்வித தவறுமில்லை என்ற நிலைப்பாட்டிலே உள்ளார்கள் என்ற செய்தியையும் இமாம் அஃமஷ் அவர்கள் இமாம் அபூ இஸ்ஹாக் அவர்களிடம் ஹதீஸ்களை படித்து விட்டு வீட்டுக்கு வந்த உடனே அதனை எழுதிக் கொள்வார்கள் என்ற செய்தியையும்
அங்கு பதிவு செய்துள்ளார்கள்.
(அல் முஹத்திஸ் – 379-384)
யாரிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்க முடியும் அவர்களது தகுதிகள் என்ன?
ஹதீஸ்களை பிறரிடமிருந்து பெறுவதற்கான, அதனை உள்வாங்குவதற்கான வழிமுறைகள் என்ன ? அது பற்றிய ஹதீஸ் துறை ஆய்வாளர்களின் அபிப்பிராயங்கள், கருத்துக்கள் பற்றி அடுத்த பகுதியில் ஆய்வு செய்துள்ளார்கள்.
ஹதீஸ்களை அறிவிப்பதற்கான வழிமுறைகளும் வார்த்தைப் பிரயோகங்களும் (துருகுத் தஹம்முல் வசியகுல் அதா ) என்ற அடுத்த பகுதியை பல உப தலைப்புக்களினூடாக விளக்கியுள்ளார்கள்.
நான் கேட்டேன் , எனக்கு ஒருவர் அறிவித்தார் , அல்லது ஒருவர் அதனை அறிவித்தார் , ஒருவரிடமிருந்து ஒருவர் ,இன்னாரிடமிருந்து இன்னார் எனக்கு கூறினார் போன்ற அறிவிப்பாளர்களின் சொற்பிரயோகங்களுக்கிடையிலான வித்தியாசத்தையும் வேறுபாட்டையும் பிரித்து விளக்கியுள்ளார்கள்.
ஹதீஸின் சொற்களையும் அதன் கருத்துக்களையும் ஹதீஸ்களில் உள்ளபடியே அறிவிப்பு செய்தல் , சொற்களை முற்படுத்தியும் பிற்படுத்தியும் அறிவிப்பு செய்தல் பற்றிய முஹத்திதீன்களின் நிலைப்பாடுகள் பற்றியும் அடுத்து விளக்கியுள்ளார்கள்.
இமாம் ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கருத்து சரியாக இருக்கும் பட்சத்தில் ஒரு ஹதீஸின் சொற்களை முன் பின்னாக மாற்றி அறிவிப்பதில் எவ்வித தவறும் கிடையாது என்று கூறியுள்ளதையும் அங்கு சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
(அல் முஹத்திஸ் – 541)
பலவீனமான அறிவிப்பாளர்கள் , சில ஹதீஸ் துறை அறிஞர்களின் பலவீனத் தன்மை, அவர்கள் பற்றிய இமாம்களின் கருத்துக்கள் மேலும் பலவீனமான அறிவிப்பாளர்களின் நிலைப்பாடுகள் பற்றிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவு போன்றவற்றையும் அடுத்த பகுதியில் தெளிவு படுத்தியுள்ளார்கள்.
ஹதீஸ்களை ஒருவர் சொல்ல மற்றவர் எழுதுதல் (அல் இம்லா வல் இஸ்திம்லா ) பள்ளிவாசல்களில் ஹதீஸ் மன்றங்கள் நிகழ்த்துதல், அங்கு ஹதீஸ்களை வாசித்தல், ஒருவர் வாசிக்க அதனைக் கேட்டு பிறரும் வாசித்தல் போன்ற விடயங்களையும் எழுதிவைத்தவற்றிலிருந்தும் மனனமிட்டு வைத்திருந்தவற்றிலிமிருந்தும் ஹதீஸ்களை சொல்லுதல் ஹதீஸ்களுக்கு ( நுக்தாக்கள் ) புள்ளிகளும் ஹரகத்களும் இடுதல், அதன் ஓரப் பகுதிகளில் குறிப்புக்கள் எழுதுதல், ஹதீஸ்கள் இடம்பெற்ற நூல்களை ஓரங்களில் குறித்துக் கொள்ளுதல் போன்றவற்றை விளக்கி எழுதியுள்ளார்கள்.
இந்த நூலின் சிறப்பம்சங்கள்:
ஹதீஸ் கலை அடிப்படை விதிகள் (உலூமுல் ஹதீஸ்) என்ற பகுதியில் முதன் முதலாக கோர்வை செய்யப்பட்ட சிறப்புவாய்ந்த நூலாக அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளும் விடயத்தில் இந்த நூலில் தொகுக்கப்பட விதிமுறைகள் பேணப்பட்டு வருகின்றன, மாமேதை இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் உலூமுல் ஹதீஸ் என்ற துறையில் முதன் முதலாக தொகுக்கப்பட்ட நூல் இதுவே எனக்கூறியுள்ளார்கள்.
(தஹ்கீகுல் முஹத்திஸ் – 27)
இமாம் ராமஹுர்முஸி அவர்கள் தனது நூலில் (கிதாபதுல் ஹதீஸ்) ஹதீஸ்களை எழுதுதல் என்று எழுதிய ஒரு சிறு பகுதியே அவர்களுக்கு நூறு ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இமாம் ஹதீப் அல் பக்தாதி (ரஹ்) அவர்களால் “தக்யீதுல் இல்ம்” என்ற பெயரைக் கொண்ட நூலாக அதன் உள்ளடக்கத்தை தெளிவு படுத்தி மேலதிக விளக்கங்களுடன் எழுதப்பட்டது.
தனது நூலில் அறிவிப்பாளர் வரிசை பற்றிய இமாமவர்களின் சிறந்த ஆய்வுப் பகுதியே அறிஞர்களால் அதிகம் போற்றப்படுகின்றது.
இந்த நூல் எழுதப்படுவதற்கு முன்பே இத்துறையின் பல பகுதிகளும் எழுதப்பட்டு ஆங்காங்கே சிதறிக்கிடந்தாலும் இமாமவர்கள் எழுதிய ஹதீஸ்களை யாரிடமிருந்து பெறவேண்டும், அதனை எவ்வாறு அறிவிக்கவேண்டும், ஹதீஸ்களை கேட்பதன் ஒழுங்குகள், ஹதீஸ்களைச் சொல்ல பிறர் எழுதுதல் போன்றவை இந்த தலைப்பிலேயே முதன் முதலாக எழுதப்பட்டிருப்பதை இமாமவர்களின் நூல்களில் தான் காணமுடிகிறது என்ற கருத்தையும் அறிஞர்கள் முன்வைத்துள்ளனர்.
இமாமவர்களின் இந்த நூலை மையமாகக் கொண்டு வேறு அறிஞர்களால் தொகுக்கப்பட்ட நூல்கள் என்ற வகையில்..
1- அல் கிபாயா.
2- தக்யீதுல் இல்ம்.
3- அல் ஜாமிஃ லி அஹ்லாகிர் ராவி வஆதாபிஸ் ஸாமிஃ.
இந்த மூன்று நூல்களுமே இமாம் ஹதீப் அல் பக்தாதி (ரஹ்) அவர்களால் தொகுக்கப்பட்டவையாகும்.
இமாம் ராமஹுர்முஸி (ரஹ்) அவர்களின் பணி இத்துறைக்கு மிக மகத்தானது என்பதை இத்துறை சார்ந்த அறிஞர்கள் அனைவருமே ஏகோபித்துக் கூறுகிறார்கள்.
அல்லாஹ் அன்னாரின் பணிகளை ஏற்றருள்வானாக!
எங்களுடைய அன்புக்குரிய இமாம்கள் எல்லோரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! சுவனத்தின் உயர்ந்த பதவிகளையும் அவர்களுக்கு வழங்குவானாக!