இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நிச்சயமாக நீங்கள் மார்க்கச் சட்ட நிபுணர்கள் அதிகமாகவும் உரை நிகழ்த்துபவர்கள் குறைவாகவும், யாசகம் கேட்பவர்கள் குறைவாகவும் கொடுப்பவர்கள் அதிகமாகவும் உள்ள காலத்தில் இருக்கிறீர்கள். அதில் நல்லறம் செய்வது மனோ இச்சையை வழிநடத்தும்.
உங்களுக்குப் பின்னால் ஒரு காலம் வரும் அக்காலத்தில் சட்ட நிபுணர்கள் குறைவாகவும், உரை நிகழ்த்துபவர்கள் அதிகமாகவும், யாசிப்பவர்கள் அதிகமாகவும் கொடுப்பவர்கள் குறைவாகவும் இருப்பார்கள். அதில் மனோ இச்சை நல்லறம் செய்வதை வழிநடத்தும் அறிந்து கொள்ளுங்கள்.
நிச்சயமாக கடைசிக் காலத்தில் அழகிய நேரிய பாதை சில நல்லறங்களை விடச் சிறந்தது. நூல் : இமாம் புகாரி (ரஹ்) அவர்களின் அல்அதபுல் முஃப்ரத் 789).
இதை சொன்னது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள். நான்கு ஸஹாபாக்களிடமிருந்து நீங்கள் குர்ஆனைக் கற்றுக்கொள்ளுங்கள் என அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் நற்சான்று வழங்கினார்கள். அதில் ஒருவர்தான் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
தான் வாழ்ந்த காலத்தில் இருந்த மக்களின் பண்புகளை கூறியதோடு பிற்காலத்தில் வாழும் மக்களின் பண்புகள் எப்படி இருக்கும் என்பதை மிகத் துல்லியமாக கூறியுள்ளார்கள். ஸஹாபாக்கள் காலத்திலும், அதற்குப் பிறகுவந்த காலத்திலும் பேச்சாளர்கள் மிக்க குறைவாகத்தான் இருந்தார்கள். மேலும் யாசிப்பவர்கள் குறைவாகவும், அல்லாஹுக்காக வாரி வழங்குபவர்கள் அதிகமாகவும் அப்போது இருந்தார்கள். இப்போது யாசிப்பவர்களா அதிகமாகவும் வழங்குபவர்கள் குறைவாகவும் இருக்கின்றனர். இன்னும் அவர்கள் நல்லறங்களுக்குத் தக்கவாறு தங்களின் மனோஇச்சையை அமைத்துக்கொண்டார். இப்போது தங்களின் மனோஇச்சைக்குத்தக்கவாறு நல்லறங்களை அமைத்துக்கொள்கின்றனர்.
இன்னும் பெரும்பாலானோர் தனது கருத்தை நிலை நாட்ட கூறும் வார்த்தை “எனக்கு இந்த கருத்துதான் சரி எனப்படுகிறது. ஆகையால் இதை பின்பற்றுகிறேன்” என்று கூறி தனது மனோ இச்சையின் அடிப்படையில் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வதை பார்க்கலாம். அவர் செய்யும் நல்லறங்களை அந்த மனோ இச்சைதான் வழிநடத்துகின்றது. ஆனாலும் நேரான பாதையில் செய்யப்படும் நல்லறங்களே சிறந்தது என்பதை இங்கு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் புரியவைக்கின்றார்கள்.
அதேபோன்று பேச்சாளர்கள் பெருகிவிட்ட காலம் இது. எங்கள் இயக்கத்தில் இத்தனை பேச்சாளர்கள் உண்டு என பட்டியலிட்டு பெருமையடிக்கும் காலம் இது! இரண்டு ஜூம்ஆவில் உரையாற்றிவிட்டால் அவர் அந்த மக்களுக்கு மாமேதையாகிவிடுகின்றார். அதுவும் ரமலான் வந்துவிட்டால் பல ஆண்டுகள் பேசிய அதே செய்திகளை தலைப்பை மட்டும் மாற்றி வைத்துக் கொண்டு மக்களின் ரமலான் இரவு நேரங்ககளை பாழாக்குவதற்கு எல்லா பேச்சாளர்களும் படையெடுத்து வந்துவிடுகின்றனர். ஆகவே உண்மையான மார்க்க சட்டவல்லுனர்கள் மிகவும் குறைந்த காலம் இது.
அதேபோன்று நல்லறங்கள் மீது ஆர்வம் காட்டும் அளவுக்கு சரியான கொள்கையை, நேரான பாதையை அறிந்து கொள்வதில் பெரும்பாலான முஸ்லிம்கள் ஆர்வம் காட்டுவதில்லை. நல்லறங்களை விட சரியான பாதையை அறிந்துகொள்வதற்கு பல இயக்களும் தடையாக உள்ளன.
அறிவில் சிறந்தவர் என அல்லாஹுவின் தூதரால் (ஸல்) சிறப்பித்து சொல்லப்பட்ட இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் கூற்று நம் காலத்தில் உண்மையாகிப்போனது.
———–
S.A.Sulthan
12/05/2019
Jeddah