தலைப்பிறை கண்டுட்டாங்களாம்.
பள்ளியில சொன்னாங்க,
காதுல கேட்டிச்சி,
நோன்பு மணத்திச்சி,
சைத்தான்கள் விலங்கிடப்படுமாமே இனியென்ன பயமென்று
சிலர் சாமத்திலும் விளையாடினோம்,
ஜும்ஆவுல
சொன்னாங்க நேற்று
றமளானின் பொழுதுகள்
மகத்துவமானதென்று.
எம் இறைவா!
இந்த றமளானிலாவது சாமத்திலும் அமல் செய்யும் பாக்கியம் தருவாய்!
நித்திரை தோய்ந்த கண்ணுடன்
ஸஹர் செய்து தூங்கினால், சிலர் ளுஹறுக்குத்தான் விழித்த ஞாபகம்
ஜும்ஆவுல
சொன்னாங்க நேற்று
றமளானில் செய்யும்
அமல்களுக்கு கூலி அதிகமாம்
எம் இறைவா!
இந்த றமளானிலாவது எங்கள் வினாடிகளை பொருந்திக் கொள்வாயாக!
சிலர் கூடினாலும் பலர் கூடினாலும் பேசியதெல்லாம் பாவப்பேச்சுத்தான்.
ருசி கண்டதெல்லாம் அந்த தோழமையில்தான்.
ஜும்ஆவுல
சொன்னாங்க நேற்று
தீமை பேசுவதைவிட, மௌனம் சிறந்ததாம் மௌனத்தை விட நல்ல பேச்சு சிறந்ததாம் என்று.
எம் இறைவா!
ஒவ்வொரு வினாடியும் நல்லது பேசும் கூட்டத்தில் எம்மைச் சேர்த்தருள்வாய்!
அஸர் நேரம் வந்தா,
ருசியான கறி குசினிக்குள்ள மணக்கும்.
வாளி வாளியாய்க் கஞ்சியும்,
வகைவகையா உறைப்புகளும் கூட. ஆஹா!
நிறைந்த சாப்பாடு,
நிறைந்த நோன்பு
எனச் சிலர் நினைத்தோம்
எம் இறைவா!
“ரையான்” வாசல் நுழையும்
உயர் அந்தஸ்தினை எம் நோன்பிற்கு வழங்கிவிடு!
நாங்கள் மறந்தாலும் எங்களை மறக்காத மகத்துவ றமளானே!
எங்களை ஆன்மாச் சலவை செய்துபோக மீண்டும் வந்துள்ளாய்!
முயற்சிக்கிறோம் நறுமணத்துடன் உன்னை அனுப்பி வைக்க.
– பர்சானா றியாஸ்