சிலர் தனது கடந்தகால வாழ்வில் ஏற்பட்ட வேதனைகளுக்கெல்லாம் தன்னுடன் இருந்த உறவுகளே காரணம் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டு அவர்களைக் குத்தல் செய்யும் விதமாய் பேசுவதும், நடந்து கொள்வதும் அநேகமான வீடுகளில் நடந்தேறிக் கொண்டுதானிருக்கிறன.
அந்தக் குத்தல் வார்த்தைகளை வாங்கிக்கொள்ளும் உறவுகள், அவர்களை சேர்ந்து நடக்கவும் முடியாமல், விலகிச் செல்லவும் முடியாமல் தவிக்கின்றனர்.
அவ்வாறு நடந்து தன்னை வெறுப்போடு நோக்கும் உறவொன்றினை தியாகத் திருநாளன்று சந்திக்க வாய்ப்பிருந்தும், அவரது மகிழ்ச்சி தன்னால் மறையக் கூடாது என்பதற்காக, அந்தச் சந்திப்பையே தியாகம் செய்ததாகக் கண்கள் பனித்தவாறே கூறிச் சென்றாள் தோழியொருத்தி.
பூமியில் வாழும் ஒவ்வொருவரினதும் சோதனைகளை நிறுத்தால், அதில் சமனிலைத் தன்மையிருக்கும். ஆனால், அதை வேதனையாகவும், வெறுப்பாகவும், குரோதமாகவும் மொழிபெயர்த்து சிலர் தமது ஆழ்மனதில் பதிவேற்றி விடுகின்றனர்.
அந்த பதிவேற்றல், ஒருவரின் விதியை இன்னொருவரால் எழுத முடியும் என்ற மாயையை அவர்களுக்கு உருவாக்கி விடுகிறது.
பின்னர், அவர்களால் எனக்கு அநியாயம் நேர்ந்தது, இவர்களால் எனக்கு கஷ்டம் நேர்ந்தது என்ற குறுகிய வட்டத்திற்குள் சிந்திக்க தலைப்படுகிறார்கள்.
இறைவனின் நாட்டம், கத்ர் என்ற விடயங்கள் எதுவுமே இவர்களுக்கு ஆறுதலளிப்பவையாக இருக்காது. இவர்களின் ஈமானியத்தை வலுவூட்ட யாரேனும் முயற்சித்தால் முதல் எதிரி அவ்வாறு முயற்சித்தவர்தான்.
இஸ்லாம் மார்க்கமும், மற்றும் அனைத்து மதங்களும் பொறுமையைப் போதிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க காரணம், அனைவரும் தங்கள் வாழ்க்கையை சூழ்ந்துள்ள சோதனைகளை வென்று வெற்றிபெறத்தான் என்பதை அவர்களாக உணரும்வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
– பர்சானா றியாஸ்