Featured Posts

‘அடிப்படை வாதம்’, ஏன் இஸ்லாத்துடன் இணைத்துப் பேசப்படுகிறது?

எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.)

அறிமுகம்

இஸ்லாம் மனித குலத்திற்கு அருட்கொடையாக வழங்ப்பட்ட ஒரு வாழ்க்கை நெறி. எனினும், உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய மார்க்கம் அதனைச் சரியாகப் புரிந்து கொள்ளாதோரால், பெரும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டுவருகிறது. அதனால், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகப் பின்பற்றும் முஸ்லிம்களுக்குப் பல பாதக விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அதேவேளை, பகுத்தறிவு உள்ள பிறமதத்தவர்கள் அந்த விமர்சனங்களைப் பகுப்பாய்வு செய்யும் போது, இஸ்லாத்தின் மீது தொடுக்கப்படும் விமர்சனங்கள் திட்டமிட்டுச் செய்யப்படும் பொய்பிரசாரங்கள் என்பதைத் தெளிவாக விளங்கி, இஸ்லாத்தின் பக்கம் தமது அவதானத்தைச் செலுத்துகின்றனர். உலகளவில் இஸ்லாம் பற்றிய கற்கை அதிகரித்து, புரிதல் ஏற்பட்டு அவை ஒரு மறுமலர்ச்சியைத் தோற்றுவித்துவருகிறது. இந்த மறுமலர்ச்சியை கொச்சைப்படுத்துவதற்காக “இஸ்லாமிய அடிப்படை வாதம்” (Islamic fundamentalism ) என்ற சொற்பிரயோகத்தை இஸ்லாத்தின் எதிரிகள் பல்வேறு ஊடகங்கள் மூலம் பரவலாக்கியுள்ளனர்.

“இஸ்லாமிய அடிப்படை வாதம்” என்ற சொற்பிரயோகத்தை எதற்காகப் பயன்படுத்துகின்றனர்? என்பதை அறியாத, புரிந்துகொள்ளாத முஸ்லிம்களில் கணிசமான ஒரு பகுதியினார் “இஸ்லாமிய அடிப்படை வாதம்” என்று ஒன்று உண்டு, இஸ்லாமிய அடிப்படை வாதம் ஆதிக்க வெறியை அடிப்படையாகக் கொண்டது என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

உலகளவில் ஏற்பட்டு வரும் இஸ்லாமிய விழிப்புணர்வையும், எழுச்சியையும் கண்டு கிலிகொண்ட யூத – கிறிஸ்தவர்களும் இன்னும் சில வல்லாதிக்க சக்திகளும் இந்த மறுமலர்ச்சியைக் கொச்சைப்படுத்த முனைந்தனர். அதன் வெளிப்பாடே இந்த வார்த்தைப் பிரயோகமாகும்.

அடிப்படையற்ற அடிப்படைவாதம்

இஸ்லாமிய எழுச்சியை தவறாகச் சித்திரித்து வன்செயலோடும், ஆக்கிரமிப்போடும், பயங்கரவாதத்தோடும் அதனைத் தொடர்புப்படுத்தி, உலக அபிப்பிராயத்தை அதற்கெதிராகத் தூண்டிவிட்டு, உலகளாவிய இஸ்லாமிய வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு, மேற்கத்திய உலகம் கட்டவிழ்த்துவிட்ட பிரசாரப் போரின் (Propaganda War) ஓர் ஆயுதமே இந்த (Islamic fundamentalism) “இஸ்லாமிய அடிப்படை வாதம்” என்ற பதப்பிரயோகமாகும்.

மேற்கத்தியப் பிரசார சாதனங்கள் அனைத்தும் அண்மைக் காலத்தில் உருவாக்கிய இச்சொற்றொடரின் வரலாற்றையும் அது குறித்து நிற்கும் விளக்கத்தையும் எதற்காக இஸ்லாத்துடன் தொடர்புப்படுத்தப்படுகின்றது என்பதையும் நோக்கும் போது அதன் பின்னால் மறைந்துள்ள சதிகளைப் புரிந்து கொள்ள முடியும்.

சொற்பிரயோகத்தின் வரலாற்றுப் பின்னணி

1920ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் தோன்றிய பழமை வாய்ந்த, ஆனால் புரட்சிவாதி புரட்டஸ்தாந்திய இயக்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டதே “அடிப்படை வாதம்” என்ற பதப் பிரயோகமாகும்.

20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலப் பிரிவில் அமெரிக்காவின் ‘புரட்டஸ்தாந்து’ பிரிவைச் சார்ந்த கிறிஸ்தவ கோயில்கள் அடிப்படைவாதிகள், ((Fundamentalist camp) நவீனத்துவவாதிகள் ((Modernists)) என இரு பிரிவுகளாகப் பிளவுபட்டன.

நவீனத்துவவாதிகள் பைபிளின் (Bible) வசனங்களுக்குக் கால வளர்ச்சிக்கு ஏற்ப நவீன விளக்கங்களையளிக்க முற்பட, அடிப்படைவாதிகள் பைபிளின் வசனங்கள், கருத்துக்களை அப்படியே உள்ளவாறு முழுக்க முழுக்க மேலெழுந்த வாரியாக விளங்கி, விசுவாசித்து, ஏற்றுக் கொள்ள வேண்டுமென நவீனத்துவ வாதிகளுக்கு எதிரான கருத்தை முன்வைத்தனர். உதாரணமாக பழைய ஆகமத்தின் (Old testament) ஐந்து பகுதிகளை உள்ளடக்கிய (Pentateuch) எனும் பகுதி மூஸா (அலை) (மோஸஸ்) அவர்களினாலே எழுதப்பட்டது என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.

எனவே, கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் பைபிளின் சொற்கள், வசனங்களுக்கு நவீன ரீதியான விளக்கம் அளிக்க முயல்வோருக்கு எதிராக ஆர்ப்பரித்தனர். 1919ம் ஆண்டு அமெரிக்காவில் உலக கிறிஸ்தவ அடிப்படைவாத சங்கம் (World`s Christian Fundamental Association ) பலம் பெற்றது.

மிகக் குறுகிய காலங்களில் “அடிப்படை வாதி” என்ற பதம் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைகளுக்காகப் போராடுவதைக் குறித்தது.

உலக கிறிஸ்தவ அடிப்படைவாத சங்கம் 1920ம் ஆண்டுகளில் டார்வினின் பரிணாமவாத சித்தாந்தம் பாடசாலைகளில் போதிக்கப்படுவதற்கு மிக வன்மையான எதிர்ப்பைத் தோற்றுவித்தது.

1920ம் ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த இயக்கத்தின் செல்வாக்குக் குறைய ஆரம்பித்தது. எனவே, அடிப்படைவாதம் என்பது அமெரிக்க கிறிஸ்தவக் கோயிலின் வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பிரிவில் தோன்றிய ஓர் இயக்கம் என்பது தெளிவாகிறது. இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.

அகராதி அர்த்தம்:

ஒக்ஸ்போட் அகராதி ( Shorter Oxford Dictionary ) Fundamentalism எனும் பதத்திற்குக் கிறிஸ்தவ அடிப்படை வாதப் போராட்ட பின்னணியையே அர்த்தப்படுத்தியுள்ளது.

“Strict adherence to orthodox tenets held to be Fundamental to the Christian Faith” “கிறிஸ்தவ வாசகத்தின் அடிப்படையான, பழமையான பாரம்பரிய கொள்கைகளை முற்றிலும் ஏற்றுக் கொண்டு பின்பற்றல்” என்றே ஒக்ஸ்போர்ட் அகராதி (Fundamentalism) என்ற பதத்திற்கு வரைவிலக்கணம் கூறுகிறது.

ஐரோப்பாவிலே உருவான அகராதியின் அர்த்தத்தை நோக்கும் போது, Fundamentalism என்பது ‘Liberalism , Modernism’ ஆகியவற்றுக்கு எதிரானது என இந்த அகராதியே சாட்சி சொல்கிறது.

அதே போல், Concise Oxford Dictionary Ninth Edition பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.

எனவே, அடிப்படைவாதம் என்பது பைபிளின் ஒவ்வொரு சொல்லும் முற்றிலும் சரியானது, பிழையற்றது(?) எனவே, அதனை எத்தகைய விளக்கமும் அளிக்க முயலாது அப்படியே உள்ளதை உள்ளபடியே வியாக்கியானப்படுத்தாது, ஏற்றுக்கொண்டு, பின்பற்றுதல் வேண்டும் என்ற கோட்பாட்டைக் குறிக்கின்றது என்பது தெளிவாகிறது.

இஸ்லாமிய அடிப்படை வாதம்?!

ஈரானில் மன்னர் ஷாவின் கொடுங்கோன்மையை எதிர்த்து, பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டு ஈரான் நாட்டு மக்களை எழுச்சி கொள்ளச் செய்து ஒரு புரட்சியை ‘ஆயத்துல்லாஹ் கொமைனி’என்ற ஷீஆ மேற்கொண்டார்.

இப்புரட்சி ஈரானின் இஸ்லாமியப்(?) புரட்சி என்று அழைக்கப்படுகிறது. (இப்புரட்சிக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை. ஈரானிய ஷீஆக்கள் முஸ்லிம் உலகிற்கு எதிரானவர்கள்.)

ஈரானியப் புரட்சி

1979ம் ஆண்டு, மன்னர் ஷாவின் கொடுங்கோன்மையை எதிர்த்துப் பொங்கிப் பிரவாகித்து, வெடித்த ஈரானியப் புரட்சிக்குப் பின்னர், மேற்கத்தியவாதிகளால் பொதுசனத் தொடர்பு சாதனங்கள் மூலமாக பிரபல்யப்படுத்தப்பட்டதே ‘Islamic Fundamentalism’ “அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதம்” என்ற சொற்பிரயோகமாகும்.

ஈரானியப் புரட்சியைத் தொடர்ந்து உலக இஸ்லாமிய நாடுகளில் அதிகமான இடங்களில் அரசியல் மறுமலர்ச்சித் தென்றல் வீசத் தொடங்கியுள்ளது. மேற்கத்திய ஆதிக்கத்திற்குட்பட்டு அடிமைப்பட்டிருந்த இஸ்லாமிய நாடுகள் சுதந்திர விடுதலை காண்கின்ற இலட்சியப் போராட்டத்தைத் தொடங்கின. முஸ்லிம் உலகில் ஏற்பட்டு வரும் இந்த மறுமலர்ச்சியை, மேற்கத்திய நாடுகள் மிகக் கூர்ந்து அவதானித்து வருகின்றன.

இஸ்லாமிய நாடுகளில் பரவிவரும் மறுமலர்ச்சி மேற்குலகினால் இருமுனையும் கூராகிய வாளைப் போன்று கிலிகொள்ளச் செய்தது. அது இருமுனையாலும் அவர்களது வல்லாதிக்க அரசியலுக்கும் பொருளாதார சுரண்டல் ஆதாயத்திற்கும் ஆபத்தைத் தோற்றுவித்தது.

ஒரு முனையில் மத்திய கிழக்கையும், இஸ்லாமிய உலகின் ஏனைய பகுதிகளையும் தங்களது அதிகாரத்திற்கும் ஆக்கிரமிப்பிற்கும் உட்படுத்தும் நவீன ஏகாதிபத்தியத்திற்கு ஓர் அச்சுறுத்தலாக அது அமைந்தது.

இன்னொரு வகையில் அது மேற்கத்தியக் கிறிஸ்தவ மயமாக்கலுக்கு ஒரு பாரிய சவாலாக அமைந்தது. எனவே, தனது அரசியல், பொருளாதார நலன்களைத் தக்கவைத்துப் பாதுகாத்துக்கொள்ள பல்வேறு யுக்திகள், எதிர் நடவடிக்கைகள், அணுகுமுறைகள், திட்டங்கள், நாசகார அழிவு வேலைகள், உளவுப் பணிகள் போன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

இந்த நடவடிக்கைகளின் துல்லிய வெளிப்பாடு செச்னியா, கஷ்மீர் ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், பலஸ்தீன், சிரியா, லெபனான், ஜோர்தான், ஈராக்,ஆப்பானிஜ்தான்,எகிப்து,லிபியா போன்ற இன்னோரன்ன முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான ஆக்கிரமிப்புகள்.

உண்மையில், அடிப்படைவாதிகளும் தீவிரவாதிகளும் யார் என்பது துள்ளியமாகப் புரிந்து கொள்ள முடியுமான வகையில் உள்ளன. அதை வெளிப்படுத்துமுகமாக மேற்கின் ஆக்கிரமிப்புக் காணப்படுகிறது.

கிறிஸ்தவ மத வரலாற்றில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளின் பயனாகத் தோன்றிய ஒரு சொற்றொடரே அடிப்படைவாதம். இன்று இஸ்லாமிய உலகில் காணப்படும் எழுச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும், சுதந்திரப் போராட்டத்திற்கும், கிறிஸ்தவ மதத் தீவிரவாதத்திற்கும் அடிப்படைவாதத்திற்குமிடையில் எந்த ஒருமைப்பாட்டையும் நாம் காணவே முடியாது.

இஸ்லாமிய எழுச்சியைப் பயங்கரவாதத்தோடும் வன்செயலோடும் தொடார்புபடுத்தி, அதன் யதார்த்த தன்மையையும், இஸ்லாமிய வரலாற்றுண்மைகளையும் மறைக்கவும், சிதைக்கவும் மேற்கத்திய ஆய்வாளர்களின் துணையுடன் உருவாக்கப்பட்டு, மேற்கத்தியப் பிரசார ஊடகங்களின் மூலமாக பிரபல்யப்படுத்தப்பட்ட ஒரு சொற்பிரயோகமே அடிப்படைவாதம்.

இச்சொற்பிரயோகம் இந்திய, இலங்கை போன்ற நாடுகளில் வெளிவருகின்ற சில நாளிதழ்களிலும், வானொலிகளிலும் எதிரொலிப்பதைக் கேட்கவும், பார்க்கவும் முடிகிறது. செய்திகளை வாசிக்கின்ற முஸ்லிம்களில் சிலரும் “இஸ்லாமிய அடிப்படைவாதிகள்” என்று நாக்கூசாமல் உரத்துச் சொல்கின்றனர். இது உண்மையில் வேதனைக்குரிய விடயமாகும். இப்பதம் வரலாற்றில் யாருக்காகப் பிரயோகிக்கப்பட்டதோ, அவர்களே எமக்குத் திருப்பிவருகின்றனர். இதற்கு முஸ்லிம்களாகிய நாமும் துணைபோவதா?

உண்மையில் இது இஸ்லாத்தை உலகமயமாக்குவதற்கான இலட்சியக் கனவுகளுடன் பிரசாரப்படுத்துவோரையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்துவதற்காக இஸ்லாமிய எதிரிகள் முடுக்கிவிட்ட ஒரு சதி என்பதை உணர்ந்து, அடிப்படைவாதத்தை இஸ்லாத்துடன் இணைத்துக் கூறுபவர்களுக்கு தர்க்க ரீதியாகப் பதில் அளிக்கப்படவேண்டும். இஸ்லாத்தின் சமாதானச் செய்தியை அதன் உயிரோட்டமுள்ள நித்திய விழுமிய கருத்துக்களை உலகமயமாக்க நாம் ஆவண செய்யவேண்டுமே தவிர, இஸ்லாம் அங்கீகரிக்காத எந்த வித தவறான வழிமுறையிலும் ஈடுபட்டுவிடக் கூடாது. சிலரது தவறான செயற்பாடுகள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எந்த நலனையும் பெற்றுத் தரவில்லை.

எனவே, எமது உயர்ந்த பண்புகளினாலும், நற்செயல்களினாலும், நாங்கள் பயங்கரவாதிகள் அல்லர். உலகிற்கே சமாதானச் செய்தி எம்மிடம்தான் உள்ளது, அதனை அமல்படுத்தினால் உலகம் உடனே அமைதிகாணும் என்பதை அறிவார்ந்த முறையில் அறிமுகப்படுத்த அயராது பாடுபட வேண்டும்.

எதிரிகளின் கொச்சைப்படுத்தல்களினால் துவண்டுவிடாது தொடர்ந்து செல்வோம், துணிந்து பதில் அளிப்போம். வெற்றி இஸ்லாத்திற்கே!

“(ஏக இறைவனை) மறுப்போர் பூமியில் வென்று விடுவார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களின் புகழிடம் நரகம். அது கெட்ட தங்குமிடம். அல்குர்ஆன்.(24:57)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *