அஷ்ஷேக்.M. பஷீர் ஃபிர்தவ்ஸி
இபாதத்கள் நம்மீது கடமையாக்கப்பட்டதன் தலையாய நோக்கம் வணக்க வழிபாடுகளில் அல்லாஹுவை ஒருமைப்படுத்துவதாகும். மார்க்கம் நம்மீது கடமையாக்கிய ஐந்து கடமைகளும் இதனையே வலுயுறுத்துகிறது.
ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜு என்ற இபாதத்தை நிறைவேற்றக்கூடியவர்கள் இபாதத்தின் ஒவ்வொரு அசைவிலும் தவ்ஹீதையே நிலை நாட்டுகிறார்கள்.
அல்லாஹ்வின் வீட்டை தரிசிக்கக்கூடிய முஸ்லிம் அங்கே நிறைவேற்றக்கூடிய இபாதத்கள் அனைத்தையும் கலப்படமில்லாமல் அல்லாஹ்விற்காக நிறைவேற்றவேண்டும். அவனுக்கு எந்த ஒன்றையும் இணையாக்கக்கூடாது. இந்த பேருண்மையை ஹஜ்ஜின் துவக்கத்தில் தல்பியாவின் மூலம் பகிரங்கப்படுத்துகிறோம்.
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ
லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக் லப்பைக்க லா ஷரீக்க லக்க லப்பைக் இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக்க வல் முல்க் லா ஷரீக லக்.
அல்லாஹுவே ! இதோ உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன், இதோ வந்துவிட்டேன்,
இதோ நான் வந்துவிட்டேன். உனக்கு இணையேதுமில்லை, இதோ வந்துவிட்டேன்.
நிச்சயமாக புகழும், அருளும்,ஆட்சியும் உனக்கே உரியன, உனக்கு இணையேதுமில்லை.
வணக்க வழிபாடுகளின் மூலம் அல்லாஹுவை ஒருமைப்படுத்தவேண்டும். இணைவைப்பை விட்டு தூரமாகவேண்டும் என்பதை உணர்ந்தவராக ஹஜ்ஜை நிறைவேற்றக்கூடிய முஸ்லிம் இதை உரக்கச் சொல்கிறார். இன்னும் அருள்புரிவதிலும், கொடைகளை வழங்குவதிலும் அல்லாஹ் தனித்தவன் அவனுக்கு இணையில்லை, இன்னும் அவனது ஏகத்துவத்திலும் தனித்தவன், அதிலும் அவனுக்கு இணையில்லை.
அவனையன்றி வேறு யாரையும் அழைக்கக்கூடாது,வேறு யாரின் மீதும் பொறுப்பு சாட்டக்கூடாது. அவனிடமன்றி வேறு யாரிடமும் உதவி தேடக்கூடாது. இபாதத்தின் வகைகளில் எந்த ஒன்றையும் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செலுத்தக்கூடாது என்பதைத் தான் இந்த தல்பியா உணர்த்துகிறது.
அல்லாஹ்வின் தவ்ஹீதை பறைசாற்றுகின்ற மகத்துவமிக்க வார்த்தையை இஸ்லாம் அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் இணைவைப்பின் சாயல் கூட இல்லாத விதத்தில் சிறிய ,பெரிய ஷிர்க்கை விட்டு மனிதர்களை அப்புறப்படுத்துகிறது. அதே வேளையில் இணைவைப்பாளர்களும், சிலைவணக்கம் புரியக்கூடியவர்களும் ஹஜ்ஜிற்காக இஹ்ராம் அணிகின்றபோது இணைவைக்கக்கூடிய வாசகங்களைக்கொண்டு தான் தல்பியா கூறினார்கள்.
லப்பைக்கல்லாஹும்ம லப்பைக்க லப்பைக்க லாஷரீக லக இல்லா ஷரீகன் ஹுவ லக தம்லிகுஹு வமா மலக்க என்று அல்லாஹ்வோடு சேர்த்து தங்களது பொய்யான கடவுளர்களையும் தல்பியாவில் சேர்த்துக்கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள் இதைப்பற்றித்தான் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்
“அவர்களில் பெரும்பாலானவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்லை, அவர்கள் அவனுக்கு இணைவைத்தே தவிர.”
(12:106).
அல்லாஹ் தான் படைப்பாளன், உணவளிப்பவன், அனைத்தையும் நிர்வகிப்பவன் என்று நம்பிக்கைக் கொள்ளக்கூடியவர்களில் அதிகமானவர்கள் வணக்கவழிபாடுகளில் எந்த ஒன்றிற்கும் சக்திபெறாத சிலைகளை அல்லாஹ்விற்கு இணையாக்குகிறார்கள். எவ்வித நன்மையும், தீமையும் செய்வதற்கு இயலாத கற்களை அல்லாஹ்விற்கு இணையாக்குகிறார்கள்.
எவ்வித கலப்படமும் இல்லாத முறையில் ஹஜ்ஜை நிறைவேற்றி தனது ஹஜ்ஜை ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக நிறைவேற்ற விரும்புவோர்கள் தல்பியாவை கூறும்போது அதன் பொருளை உணர்ந்து தன் வாழ்க்கையில் இணைவைப்பின் எவ்வித சாயலும் இல்லாத நிலையில் தனது ஹஜ்ஜை நிறைவேற்றவேண்டும்.
ஹஜ்ஜிற்கு செல்லும் முஸ்லிம்களில் சிலர் அறியாமையின் காரணமாக அல்லாஹ்விற்கு மாபாதகச்செயலை செய்கிறார்கள். ஹஜ்ஜிற்கு புறப்படும்போதே கபருகளுக்குச்சென்று அதில் அடங்கியிருப்பவர்களிடம் பிரார்த்திப்பது, நேர்ச்சை, அறுத்துபலியிடுவது போன்ற பகிரங்கமான இணைவைப்புச் செயலை செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
இத்தகையவர்கள் ஹரமிற்குசென்று அல்லாஹுவே இதோ உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன், இதோ வந்துவிட்டேன்,
இதோ நான் வந்துவிட்டேன், உணக்கு இணையேதுமில்லை இதோ வந்துவிட்டேன்
நிச்சயமாக புகழும், அருளும்,ஆட்சியும் உனக்கே உரியன உனக்கு இணையேதுமில்லை.
என்று முழங்குவதால் என்ன பயன் இன்னும் சிலர் அல்லாஹ்விற்கு இணைதுணை இல்லை என்று ஓங்கி உரைத்து ஊர் திரும்பிய பின்னர் அல்லாஹ்விற்கு இணைவைக்கக்கூடிய காரியங்களில் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறார்கள். இத்தகையவர்கள் ஷியாக்களின் அடிச்சுவட்டை பின்பற்றி தங்களின் அமல்களை அழித்துவிடுகிறார்கள். ஏனெனில் இணைவைத்தலுடன் செய்யக்கூடிய எந்த அமலையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான்
“(இவர்கள் அனைவரும் சென்ற) இதுவே அல்லாஹ்வுடைய நேரான வழியாகும். தன் அடியார்களில் அவன் விரும்பியவர்களை அதில் செலுத்துகிறான். அவர்கள் (இதைத் தவிர்த்து அல்லாஹ்வுக்கு) இணைவைத்தாலோ அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்கள் அனைத்தும் அழிந்துவிடும்.”
(6:88)
“இறைவனின் ஒளியைக் கொண்டு பூமி பிரகாசிக்கும். (அவரவர்களின்) தினசரிக் குறிப்பு (அவரவர்கள் முன்) வைக்கப்பட்டுவிடும். நபிமார்களையும், இவர்களுடைய (மற்ற) சாட்சியங்களையும் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கிடையில் நீதமாகத் தீர்ப்பளிக்கப்படும். (அவர்களுடைய நன்மையில் ஒரு அணுவளவேனும் குறைத்தோ, பாவத்தில் ஒரு அணுவளவேனும் அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.”
(39:65).
தவ்ஹீதைப் புரியாமல் ஒருவர் ஹஜ்ஜிற்குசென்று கடமைகளை நிறைவேற்றுவதாலோ தல்பியாவை உரைப்பதாலோ அதற்காக பொருளாதாரத்தை செலவிடுவதனாலோ எவ்வித பயனுமில்லை .எனவே தல்பியாவில் மொழியும் வாசகத்தின் பொருளை உணர்ந்து அதை இணைவைப்பை விட்டு தூரமாக்கி தவ்ஹீதில் உறுதியோடு இருப்போம். இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெறுவோம்
“எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் நம்பிக்கையுடன் (இணைவைத்தல் என்னும்) அநியாயத்தையும் கலந்து விடவில்லையோ அவர்களுக்கே நிச்சயமாக பாதுகாப்பு உண்டு. அவர்கள்தான் நேர்வழியாளர்கள் (என்று கூறினார்).”
(6:82).