அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரைப் பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக!
“ஸகாதுல் ஃபித்ர் குறித்த 50 பயனுள்ள தகவல்கள்” (Click here to download the PDF book) என்ற இச்சிறிய நூலின் அரபு மொழி மூலவடிவம், கண்ணியத்திற்குரிய அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித் (ஹபிழஹுல்லாஹ்) அவர்களால் தொகுக்கப்பட்டது. இது அவர்களின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது (Click to read, Arabic source book link).
இதில் ஸகாதுல் ஃபித்ர் என்றால் என்ன? அதன் நோக்கங்கள் யாவை? என்பவை பற்றிய விளக்கங்களுடன், தற்காலத்தில் ஃபித்ரா தொடர்பாக எழக்கூடிய பல சந்தேகங்களுக்கும், புதிய விடயங்களுக்கும் சுருக்கமாகவும், அழகாகவும், தெளிவாகவும் விடையளித்துள்ளார். உண்மையில், இதில் இடம்பெற்றுள்ள 50 குறிப்புகளையும் விரிவாக விளக்குவதென்றால் அது ஒரு பெரிய புத்தகமாகவே அமையும். எனினும், மக்கள் இலகுவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இதனை 50 சுருக்கமான குறிப்புகளாக அவர் தொகுத்துள்ளார்.
எனவே, இதனை தமிழ் பேசும் சகோதரர்களும் இந்த அரிய தகவல்களைத் தங்களின் தாய்மொழியில் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதே எனது அவாவாகும்; அதன் மூலம் ரமழான் நோன்பின்போது நிகழ்ந்த சிறு பாவங்களுக்கான பரிகாரமான “ஸகாதுல் ஃபித்ரா“வை சரியான முறையில் நிறைவேற்றி, அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் உயரிய நோக்கில், அவனது உதவியால் எனது சக்திக்குட்பட்ட வகையில் இதனைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன்.
இதில் மொழியாக்கம் எனும் செயற்பாட்டுடன் சேர்த்து,
• ஒவ்வொரு தகவலுக்கும் பொருத்தமான தலைப்புகளை இட்டுள்ளேன்.
• சில விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டிய இடங்களில், அவற்றுக்கான விளக்கங்களை அடைப்புக்குறிகளுக்குள் ( ) வழங்கியுள்ளேன்.
எனவே, “ஸகாதுல் ஃபித்ர்” எனும் இக்கடமையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழியில் செவ்வனே நிறைவேற்றி, அதன் மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்ற அடியார்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக!
இவ்வண்ணம்,
உங்கள் சசோதரன்,
றஸீன் அக்பர் (மதனி)
15-03-2026
25 ரமழான் 1447
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library