Featured Posts

இந்தியாவில் இஸ்லாம்-4

ஒரு புது மதத்தின் வருகையை ஏற்றுக் கொள்வதற்கு தென் இந்தியாவில் நிலவியிருந்த சாதமான சூழ்நிலை.

எ) ஆதிமக்கள்: இன்றைய கேரளம் உட்பட, மண்டைய தமிழகத்தில் ஆதிகுடிமக்கள் எனப்படுபவர்கள் இன்று நம் அரசால் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மக்களும் இன்று காடுகளில் தங்கிவரும் மலைவாசிகளுமாவார்கள். ஆதி திராவிடர்கள் என அழைக்கப்படுபவர்கள் இவர்களே ஆவர். மதங்களின் வருகைக்கு முன் இவர்களுக்கிடையில் ஒரு ஆட்சி முறையோ, சமூக சட்ட வரம்புகளோ யாதும் இல்லாமலிருந்தது. கேரளப் பகுதியை பொறுத்த மட்டில் செல்வாக்கு வாய்ந்த நாயர் வகுப்பினருக்குக் கூட எந்தவிதமான மதமும் இல்லாமதிருந்தது.

ஆரியர்கள் எனப்படுபவர்கள் வெளியே இருந்து இப்பகுதிக்கு வரும்முன் இங்குள்ள மக்கள் சடலங்களை புதைத்தே வந்தனர். இப்ராஹீம் நபிக்குப் பின் அராபியர் மத்தியில் நடைமுறையில் இருந்து வந்த “சுன்னத்” முறையை இங்குள்ள ஆண்களும் பின்பற்றி வந்ததாக ‘கேரளா மகா சரித்திரம்’ என்ற நூலின் முதற்பாகத்தில் பய்யம்பள்ளி ‘கோபால குறுபு’ குறிப்பிட்டுள்ளார். (சேரமான் பெருமகன் – கே.கே. அப்துல் கரீம், பக்கம் 77) மதத்தை இங்குள்ள மக்கள் மத்தியில் திணிப்பதற்கு முன் இம்மக்களுக்கு இந்து மதக் கொள்கை என்னவென்றுகூட தெரியாத நிலை.

இப்பகுதியில் வாழ்ந்திருந்த திராவிட மக்கள் நீர் வழங்கும் நதிகளையும், உணவுக் குண்டான பலனளிக்கும் மரங்களில் குடிகொள்ளும் சக்திகளையும் நன்றியுடன் வணங்கி வந்தனர். நோய் நொம்பலங்களை வழங்கும் பேய் பிசாசுகளை ஆடிப்பாடி திருப்திப்படுத்தினர். இப்பவும்கூட சில வகுப்பினர் சில கோவில்களுக்கு முன் கொடைவிழா நாட்களில் ஆட்டம் போடுவதைக் காணலாம். ஆலமரங்களில் தெய்வம் குடிகொண்டிருப்பதாக நம்பி ஆலமரங்களையும் வணங்கி வந்தனர். இன்று கூட பல பகுதிகளில் கோவில் முன்பகுதியில் ஆலமரங்கள் வளர்க்கப்படுவதும், அதை வலம் வந்து பக்தியுடன் வணங்குவதையும் நாம் காண்கிறோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை கணபதி பூஜை இங்கு நடந்ததில்லை என்று ஏ. சீதரமேனான் தமது ‘கேரள வரலாறு’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் (பக்கம் 85). கி.பி. ஆறாவது நூற்றாண்டு வரை திராவிட வணக்க முறைகளும், பழக்கவழக்கங்களுமே இங்கு இருந்து வந்ததாக சங்க இலக்கியங்களிலிருந்து தெரிய வருகிறது. ஆனால் இவையாவும் எந்த வித மத கோட்பாடுகளின் அடிப்படையில் செய்துவந்த வணக்கமல்ல.

“சங்க காலத்தில் வாழ்ந்திருந்த மக்களில் பெரும்பான்மையோருக்கு கி.பி.500 வரை தனிமதம் எதுவும் இல்லை. ‘கொற்றவை’ என அழைக்கப்படும் பொர் தேவதையை (திராவிட துர்க்கை) விருப்பமுடன் வழிப்பட்டு வந்தனர்” (ஏ. சீதரமேனோன் – கேரள வரலாறு, பக்கம் 82)

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சமண மதமும் புத்த மதமும் இப்பகுதியில் பரவிவிட்டன. ஆனால் இங்குள்ள ஆதி குடிமக்களை அம்மதங்களால் கவர முடியவில்லை. அம்மதங்களைப் பின்பற்றி வந்த மக்களையும், அம்மதங்களையும் மிக சகிப்புத்தன்மையுடன் இங்குள்ள மக்கள் பார்வையிட்டனர்.

ஆரியர்கள் வரும் முன் இங்கு வாழ்ந்திருந்த விராவிட மக்கள் தங்களுக்கே உரிய ஓர் ஆட்சி முறையை அமுல்படுத்தி தனி நாட்டை அமைத்து, சுற்றிலும் கோட்டைகளையும் கட்டினர். திருவனந்தபுரத்தில் உள்ள ‘புலயனார்’ கோட்டை மலபார் பகுதியில் ஏறநாட்டில் உள்ள கண்ணன் பாறையும் கும்மிணிப் பாறையும் இம்மக்கள் கோட்டை கட்டி ஆட்சிபுரிந்து வந்த இடங்களில் சில ஆகும்.

ஆரியர்கள் இங்கு செல்வாக்கு பெறுவதற்கு முன் இங்குள்ள மக்களுக்கிடையே ஜாதி முறை இல்லவே இல்லை. இன்று காணப்படும் ஜாதிப்பிரிவுகள் எட்டாவது நூற்றாண்டிற்குப் பிறகுதான் தோன்றின.

தொடரும்..

மக்கள் உரிமை வாரஇதழ் : செப் 16 – 22, 2005

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *