இரண்டாவது கட்டம்: முடியாட்சியும் விளைவுகளும்
இஸ்லாமிய வரலாற்றில் முதற்கட்டத்தில் இஸ்லாம் விரிந்து பரந்தது. நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளில் இஸ்லாம் உலகின் நிலப்பரப்பில் பெரும் பகுதியைத் தனது ஆதிக்கத்திற்குள் கொணர்ந்தது. அத்துடன் பெருந்தொகையான மக்களும் இஸ்லாத்தின் கொடியின் கீழ் ஒன்று திரண்டனர். இஸ்லாத்தின் முதற்கட்டத்தின் பிரதிநிதிகளாக அமைந்தவர்கள், இஸ்லாத்தின் உண்மையான நோக்கத்தை உணர்ந்து அதனைத் தம் சொல்லிலும் செயலிலும் எடுத்துக் காட்டியவர்களாவர். இம்மனிதப் புனிதர்களின் உயர் பண்பாலும், பண்பட்ட நடத்தையாலும் கவரப்பட்டு முஸ்லிமல்லாத இலட்சோப லட்சம் மக்கள் இஸ்லாமியக் கொடியின் நிழலில் ஒன்று கூடினர். முஸ்லிம்களுடன் சேர்ந்து கொள்ள ஆவல் கொண்ட இம்மக்களை முஸ்லிம்கள் அன்பு கரம் நீட்டி வரவேற்று, தம்மோடு சரிநிகர் சமானமானவர்களாகச் சேர்த்துக் கொண்டனர். “உண்மையான சன்மார்க்கத்தை ஏற்று தழுவிக் கொள்வதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக விரைந்து வருவதை நீர் காணும் நாள் வெகு தூரத்தில் இல்லை” என்ற குரான் வசனத்தை நினைவு கூர்ந்த பெருமக்களுக்கு இக்காட்சி பேருவுவகையூட்டியது. முஸ்லிம்களின் இராணுவ வெற்றிகளை விட மிக்க மகத்துவம் வாய்ந்த இவ்வெற்றி இஸ்லாத்தின் வெற்றியேயாகும்.
எனினும் இது சில பிரச்சினைகளை உருவாக்கிற்று. இஸ்லாத்தினால் தம் வாழ்க்கையை பரிபூரணமாக மாற்றியமைத்துக் கொண்ட தொடக்க கால முஸ்லிம்களை புதிதாக வந்தவர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களுக்கு ஊக்கம் அளித்து வழிகாட்டிய நபிமணி(ஸல்) அவர்களதும் அன்னாரைத் தொடர்ந்தவர்களதும் ஒளிமயமான முன்மாதிரி புதியவர்களுக்கு கிட்டவில்லை. தொடக்க கால முஸ்லிம்கள் பெற்றிருந்த மும்முரமான இஸ்லாமிய வாழ்க்கைப் பயிற்சியும் புதியவர்களுக்கு கிடைக்கவில்லை. அவர்கள் இஸ்லாமிய உணர்வை அரை குறையாகவே பெற்றிருந்தனர். பெருந்தொகையான மக்களிடையே அது பரவத்தொடங்கியதும் அவ்வுணர்ச்சி கரைந்து வலுவிழந்தது. இந்நிலையின் தவிர்க்க முடியாத விளைவாக, இஸ்லாமிய இலட்சியம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அதன் சடப் பொருள் சக்தியும் இராணுவ புகழுமே, புதிய சந்ததியினரின் வியப்புக்கும் போற்றுதலுக்கும் உரியதாயின. இஸ்லாத்தின் உண்மையான பெருமை மறைந்து விட்டது. வெற்றி கொண்ட பிரதேசங்களில் தம் ஆட்சியை நிலைபெறச்செய்வதிலும் அவற்றை நிர்வகிப்பதிலும் ஏற்பட்ட பிரச்சினைகளின் மீது மக்கள் அதிக கவனம் செலுத்தினர். இதன் காரண்மாக, முஸ்லிம் சமூகத்தில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு மாற்றம் நிகழலாயிற்று.
தமது விருப்பப் படி இஸ்லாத்தைத் தழுவியவர்களும் இஸ்லாத்தின் போதனைகளை அரைகுறையாகப் புரிந்து கொண்டவர்களுமான புது முஸ்லிம்களின் எண்ணிக்கை அணை கடந்த வெள்ளம் போல் பெருகி கொண்டேயிருந்தது. அதே வேளை, இஸ்லாமிய அறிவினை அதன் ஊற்று கண்ணிலிருந்தே பெற்று, அதன் கருத்தைத் தீர்க்கமாக விளங்கிக் கொண்டிருந்தோரின் எண்ணிக்கை அருகத் தொடங்கியது. அரசியல் அதிகாரம், இஸ்லாமிய அச்சில் வார்க்கப் படாத பண்புகளைப் பெற்றிருந்தவர்களின் கைகளில் சிக்கிற்று. இதன் பயனாக அரசாட்சி முறையில் அடிப்படையான மாற்றம் ஏற்பட்டது. கிலாபத் ஆட்சியின் இடத்தில் முடியாட்சி அமர்த்தப் பட்டது.
முடியாட்சியின் வெற்றிக்கான காரணங்கள்
முதல் நான்கு கலீபாக்களின் காலப் பிரிவிற்குப் பின்னர் முஸ்லிம் இராஜ்ஜியத்தை அரச பரம்பரையினர் ஆளத் தொடங்கினர். ஆட்சி முறையில் இத்தகைய மாற்றம் ஏற்பட பல காரணங்கள் ஏதுவாயின. அது இஸ்லாத்திற்கு ஒவ்வாத ஒரு மாற்றமாகும். இம்மாற்றத்திற்கான முக்கிய காரணம் இஸ்லாத்தின் வெளித் தோற்றமான