Featured Posts

இந்தியாவில் இஸ்லாம்-6

தொடர்-6 : தோப்பில் முஹம்மது மீரான்

ஆரியர்களுடைய வருகை

புத்த மதமும் சமண மதமும் இங்கு செல்வாக்கைப் பெற்றிருந்த போது மிக சிறுபான்மையினராக இருந்த ஆரியர்களின் தந்திரங்கள் எதுவும் இங்கு பலிக்கவில்லை. பிறகு வடபகுதிகளிலிருந்து ஏராளமான ஆரியர்கள் கூட்டம் கூட்டமாக வரவழைக்கப்பட்டனர். இவர்களுடைய வருகையால் இங்குள்ள ஆரிய சக்தி வலுப்பெற்றது.

முதலில் தங்களை வலிமைப்படுத்திய பின் ஆரியர்கள் அன்றைய ஆட்சியாளர்களை சூசகமாக அணுகி ஆட்சியாளர்களுக்கு ஆரிய வழக்கப்படி பல பட்டங்கள் நல்கி கவுரவித்தனர். இப்பட்டங்களின் பெருமையில் தம்மை பறிகொடுத்த ஆட்சியாளர்கள், ஆரியர் பக்கம் சாயத் தொடங்கினர்.

அதற்கு அடுத்தபடியாக, வணிகத்தில் ஈடுபட்டிருந்த மக்களை அணுகி ‘அரசரின்’ அடுத்தபடியான ‘வணிகர்’ பதவியை வழங்கினர். அப்படி முதல் படியாக ஆட்சியாளர்களையும், வணிகர்களையும் இருகூறுகளாகப் பிரித்தனர். அரசர் என்றும், வணிகர் என்றும், பிறகு இவ்விரு தரப்பினரையும் கொண்டு தங்கள்(ஆரியர்கள்) இவ்விருவரையும் விட உயர்வானவர்கள் என்று சம்மதிக்க செய்தனர். இவ்வாறு, முதல் தரமாக ‘பிராமணர்’, பிராமணருக்குப் பின் ‘அரசர்’, அரசருக்குப்பின் ‘வணிகர்’ – இப்படி ஜாதி முறை அற்ற சமுதாயத்தை முக்கூறு போட்டபின் ஆட்சிப் பொறுப்பில் இல்லாதவர்களையும் வணிகத்தில் ஈடுபடாதவர்களையும் தாழ்ந்த வகுப்பினராக கருதத் தூண்டினர்.

ஜாதி முறையற்ற பண்டைய தமிழகத்தில் ஜாதிப் பிரிவினை செய்வதில் முதல் முறையாக வெற்றி கண்டனர். இது ஆதி சங்கராச்சாரியாருக்கு முன் நடந்த முதல் ஜாதி பிரிவினையாகும். சங்க கால சமுதாயத்தில் மேல் பதவியை அடைந்திருந்த பாணர், வேடர், குறவர் போன்ற உழைக்கும் வர்க்கத்தினர் அடிமட்ட மக்களாக கருதப்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட்டனர். இந்த திருப்பு முனையில் இருந்துதான் இந்து மதம் இங்கு போதிக்கப்பட்டதும் வளர்க்கப்பட்டதும்.

நாட்டின் ஆட்சித் தலைவர்களையும், வணிகர்களையும் தம் வசப்படுத்திய பின் ஆரியர்களின் அடுத்த நடவடிக்கை, தாழ்த்தப்பட்டவர்களாக தள்ளி வைத்திருந்த மக்கள் நம்பிவந்த சமண – புத்த மதங்களை எதிர்த்து வேருடன் பிடுங்கி எறியும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

“ஆரிய மத பிரச்சாரகர்கள் (மிஷினரி) புத்த சிலைகளையும், புத்த கோயில்களையும் இடித்து தரைமட்டமாக்கும் கொள்கையை கடைப்பிடித்தனர்.” (கேரள வரலாறு: ஏ. ஸ்ரிதரமேனோன் பக்கம் 94)

“ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் கேரளத்தைப் பார்க்க வந்திருந்த பொழுது பவுத்தம் வீழ்ச்சி அடைந்திருந்தது. பவுத்தப் பள்ளிகள் அழிந்து கிடந்தன. அவற்றில் இந்துக் கோயில்கள் இடம் பெற்றன.” (தென்னிந்திய வரலாறு: டாக்டர் கே.கே.பிள்ளை, பக்கம் 107-108)

சமண புத்த மதங்களை கடுமையாக எதிர்த்தனர். அவற்றை நம்பி வந்த மக்களை கொலை செய்து குவித்தனர். நாடெங்கும் ரண ஆறு பெருக்கெடுத்தது. சமண பஸ்தி (கோயில்)களையும் புத்த மடாலயங்(கோயில்)களையும் அங்குள்ள புத்தர் சிலைகளையும் உடைத்து அங்கஹீனப்படுத்தி தெருக்களில் வீசினர்.

கேரளாவில் உள்ள கருமாடி, பள்ளிக்கல் முதலிய இடங்களிலும் (நம் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலிருந்தும் இவ்வாறு) நாசம் செய்யப்பட்ட புத்தர் சிலைகளை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர். (இப்படி தோண்டி எடுக்கப்பட்ட சிலைகளை பிற்கால வரலாற்றாசிரியர்கள் திப்புசுல்தான் சேதப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.)

முசிறி என்றும், மாகோதை என்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கொடுங்கல்லூரில் தான் நீசத்தனமான கொலைகள் பெருமளவில் நடந்தன. வரலாற்றில் திடுக்கிடச் செய்யும் இப்படுகொலை நிகழ்ச்சிக்குப் பிறகுதான் அந்த இடம் ‘கொடும் கொலையூர்’ என்ற பெயரில் புகழ்பெற்றது நாளடைவில் அது கொடுங்கல்லூர் என்று மருவியது. (சேரமான் பெருமாள்: கே.கே. அப்துல் கரீம்.) இவ்வூருக்கு ‘அல்லூர்’ என்ற பெயருமுண்டு. இப்படுகொலைக்குப் பிறகு ‘கொடும் கொலை அல்லூர்’ என்றது கொடுங்கல்லூர் என்றும் மருவியிருக்கலாம்.

இப்பொழுது கொடுங்கல்லூரில் உள்ள பகவதி கோயிலில் ஒவ்வொரு வருடமும் ‘பரணி பாட்டு’ (மிகவும் கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளால் இயற்றப்பட்ட கவிதை பாடுதல்) என்ற புகழ்பெற்ற கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளைக் கொண்டு புனையப்பட்ட பாட்டு பாடுவதும், கோழிகளை பலியிட்டு இரத்தம் ஊற்றுவதும் இப்படுகொலைகளை நினைவுபடுத்தும் சடங்காகும்.

“அவர்கள் (சங்கராச்சாரியாரும் தோழர்களும்) சதுற்வர்ணத்தை அடிப்படையாகக் கொண்ட பிராமண மதத்தை தத்துவ ரீதியாக சேர நாட்டில் பரப்பினர். சமண மதத்தின் வேரை முதலில் பிடுங்கி எறிந்தனர். அதற்கு அவர்கள் கைக்கொண்ட வழி பாராட்டுக்குரியதாக இல்லை. அவ்வழிகளை பிரதிபலிப்பது கேரளத்தில் சில கோவில்களில் (கொடுங்கல்லூர் முதலிய) உற்சவத்தை ஒட்டி நடத்திவரும் சடங்குகளில் காணப்படுவது” (டி.எச்.பி. செந்தாரச்சேரி: ‘கேரள சரித்திர தார’ பக்கம் 136)

கிறித்தவர்களும் யூதர்களும் வந்து முதலில் தங்கியது கொடுங்கல்லூரிலாகும். இதைப் போல் ஆரியர்களும் முதலில் வந்து தங்கியதும் இங்குதான். கொச்சி – வியாபார மையமாக மாறுவதற்கு முன் சேர நாட்டின் தலைநகராகவும், வியாபாரக் கேந்திரமாகவும் கொடுங்கல்லூர் விளங்கிவந்தது. மட்டுமின்றி இது ஒரு துறைமுகமும் கூட. அதனால்தான் அராபியர் உட்பட வெளியிலிருந்து வந்தவர்கள் எல்லாம் கொடுங்கல்லூரை தங்கள் தங்குமிடமாகத் தேர்வு செய்தனர்.

“அவர்கள் (அராபியர்) நகரின் (கொடுங்கல்லூர்) ஒரு பகுதியில் சொந்தமாக ஒரு இடத்தை அமைத்துக் கொண்டார்கள். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலோ எட்டாம் நூற்றாண்டிலோ இஸ்லாம் மார்க்கத்தை இங்கு பிரச்சாரம் செய்தது இந்த அராபிய வியாபாரிகளாக இருக்கலாம். கிறித்துவ மதத்துடன் ஒப்பிடும்போது இஸ்லாம் மார்க்கத்தின் வளர்ச்சி மிக மந்தமாகவே இருந்தது.”

தொடரும்…

மக்கள் உரிமை | செப் 30 – அக் 06, 2005

One comment

  1. அஸ்ஸலாமு அலைக்கும் ,
    அபி வக்காஸ்(ரலி) அவர்கள் கூட இந்தியாவில் தான் அடக்கம் செய்யப்பட்டு உள்ளார்கள் என்று கூறுகிறார்களே அது உண்மையா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *