2. “விவாக ஹோமமும்” “சப்தபதியும்”
எதிர்
மராட்டிய அரசு
AIR 1965 SC 1566
பாவ்ராவ் லோகாண்டே தமது முதல் மனைவியுடனான திருமணப் பந்தம் நீடிக்கையிலே இரண்டாவது திருமணம் புரிந்து கொண்டார். ஆத்திரம் அடைந்த அவரது முதல் மனைவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் லோகாண்டே மீது கிரிமினல் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றத்தில் அந்தப் பெண்மணி அளித்த வாக்குமூலத்தில்,
“என் கணவரது இரண்டாவது திருமணம் எங்கள் பகுதியில் நடைமுறையில் உள்ள கந்தர்வ முறைப்படி நடந்தது. இத்திருமணத்தில் மரத்தினால் செய்யப்பட்ட அமரும் பலகையில் மணமக்கள் அமர்வார்கள். ஒரு செம்பு குவளையில் தாம்பூலமும், தேங்காயும் கொண்டு வரப்படும். வேதங்கள் முழங்க, மணமக்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மாலை சூடிக்கொள்வார்கள். பரஸ்பரம் நெற்றியை முட்டிக் கொள்வார்கள். மணமகளின் தந்தை அல்லது தாய்மாமன் நெற்றிகள் முட்டிக்கொள்ளும் சடங்கிற்கு உதவியாக இருப்பார்கள். இத்துடன் கந்தர்வ திருமணம் நிறைவு பெறும்” என்று கூறினார்.
கந்தர்வ முறைப்படி நடந்த இரண்டு திருமணங்களில் கலந்து கொண்ட ஒருவர் இவ்வழக்கில் சாட்சியாக விசாரிக்கப்பட்டார். அவர் சாட்சியம் கூறும்போது: “முன்பெல்லாம் அருகாமையிலுள்ள கஸாரா அல்லது தர்தானா பகுதியிலிருந்து ஒரு பிராமண பூசாரி வந்திருந்து மங்களநாண் வழங்குவார். கந்தர்வ திருமணத்திற்கு ஒரு தாக்கூர், ஒரு பிராமணர் மற்றும் ஒரு நாவிதர் வருவது அவசியம் என்று கருதப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் அருகாமையிலிருந்து ஒரு தாக்கூரையும், ஒரு பிராமணரையும் அழைத்து வருவது என்பது கடினமானதாகவும், அதிகச் செலவு பிடிப்பதாகவும் ஆகிவிட்டது. எனவே நாவிதரின் உதவியுடன் மட்டுமே இப்போது திருமணங்கள் நடக்கின்றன” என்று விளக்கினார்.
கந்தர்வ முறை உட்பட எந்த முறைப்படியும், முதல் மனைவி இருக்கையிலே இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தனது கணவர் குற்றவாளிதான். இந்து திருமணத்தின் அனைத்து சடங்குகளும் நிறைவேற்றப்பட்டதாக நிரூபிக்கப்படாவிட்டாலும், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தன் கணவர் குற்றம் இழைத்தவரே என்று லோகாண்டேயின் முதல் மனைவி வாதிட்டார். இவ்வாதத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்த மாஜிஸ்திரேட், லோகாண்டேவுக்கும் அவரது இரண்டாவது மனைவிக்கும் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
இத்தீர்ப்பை எதிர்த்து லோகாண்டே செசன்சு நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். செசன்சு நீதிமன்றம் மாஜிஸ்திரேட் வழங்கிய தீர்ப்பை ஆமோதித்தது. பம்பாய் உயர்நீதிமன்றத்தில் லோகாண்டே மேல் முறையீடு செய்தார். அங்கும் அவருக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. மனம் தளராத அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 1955-இல் இந்துச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு அச்சட்டத்தின் கீழ் பலதாரமணம் எவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது என்பதை விளக்குவதற்காக முதல் முறையாக இவ்வழக்கின் மூலம் தான் உச்சநீதிமன்றத்திற்கு வாய்ப்பு கிடைத்தது. எனவே நாட்டு மக்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அறிய ஆவலாக இருந்தனர். மாஜிஸ்திரேட், செசன்சு மற்றும் உயர்நீதிமன்றங்களில் மூக்குடைபட்ட தனது கணவர் உச்சநீதிமன்றத்திலும் தோல்வியுறப்போகிறார் என்று லோகாண்டேயின் முதல் மனைவி ஆவலுடன் காத்திருந்தார்.
இருதரப்பு வழக்கறிஞர்களின் விரிவான வாதத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பை வழங்கியது. கீழ் நீதிமன்றங்கள் இவ்வழக்கில் வழங்கிய தீர்ப்புகளை தள்ளுபடி செய்து இரண்டாம் திருமணம் என்பது நடக்கவேயில்லை, எனவே லோகாண்டே குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்.
தந்தர்வ முறைப்படி நடைபெற்ற இரண்டாவது திருமணம் சட்டவிதிகளின் படி நடக்கவில்லை. எனவே அதனைத் திருமணமாக அங்கீகரிக்க முடியாது. எனவே இரண்டாவது திருமணம் செய்து கொண்ட குற்றத்தை லோகாண்டே இழைக்கவேயில்லை என்று கூறி இந்துச் சட்டத்திற்கு விளக்கமளித்தது உச்சநீதிமன்றம்.
முல்லாவின் இந்துச் சட்டம் (12ஆம் பதிப்பு) என்ற நூலை அடிப்படையாகக் கொண்டே உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. இந்தச் சட்ட நூல் கந்தர்வ திருமணம் குறித்து இப்படிக் கூறுகின்றது.
“கந்தர்வ திருமணம் என்பது ஒரு வாலிபனும் இளம் மங்கையும் தமது காதல் மற்றும் சிற்றின்ப உணர்வுகளின் காரணமாக தாமாகவே முன்வந்து செய்யக்கூடிய ஒன்றாகும். கூடா உறவு என்று தவறுதலாக இத்திருமணம் வர்ணிக்கப்படுகின்றது. ஸ்மிருதிகளின் முக்கிய நூல்களைத் தவறுதலாக விளங்கிக் கொண்டதால் இக்கருத்து நிலவுகின்றது.
(ஒரு குறிப்பிட்ட ஜாதியில் அல்லது சமுதாயத்தில் திருமணச்சடங்குகளில், மாற்றங்கள் – பழக்க வழக்கங்களின் (CUSTOMS) காரணமாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதை நிரூபிக்காத வரையில்) மற்ற எந்தவொரு திருமணத்தின் போதும் நிறைவேற்றப்படும் அத்தியாவசியமான சடங்குகள் கந்தர்வ திருமணத்தின் போது செய்யப்பட்டாக வேண்டும்”
முல்லாவின் நூலை மேற்கோள் காட்டிவிட்டு ஒரு இந்துத் திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்படுவதற்கு இரண்டு சடங்குகள் இன்றியமையாதவை என்று உச்சநீதிமன்றம் அடையாளம் காட்டியது.
1) விவாகஹோமம் ஓதுவது,
2) சப்தப்பதி. (சப்தப்பதி என்பது மணமகன் முன் செல்ல மணமகள் பின் தொடர நெருப்பைச் சுற்றி ஏழு முறை வலம் வருவது. உணவு, உடல்நலம், செல்வம், நட்பு, பாலுறவு, குழந்தை மற்றும் மகிழ்ச்சி ஆகிய ஏழு நற்பேறுகளுக்காக ஏழு முறை வலம் வருகின்றனர்.)
இதன் பிறகு உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில்-
கந்தர்வ திருமணத்தின் போது பிராமணரின் உதவியுடன் செய்யப்படும் சில சடங்குகளை இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் சமூகத்தினர் கைவிட்டு விட்டதாக முதல் மனைவி தரப்பில் வாதிடப்பட்டது. இதன் காரணமாக ஹோமமும், சப்தப்பதியும் கூட நிறைவேற்றப்பட்டதாகக் கூற முடியாது கணவரும் இரண்டாவது மனைவியும் புரிந்த சடங்குகள் மட்டும் இத்திருமணத்தை அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகக் கருதுவதற்கு போதுமானது அல்ல. ஓர் ஆணும் பெண்ணும் கணவன்-மனைவியாக சமுதாயத்திற்கு முன்னர் காட்சி அளித்தாலும், சமுதாயமும் அவர்களை கணவன் மனைவியாக ஏற்றுக் கொண்டாலும், அவர்கள் உண்மையிலேயே கணவன்-மனைவியாக வாழ்க்கை நடத்தினாலும் கூட இந்தக் காரணங்களினால் மட்டும் அவர்கள் சட்டத்தின் முன் கணவன்-மனைவி என்ற தகுதியைப்பெற இயலாது என்று கூறி, லோகாண்டேக்கு இரண்டாவது திருமணம் நடைபெறவேயில்லை. எனவே அவர் நிரபராதி என்று அறிவித்தது. இஸ்லாத்தைத் தழுவாமல் இரண்டாம் திருமணம் புரிந்து அதே நேரத்தில் சட்டத்தின் பிடியிலிருந்தும், பல மனைவிகளைப் பராமரிக்கும் பெரும் பொருளாதாரச் சுமையிலிருந்தும் தப்பிக்க எளிய வழியை இந்து ஆடவர்களுக்கு உச்சநீதி மன்றம் இத்தீர்ப்பு மூலம் காண்பித்துள்ளது.
இரண்டாம் திருமணத்திற்கு ஊரார் அனைவரையும் அழைக்கலாம், பிரமாண்டமான மண்டபத்தில் திருமணம் நடக்கலாம், அறுசுவை விருந்து உபசாரமும் நடைபெறலாம், ஆனால் ஒன்றே ஒன்றில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். விவாக ஹோமமும் சப்தப்பதியும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இப்படிச் செய்தால் இந்து என்று சொல்லிக்கொண்டு எத்தனை திருமணமும் புரியலாம் நாட்டை ஆளும் பொறுப்புக்குக் கூட வரலாம்!
சடங்குகள் ஒருபுறம் இருக்கட்டும். ஒரு இந்து ஆடவரது முதல் திருமணப்பந்தம் நீடிக்கையில் அவரை இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணே நீதிமன்றத்தில் தனக்கும் இந்த ஆடவருக்கும் திருமணம் நடைபெற்றது என்று வாக்குமூலம் கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்படிப்பட்ட சூழலில் இந்துச் சட்டத்தை மீறி இரண்டாம் திருமணம் புரிந்த இந்து ஆடவர் தண்டிக்கப்படுவாரா? உச்சநீதிமன்றம் என்ன சொல்கின்றது?
(தொடரும்..)
– பேராசிரியர் இ.அருட்செல்வன்
நன்றி: நீதிமன்றங்களின் பார்வையில் பலதாரமணம்
புத்தொளி வெளியீட்டகம்
முதல் பதிப்பு: ஜுன் 1997
புத்தகம் கிடைக்கும் இடம்:
ஸாஜிதா புக் சென்டர்
204 தம்புச் செட்டித் தெரு, 2-வது மாடி
சென்னை – 600 001