Featured Posts

இந்தியாவில் இஸ்லாம்-10

தொடர்-10: தோப்பில் முஹம்மது மீரான்

மேதை அல்பிருணியின் இந்திய வருகையும் – சர்ச்சையும்

இஸ்லாம் உலகில் வேருன்றி இரு நூற்றாண்டுகள் கடந்த பின் இந்தியாவிலாகட்டும் உலகின் வேறு எந்தப் பகுதிகளிலாகட்டும், பயணம் செல்லும் அரபு நாட்டைச் சார்ந்த ஒரு முஸ்லிமுக்கு, ஒரு முஸ்லிமுடைய தோற்றம் எவ்வாறு இருக்குமென ஒரு முன்மதிப்பீடு இருக்கும். அதற்கு நேர் மாற்றமாக இருப்பின் முஸ்லிம் அல்லவென்று கருதப்படுவது இயல்புதானே. இன்று கேரளாவையோ, தமிழ்நாட்டையோ சார்ந்த, உருதுமொழி பேசத் தெரியாத முஸ்லிம் ஒருவர், வேட்டி கட்டிக் கொண்டு தொப்பி அணியாமல் வடமாநிலம் ஒன்றுக்கு செவ்வாரேயானால் அங்குள்ளவர்கள் இவரை ஐயப்பாடோடுதான் நோக்குவார்கள் என்ற துக்ககரமான உண்மையை யாரறிவார்.

மாலிக்காபூர், மதுரையை நோக்கி படையுடன் வரும் வழியில் கண்ணனூர் என்ற இடத்தில் தமிழ் முஸ்லிம்களை சந்திக்கிறார். தாங்கள் முஸ்லிம்கள் என்று கூறியபோதும், தோற்றத்தில் தென்பட்ட சந்தேகத்தால் முஸ்லிம்கள் என்று அவரால் நம்ப முடியவில்லை. பிறகு ‘கலிமா’ பலமுறை சொல்ல வேண்டினார். முஸ்லிம்கள் கலிமா பலமுறை சொல்லி கேட்ட பிறகுதான் முஸ்லிம் என்று நம்பிக்கைக் கொண்டார். இருந்தும் அம்முஸ்லிம்களை அரை முஸ்லிம் (Half-Mussalman) என்றே அமீர் குஸ்று குறிப்பிடுகிறார்.

கி.பி.1311ல் இது நடந்தது. இதற்கும் ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் இங்குள்ள முஸ்லிம்களின் தோற்றம் எவ்வாறு இருந்திருக்கக் கூடுமென்று ஊகிக்கலாமே?

கஜனி முஹம்மதுடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வந்து 40ஆண்டுகள் இங்கு தங்கி, இந்தியாவைப் பற்றி தெரிந்தவர் அல்பிருணி (கி.பி.973-1048) என்ற மேதை. அவருடைய ‘அல்பிருணி பார்த்த இந்தியா’ என்ற நூலில் கேரளாவைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“மலபார்: கோவா முதல் கொல்லம் வரையிலுமாகும். அதன் நீளம் 300 பர்சக் (1பர்சக் 3 அரை மைல்) மலபாரிலுள்ள முக்கிய நகரங்களான கோவா, பாக்கனூர், மங்கலாபுரம், ஏழிமலை, பந்தலாயினி, கொடுங்கல்லூர் முதலிய இடங்களிலுள்ள மக்களெல்லாம் புத்த மதத்தினராவார்கள்…” (பயணிகளும் வரலாற்று ஆசிரியர்களும் – வேலாயுதன் பணிக்கச்சேரி பாகம் 1 பக்கம் 103-104)

கி.பி.943ல் வந்த “மசூதி” கொங்கணியில் உள்ள சவுன் நகரத்தில் 10,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்திருந்ததாகக் கூறுகிறார். ஆனால் அவருக்குப் பின் வந்த அல்பிருணி, அப்பகுதிகளில் முஸ்லிம்களே இல்லை என்று கூறுகிறார். இவற்றில் எதை ஏற்றுக் கொள்ள முடியும்?

ஹிந்து மதம் கேரளாவில் அதன் முழு வளர்ச்சியடைந்த காலமாகும். பத்து மற்றும் பதினொன்றாம் நூற்றாண்டுகள். புத்த மதம் நலிந்து போன காலமது. இருந்தும் அல்பிருணி மலபாரில் உள்ளவர்களெல்லாம் புத்த மதத்தினர் என்று குறிப்பிட்டதை ஏற்று ஏதேனும் வரலாற்று ஆசிரியர் இவருடைய கூற்றின்படி கொல்லம் முதல் கோவா வரையிலும் பரந்து கிடக்கும் பகுதிகளில் ஹிந்துக்களோ, கிறிஸ்தவர்களோ, யூதர்களோ, முஸ்லிம்களோ இல்லை என்று குறிப்பிடவில்லையே. பிற்கால வரலாற்று ஆசிரியர்களும் பிருணியுடைய இக்கூற்றுக்கு எந்த விலையும் கற்பிக்கவில்லையே.

சில வேளை அல்பிருணி குறிப்பிட்டுள்ள மலபார் பகுதிகளுக்கு அவர் விஜயம் செய்திருக்க மாட்டார். யாரிடமிருந்தேனும் கேட்டுத்தெரிந்து கொண்ட அறிவை வைத்து எழுதியிருக்கக் கூடும். இல்லை, வடபகுதியில் தாம் பார்த்த முஸ்லிம்களைப் போலல்லாமல், தலைமுண்டனம் செய்து மேல் துண்டால் உடம்பைப் போர்த்தி திரிந்த முஸ்லிம்களைப் பார்த்து புத்த மதத்தினர் என்று தவறாக எண்ணி அப்படி எழுதியிருக்கலாம். அல்பிருணி எழுதியதுதான் உண்மை என்ற முடிவுக்கு வருவோமேயானால் 11-ம் நூற்றாண்டு வரையிலும் மலபார் பகுதிகளில் புத்த மதத்தினனர்களைத் தவிர முஸ்லிம்களோ பிற மதத்தினரோ இல்லை என்றுதானே அர்த்தம்(?)

இஸ்லாம் மேற்கு கிழக்கு கடற்கரைகளில் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நிசப்தமாகவும், பல ஆண்டுகளுக்குப் பின் (கி.பி.712) சிந்து மார்க்கமாக ஓசை எழுப்பிக் கொண்டும் இந்தியாவுக்குள் நுழைந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். காலோசையின்றி இஸ்லாம் இங்கு பிரவேசித்தது யார் கவனத்தையும் ஈர்க்கவில்லை. அதுவன்றி, திட்டமிட்டே இந்த ‘பிரவேசிப்பை’ மூடிமறைத்தனரோ?

கி.பி.712ல் முகம்மது இபுனு காசிமும் அவருக்கு முன் உமர் இபுனு கத்தாப்(ரலி) அவர்கள் காலத்தில் (634-643) தானா பகுதியில் கப்பலில் இறங்கியவர்களையும் வரலாற்று ஆசிரியர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இஸ்லாம் இந்தியாவின் தென்பகுதியில் கடற்கரை நகரங்களில் நெடுகிலும் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வடபகுதிகளிலும் வேகமாக பரவிய உண்மையை மறைக்கவும், 9-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் இஸ்லாம் மேற்கு கிழக்கு கடற்கரைப்(West Coast) பகுதியில் ஆங்காங்கே தோன்றியது என்ற தவறான கருத்தை ஆணி அடித்து உண்மைப் படுத்தும் நோக்கோடு இஸ்லாத்தின் ஆரம்ப வருகையே நாட்டை ஆக்கிரமித்து ரண ஆறுகள் ஓடச் செய்வதற்காகத்தான் என்று களங்கமற்ற இந்திய மனதில் நஞ்சை கலப்பதற்காகவே இபுனு காசிமின் வருகையை மிகைப்படுத்திக் காட்டுகின்றனர்.

இந்தியாவின் வடபகுதிகளைப் பற்றிய வரலாறு 6, 7, 8 நூற்றாண்டுகளில் ஒளி மிக்கதாக இருக்கும்போது தென்னிந்தியாவிலுள்ள மேற்கு கிழக்கு கடற்கரைப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பெருமாள் ஆட்சிகள் நடத்தும் வரலாற்றில் இம்மூன்று நூற்றாண்டுகள் இருண்டுபோனது எப்படி? ஏன்?

இருண்ட காலமெனக் கூறி ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல் ஆவணங்கள் எதுவும் இல்லை என்ற காரணம் சொல்லி உதாசீனமாக ஒதுக்கி வைக்கப்பட்ட இக்காலக் கட்டத்தில் எழுதப்பட்டது எனக் கருதப்படும் சில கல்வெட்டுகளைப் பற்றியும் செப்பேடுகள் பற்றியும் சில மன்னர்களைப் பற்றியும் சுந்தரமூர்த்தி நாயனார், ஆதி சங்கராச்சாரியார் போன்ற மதத் தலைவர்களைப் பற்றியும் அவர்களுடைய வாழ்க்கை போதனைகள் முதலியவைப் பற்றிய தெளிவான தகவல்கள் எவ்வாறு கிடைக்கப் பெற்றன?

இப்படிப்பட்ட தகவல்கள், திரட்டிய வழியில், அதேகாலக்கட்டத்தில் தோன்றிய வளர்ந்த இஸ்லாத்தைப் பற்றியும் இங்குள்ள முஸ்லிம்களைப் பற்றியும் தகவல்கள் ஏன் திரட்ட தவறிவிட்டன? முஸ்லிம்களை சம்பந்தப்பட்ட இடங்கள் வரும்போது இருண்ட காலமெனக் கூறி ஒரு திரையைப் போடுவது எதனால்?

– தோப்பில் முஹம்மது மீரான்

தொடரும்….

அக்டோபர் 28 – நவம்பர் 03, 2005

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *