தொடர்-11: தோப்பில் முஹம்மது மீரான்
வரலாற்று உண்மையை மறைத்த வரலாற்று ஆசிரியர்கள்
“இஸ்லாத்தைப் பற்றி நபி(ஸல்) போதனை செய்ய துவங்கி அதிக நாட்கள் ஆவதற்கு முன் இந்தியாவின் பல பகுதிகளில் அரபியர்கள் தங்கி, ஏராளம் மதமாற்றங்கள் செய்தனர்”. (A Journey from Madras through countries of Mysore, Cannanur and Malabar – Francies Buchana) என்று பிரான்ஸிஸ் புக்கானன் குறிப்பிடுகிறார்.
நான்காவது கர்நாடகப் போரில் திப்பு சுல்தான் இரத்த சாட்சியான பிறகு, திப்புவின் ஆட்சிக்குட்பட்டிருந்த மைசூர், கர்நாடகா, மலபார் போன்ற இடங்களைப் பற்றி சரிவர படித்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்க கி.பி.1799-ல் பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரி பிரான்ஸில் புக்கானன் ஆவார். இவர் மேலே குறிப்பிட்டுள்ள இடங்களிலுள்ள ஒவ்வொரு கிராமம் கிராமமாகச் சென்று அங்குள்ள மக்களின் நிலை, கலாச்சாரம், தொழில், விவசாயம், மதம் ஆகியவற்றை மிக நுட்பமாக ஆராய்ந்து அவருடைய அறிக்கையை சமர்ப்பித்தார். அதை நூல் வடிவில் வெல்லஸ்லி பிரபுவுக்கு சமர்ப்பணம் செய்தார்.
இப்படி ஊர் ஊராகச் சென்றிருந்த போது ‘பொன்னானி’க்கும் சென்றிருந்தார். பொன்னானியில் ஒரு ‘தங்களிடம்’ இருந்து கேட்டறிந்த செய்திதான் மேலே தரப்பட்டுள்ளது. இதே ‘தங்களின்’ முன்னோர்கள் கொடுத்த சில அரபி மொழி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டுதான் முஹம்மது காசிம் பெரிஸ்தா என்ற வரலாற்று ஆசிரியர் மலபார் வரலாற்றை எழுதியுள்ளதாக புக்கானன் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
முஹம்மது காசிம் பெரிஸ்தா போன்ற பெரிய பாரசீக வரலாற்று ஆசிரியர்களுக்கு வரலாற்று ஆவணங்கள் வழங்கிய ‘தங்களின்’ குடும்பத்தாரிடமிருந்து நேரில் கேட்டறிந்து தம் அறிக்கையில் நபி(ஸல்) காலத்திலேயே இஸ்லாம் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் பரவிவிட்டதாக எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாதபடி ஒப்புக் கொள்கிறார் புக்கானன்.
நம்பிக்கையற்றவர் (Infidels)களுக்கு எதிராக போர்மூலம் இஸ்லாம் மதத்தை பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று முஹம்மது கஜினி உறுதிமொழி எடுத்துக் கொண்டதாக (இந்திய வரலாறு – ஏ. ஸ்டிதரமேனோன்) சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதை மெய்ப்பிப்பதற்காக வேண்டுமென, அமைதியாகவும், ஆரவாரம் இல்லாமலும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் தோன்றிய வரலாற்று உண்மையை மறைக்கின்றனர் சில வரலாற்று ஆசிரியர்கள்.
மேற்கு கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் புலர்ந்து ஏறத்தாழ 9நூற்றாண்டு காலம் வரையிலும், குறிப்பாக சொல்லப்போனால் 1491-ல் வாஸ்கோடகாமா கொடுங்கல்லூர் துறைமுகத்தில் கப்பல் இறங்கும் வரை இப்பகுதிகளில் உள்ள முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் தமிழகத்திலோ, கேரளாவிலோ எந்தவித கிளர்ச்சியோ, போராட்டங்களோ ஜாதிக் கலவரங்களோ, அரசுக்கெதிரான போரிலோ ஈடுபடவில்லை என்பது வரலாற்று உண்மை. தாய் நாட்டிற்காக இராணுவ சேவை செய்து வந்தனர். இங்குள்ள மக்களோடு ஒன்றியும், இங்குள்ள கலாச்சாரத்தோடு இணைந்தும் ஆட்சியாளர்களுக்கும் உறுதுணையாக வாழ்ந்து வந்ததால் இங்குள்ள ஆட்சியாளர்களின் பேருதவியோடு இஸ்லாம் இப்பகுதிகளில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது.
இஸ்லாம் மார்க்கத்திற்கு சில நூற்றாண்டுகளில் கேரளக் கரையில் அதிக பிரச்சாரம் கிடைத்தது. இங்கு ஹிந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கு பிறகு சிறப்பாக விளங்குவது முஸ்லிம் சமுதாயமாகும். இஸ்லாம் மார்க்கத்திற்கு கிடைத்த வளர்ச்சி பல கோணங்களிலும் கேரள அரசர்கள் கடைப்பிடித்து வந்த மத சகிப்புத்தன்மை காரணமாகும். கோழிகோட்டு சாமூதிரிகள் எல்லா வகையிலும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பும் உற்சாகமும் ஊட்டினர்.
சாமூதிரிகளின் கீழில் அரசாங்கம் இருந்த போது கோழிக்கோட்டில் சொல்லத் தகுந்த ஒரு சக்தியாக விளங்கினர் முஸ்லிம்கள். அவர்கள் மன்னர்களுடைய நம்பிக்கையைப் பெறவும், நாட்டு விவகாரங்களில் பெரும் செல்வாக்கு உடையவர்களாகவும் விளங்கினர். சாமூதிரிகள் தங்கள் எதிர்காலத்தை எண்ணி முஸ்லிம்களுக்கு தனி சலுகைகளும் உதவிகளும் செய்து வந்தனர்.
சாமூதிரிகளுடைய கப்பல் படைத்தலைவர்களான புகழ்பெற்ற குஞ்சாலி மரைக்காயர்கள், போர்ச்சுகீசியரின் நாட்டைப் பிடிக்கும் திட்டங்களுக்கு எதிராக அயராது தொடர்ந்த வீரமிக்க போர்கள் கேரள வரலாற்றில் முக்கியமான ஒரு பகுதியாகும். மாப்பிள்ளைகள் என அழைக்கப்படும் மலபார் முஸ்லிம்கள், சாமூதிரிக்காக எதுவும் செய்யத் துணிந்தவர்கள். கடற்படையில் போதிய அளவு முஸ்லிம்கள் இல்லாவிட்டால் ஹிந்து சமுதாயத்தில்பட்ட மீனவ குடும்பங்களிலிருந்து ஒன்றிரண்டு நபர் வீதம் முஸ்லிம்களாக வளர்க்க சாமூதிரிகள் உத்தரவிட்டனர். கோழிக்கோட்டில் உள்ள மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கைப் பெருக ஒருவேளை இந்தக் கட்டளை ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஏ. ஸ்டிதரமேனோன் (கேரள வரலாறு – பக்கம் 99) குறிப்பிடுகிறார்.
சாமூதிரி போன்ற மன்னர்களின் உதவியாலும், ஊக்குவிப்பாலும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் தழைத்தோங்கி வளர்ந்த உண்மையை, மக்கள் கவனங்களிலிருந்து திசை திருப்புவதற்காகவே முஹம்மது இபுனு காசிமையும் அவருக்குப் பிறகு வந்தவர்களையும் வாளேந்தி வந்து இஸ்லாத்தைப் பரப்பியவர்கள் என்ற இழிவான பழியை இவர்கள் மீது சுமத்தி, இந்திய வரலாற்றின் முன் வரிசையில் குற்றவாளிகளாக நிறுத்தி வைத்துள்ளனர்.
– தோப்பில் முஹம்மது மீரான்
தொடரும்..
நவம்பர், 11 – 17, 2005