ஓவிய தூரிகையால் பற்றவைக்க முடியுமா? என்ற கேள்விக்கு விடைதான் கடந்த சில வாரங்களாக நடந்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள்.
திருக்குர்ஆனும் முஹம்மது நபியின் வாழ்க்கையும் (The Quran and the prophet Muhammad’s life) என்ற குழந்தைகளுக்கான புத்தகம் எழுதிய டென்மார்க் எழுத்தாளர் Kare Bluitgen என்பவர் முகம்மது நபி அவர்களை குறித்து குழந்தைகளுக்கு விளக்க தனக்கு முகமது நபி அவர்களை விளக்கும் சித்திரம் தேவைப்படுவதாகவும், ஆனால் அதனை வரைந்து கொடுக்க யாருக்கும் தைரியம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். முகமது நபி அவர்களை உருவமாக வரைவது இஸ்லாமியர்களிடம் இருந்து எதிர்ப்பை ஏற்படுத்தும் என்பதால் யாருமே இதற்கு முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டென்மார்க்கின் முன்னணி பத்திரிக்கையான Jyllands-Posten டென்மார்க்கில் உள்ள காட்டூனிஸ்டுகளிடம் முகமது நபியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ அப்படியே வரையுங்கள் (to draw Muhammad as they see him) என்று கூறியிருக்கிறது.
செப்டம்பர் 30, 2005ல் ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ என்ற வாசகம் எழுதிய திரி கொளுத்தப்பட்ட வெடிகுண்டுத் தலைப்பாகையை அணிந்தவர் போல தொடங்கி 12 கார்ட்டூன்களை இந்த பத்திரிக்கை வெளியிட்டது. இதனால் டென்மார்க் முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு ஆளானார்கள். பிறகு உலகின் பல பகுதியிலிருந்து இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மற்றும் முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். இருந்தாலும் இவையனைத்தும் கருத்துச் சுதந்திரம் என்ற வார்த்தையை வைத்து அந்தப் பத்திரிக்கை நிறுவனம் தனது காதை அடைத்துக்கொண்டது. இதனைப்பார்த்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற இஸ்லாமிய எதிர்ப்பு பத்திரிக்கைகள் ஜனவரியில் அதனை மறு பதிப்பு செய்தன. மறுபதிப்பு செய்த இதழ்களில் ஒன்றான நார்வே கிறிஸ்டியன், வாசகர்களிடமிருந்து வரும் முஹம்மது நபி பற்றிய சிறந்த கார்ட்டூனுக்கு பரிசு என்றும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
டென்மார்க் பிரதமர் ஆண்டர்ஸ் ஃபோக்ரஸ்முஸ்ஸென் இது கருத்துச் சுதந்திரம் பற்றிய விஷயம் எனவும் இதில் தங்களால் தலையிட முடியாது என்று சொன்னதோடு உலகின் கருத்துச் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கும் நான்கு நாடுகளில் டென்மார்க்-கும் ஒரு நாடு என்பதாக பீற்றிக்கொண்ட நேரத்தில், விஷயம் பற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது.
கதை சொல்வதற்கு கார்ட்டூன் வரைந்ததுபோலவும் முஸ்லிம்கள் முஹம்மது நபியின் கார்ட்டூன் வரைந்ததற்காக ஏன் கோபப்படவேண்டும் என்ற கேள்வி கேட்டு பிரச்னையை திசை திருப்பும் முயற்சியில் இஸ்லாத்தின் எதிரிகள் அவர்களின் மீடியாவை முடுக்கிவிட்டுள்ளார்கள். இவர்கள் என்ன கதை சொல்ல விரும்புகிறார்கள் என்பதை வெடிகுண்டு தலைப்பாகை கார்ட்டூனைப் பார்த்தாலேயே எவருக்கும் எளிதில் புரியும்.
12 கார்ட்டூன்களை தவிர இதே சூழ்நிலையில் வெளிடப்பட்ட வேறு ஒரு கார்ட்டூனையும் இங்கு உதாரணத்திற்கு சொல்லலாம். “முஸ்லிம்கள் தொழவில்லை. தலையை மண்ணில் புதைக்க முயலுகிறார்கள்” என்ற பொருள்பட உள்ள கார்ட்டூன், இவர்களின் நெஞ்சில் உள்ள காழ்ப்புணர்வை அறிந்துக்கொள்ள உதவுகிறது.
முஹம்மது நபியைப்பற்றி கேலிச்சித்திரம் வெளியாக்கிய பத்திரிக்கை நிர்வாகம் முன்பு ஏசு கிருஸ்து பற்றி கேலிச் சித்திரம் வெளியிட மறுத்த செய்தி இப்போது வெளிவந்துள்ளது. அதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அல்-ஜஸீரா தொலைக்காட்சி சேனலின் தலைமை நிலையத்தை கப்பற்படையிலிருந்து ஏவுகணை மூலம் தாக்கி அழிக்க முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது. ஆக மேற்கத்தியர்களின் கருத்துச் சுதந்திரத்தின் லட்சணம் இதுதான் போலும்.
அரபு நாடுகளில் பெட்ரோலை ஏற்றுமதி செய்து எவ்வாறு செல்வம் கொழிக்கிறதோ, அதே போல பால் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் செல்வம் கொழிக்கும் டென்மார்க்கின் மடியில் அடிவிழுந்துள்ளது. டென்மார்க் பொருட்களை வாங்க மாட்டோம் என்ற வகையில் முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிக்கவே, டென்மார்க் நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் தற்போது நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன.
டென்மார்க், உலக வர்த்தக சபையில் (WTO) சவுதிக்கு எதிராக முறையிடப்போவதாக மிரட்டவே, டென்மார்க் பொருள் புறக்கணிப்பிற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சவுதி அரசாங்கம் கூறிவிட்டது. கடந்த டிசம்பர் 11, 2005-ல் உலக வர்த்தக சபையில் சவுதி அரேபியா முழுமையான உறுப்பினராக இணைந்தது குறிப்பிடத்தக்கது.
உலகில் வாழும் பல கோடி முஸ்லிம்கள் எதிர்ப்பு பேரணி தொடங்கவே, நிலைமை கட்டுக்கடங்காமல் போய் கடைசியாக லெபனான், சிரியா போன்ற நாடுகளில் உள்ள டென்மார்க் தூதரகத்தை ஆர்பாட்டக்காரர்கள் எரிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
‘ஜைலாண்ட்ஸ் போஸ்டன்’ நாளிதழின் முதன்மை ஆசிரியர், தங்களின் தவறுக்காக வருத்தம் தெரிவித்துவிட்டாலும், குறிப்பிட்ட கேலிச்சித்திரங்களை இணையத்திலும் பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
ஐரோப்பிய நாடுகளின் இஸ்லாத்திற்கெதிரான நடவடிக்கைகள் ஒன்றும் புதிது அல்ல. முன்பு சல்மான் ருஷ்டி சாத்தானின் வசனங்கள் என்ற நாவல் வெளியிட்டு முஹம்மது நபி மற்றும் அவர்களின் மனைவியரை கேவலமாக எழுதியதால், ஈரான் அரசாங்கம் மரண தண்டணை விதித்தபோது, பல மில்லியன் டாலர்களை செலவழித்து சல்மான் ருஷ்டிக்கு UK பாதுகாப்பு வழங்கியது.
இப்பிரச்னை இவ்வளவு பூதாகரமாகும் என்று ஐரோப்பா எதிர்பார்க்கவில்லை. மறுபதிப்பு செய்த சில நாளிதழ்கள் வருத்தம் தெரிவித்துள்ளன. சமரசத்திற்காக ஐரோப்பிய ஒறுங்கிணைப்பு (E.U) அரபுநாடுகளுக்கு தனது தூதரை அனுப்பி வைத்துள்ளது.
கருத்துச் சுதந்திரத்தைத் தவறாக பயன்படுத்தி வெளியிடப்பட்ட இந்த கார்ட்டூன்களால் டென்மார்க் ஏற்றுமதி தொழில் பாதிப்படைந்ததோடு மட்டுமல்லாமல், லெபனான் தூதரக எரிப்பு என்று தொடங்கி பாகிஸ்தானில் கே.எஃபிஸியிலிருந்து பிட்ஸா ஹட் வரை பற்றி எரிவதை எண்ணி வருந்தாமல் இருக்க முடியாது. ஈராக் விவகாரத்தால் மேற்குலகிற்கும் அரபுலகிற்கும் ஏற்கனவே வெறுப்பு கனன்றுக் கொண்டிருக்கும் நிலையில், டென்மார்க் பத்திரிக்கையால் பெட்ரோல் ஊற்றப்பட்டுள்ளது.
இஸ்லாத்திற்கெதிரான செயல்களுக்கு எதிர்ப்பைப் பதியவைக்கும் வகையில் பேரணி நடத்துவது ஜனநாயக உரிமை என்றாலும், பொருட்களை நாசப்படுத்துவது இஸ்லாத்திற்கு எதிரான செயல் என்பதாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கண்டித்துள்ளனர்.
முஹம்மது நபி பற்றி அவதூறாக படம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் தலையை கொண்டு வருபவருக்கு 51 கோடி ரூபாயும் தனது எடைக்கு நிகராக தங்கமும் பரிசு என்று உத்திர பிரதேச மாநில ஹஜ் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகம்மது யாகூப் கூறியுள்ளாராம். இவருக்கு மறைந்த ஈரான் இமாம் “கொமைனி” போல் பிரபலமடைய ஆசை வந்துவிட்டதோ என்னவோ.
பரிசு கொடுக்க இவருக்கு ஏது இவ்வளவு பணம், கார்ட்டூனிஸ்ட் ஒருவர் அல்ல பலர், குற்றவாளி கார்ட்டூன் வரைந்தவரா, வெளியிட்டவரா?, இவர்தான் அனைத்து முஸ்லிம்களின் பொறுப்பாளரா? போன்ற கேள்விகளை யாரும் கேட்க வேண்டாம். (அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!!).
“படம் பார்த்து கதைச் சொல்”வதற்காக வரையப்பட்ட கார்ட்டூன்கள் அல்ல இவை. “படம் பார்த்து பகை கொள்”வதற்காக வரையப்பட்டவை என்பதே உண்மை.
Related and ref. news links:
http://porukki.weblogs.us/archives/4
http://thamizhsasi.blogspot.com/2006/02/blog-post_05.html
http://thoughtsintamil.blogspot.com/2006/02/blog-post_07.html
http://athusari.blogspot.com/2006/02/blog-post.html
http://athusari.blogspot.com/2006/02/blog-post_03.html
மற்றும் தினமணி (18.02.2006)