அல்லாஹ்வுக்கும், அவன் திருத்தூதருக்கும் கட்டுப்படுதல், முஸ்லிம் ஆட்சியாளர்களிடமும் பிற முஸ்லிம்களிடமும் உண்மையாளராகத் திகழ்தல்
35- நபி(ஸல்)அவர்களிடம் நான் (அவர்களது கட்டளையைச்) செவியேற்று அதற்குக் கீழ்படிந்து நடப்பேன் என்று உறுதிமொழியளித்தேன். அப்போது என்னால் இயன்ற விஷயங்களில் என்றென்றும் முஸ்லிம்களில் ஒவ்வொருவருக்கும் நன்மையே நாடுவேன், என்றும் சேர்த்துச் சொல்லும்படி என்னிடம் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-7204: ஜரீர் பின் அப்தில்லாஹ்(ரலி)
தீய செயல்கள் புரியும்போது ஈமான் குறைதல் தீய செயல்கள் புரியும் போது விசுவாசியின் விசுவாசம் அவனை விட்டும் நீங்குதல்
36- விபசாரம் புரிகின்றவன் விபசாரம் புரியும் போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி அதை செய்ய மாட்டான்.(மது அருந்துகிறவன்) மது அருந்தும் போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான். திருடன் திருடும் போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான். மற்றொரு அறிவிப்பில் மக்களின் மதிப்பு மிக்க செல்வத்தை மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்க கொள்ளையடிப்பவன் அதைக் கொள்ளையடிக்கும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்க மாட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
புகாரி-5578: அபூஹூரைரா(ரலி)
நயவஞ்சகத்தின் அடையாளங்கள்
(நயவஞ்சகம் இரு வகைப்படும்: (1) நம்பிக்கையில் நயவஞ்சகம் (2) செயல்களில் நயவஞ்சகம்)
37- நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்த கொண்டே இருக்கும்.
அவைகளாவன: நம்பினால் துரோகம் செய்வான். பேசினால் பொய்யே பேசுவான், ஒப்பந்தம் செய்து கொண்டால் அதை மீறுவான், விவாதம் புரிந்தால் நேர்மை தவறி பேசுவான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-34: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)
38- நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று: பேசினால் பொய்யே பேசுவான், வாக்களித்தால் மீறுவான், நம்பினால் துரோகம் செய்வான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-33: அபூஹூரைரா(ரலி)
ஒரு விசுவாசி தன் சகோதர விசுவாசியை நிராகரிப்பவன் என்றால்
39- எந்த மனிதர் தம் (முஸ்லிம்)சகோதரரைப் பார்த்து காஃபிரே! (இறைமறுப்பாளனே!) என்று அழைக்கின்றாரோ நிச்சயமாக அவர்களிருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-6104: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)
வேண்டுமென்றே தன்தந்தையை அறிந்திருந்தும் தந்தையல்ல என்று நிராகரிப்பவனின் விசுவாசம் குறித்து
40- தன் தந்தை அல்லாத(ஒரு)வரை(அவர் தன் தந்தையல்ல என்று) விவரம் அறிந்து கொண்டே அவர் தான் என் தந்தை என்று கூறும் ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவனாகி விடுகிறான். தனக்கு வமிசாவளித் தொடர்பு இல்லாத ஒரு குலத்தைக் குறித்து, தான், அந்தக் குலத்தைச் சேர்ந்தவன் தான் என்று தன்னைப் பற்றிக் கூறிக் கொள்பவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-3508: அபூதர்(ரலி)
41- உங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள் யார் தம் தந்தையை வெறுத்து (வேறு யாரோ ஒருவரை தம் தந்தை என்று கூறி) விடுகின்றாரோ அவர் நன்றி கொன்றவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-6768: அபூஹூரைரா(ரலி)
42- யார் தம் தந்தை அல்லாத ஒருவரை அவர் தம் தந்தை அல்ல என்று தெரிந்து கொண்டே தந்தை என்று வாதாடுகிறாரோ அவர் மீது சொர்க்கம் தடை செய்யப்பட்டதாகி விடும் என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்.
புகாரி-6766: சஅத் பின் அபீ வக்காஸ்(ரலி)
இந்த ஹதீஸை நான் அபூபக்ரா(ரலி) அவர்களிடம் குறிப்பிட்டேன்.அப்போது அவர்கள் இதை அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களிடமிருந்து என் காதுகள் செவியேற்றன. என் இதயம் மனனமிட்டுக் கொண்டது என்று சொன்னார்கள்.
புகாரி-6767: அபுபக்ரா (ரலி)