ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாடையை மக்கள் நுகர வேண்டுமென்பதற்காக அவர்களைக் கடந்து சென்றால் அவள் விபச்சாரியாவாள் (அஹ்மத்) என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருந்தும் இன்றைய காலத்தில் இது மிக அதிகமாகக் காணப்படுகிறது. சில பெண்கள் இதை எந்த அளவுக்கு அலட்சியமாக, சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள் எனில் வாசனைத் திரவியங்களைத் தடவிக் கொண்டு தம்முடைய டிரைவர், வியாபாரி, மற்றும் பள்ளிக்கூடத்தின் காவலாளி ஆகியோரின் அருகில் சர்வ சாதாரணமாகச் செல்கின்றனர்.
ஆனால் வாசனைத் திரவியத்தைத் தடவிக் கொண்ட பெண் மீது எந்த அளவு ஷரீஅத் கடுமை காட்டியிருக்கிறதெனில் அத்தகைய பெண் வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்பினால் – பள்ளிக்குச் செல்வதாக இருந்தாலும் சரி – கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுச் செல்ல வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எந்தப் பெண் நறுமணம் பூசிக் கொண்டு பிறர் அந்த வாடையை நுகர வேண்டும் என்பதற்காக பள்ளிக்குச் செல்கின்றாளோ அவள் கடமையான குளிப்பைப் போன்று குளிக்காத வரை அவளுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது’ (அஹ்மத்)
திருமண வைபவங்களும், பெண்கள் நிகழ்ச்சிகளுக்கும் புறப்படும் பெண்கள் புறப்படும் முன் பெண்கள் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தி விட்டுச் செல்கின்றனர். மட்டுமல்ல அதிகம் மணம் கமழக்கூடிய வாசனைத் திரவியங்களைத் தடவிக் கொண்டு கடை வீதிகளில், வாகனங்களில், ஆண், பெண் கலந்திருக்கும் கூட்டங்களில், சபைகளில், ரமளான் இரவுகளில் பள்ளிகளுக்கும் கூட செல்கின்றனர்! இதனை நாம் அல்லாஹ்விடம் தான் முறையிட வேண்டியதிருக்கிறது.
பெண்கள் பயன்படுத்தும் வாசனைப் பொருள் மணம் உள்ளடங்கியும் நிறம் எடுப்பாகவும் இருக்க வேண்டும் என்று ஷரீஅத்தில் கூறப்பட்டுள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மீது கோபம் கொள்ளாமலும், அறிவீனர்களான ஆண்களோ, பெண்களோ செய்கின்ற குற்றத்துக்காக நல்லோர்களான ஆண்களையும், பெண்களையும் தண்டிக்காமல் இருக்கவும் மேலும் நம் அனைவருக்கும் நேரான வழியை அவன் காட்டவும் நாம் பிரார்த்திப்போமாக!