101- நான் அபூ ஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் முதன் முதலாக அருளப் பெற்ற திருக்குர்ஆன் வசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அன்னார் போர்த்தியிருப்பவரே! (யா அய்யுஹல் முத்தஸ்ஸீர்) எனும் (74:1 ஆவது) வசனம் என்றார்கள். நான் (நபியே!) படைத்த உங்கள் இறைவனின் பெயரால் ஓதுக! (இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லஃதீ கலக்) எனும் (96:1 ஆவது) வசனம் என்றல்லவா மக்கள் கூறுகின்றார்கள் என்றேன். அதற்கு அபூ ஸலமா அவர்கள் நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இது குறித்துக் கேட்டேன். நீங்கள் (என்னிடம்) கேட்டது போலவே நானும் அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னதைத் தவிர வேறெதையும் உங்களுக்கு நான் சொல்லப் போவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா மலைக்குகையில் தங்கியிருந்தேன். பிறகு என் தங்குதலை முடித்துக் கொண்டு (மலையிலிருந்து) இறங்கினேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு நான் என் வலப்பக்கத்தில் பார்த்தேன். அங்கு எதையும் நான் காணவில்லை. ஆகவே நான் என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அங்கு ஒன்றை நான் கண்டேன். ஆகவே நான் (என் துணைவியாரான) கதீஜாவிடம் சென்று,எனக்குப் போர்த்திவிடுங்கள். குளிர்ந்த நீரை ஊற்றுங்கள்! என்று கூறினேன். அவர்கள் எனக்குப் போர்த்தி விட்டார்கள். என் மீது குளிந்த நீரையும் ஊற்றவும் செய்தார்கள். அப்போது போர்த்திக் கொண்டு (படுத்து) இருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். மேலும் உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள் எனும் (74:1-3) வசனங்கள் அருளப்பெற்றன.
யா அய்யுஹல் முத்தஸ்ஸீர்!
புகாரி- 4922: யஹ்யா பின் அபீ கஸீர் (ரலி)