206- நாங்கள் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். பைதாவு அல்லது தாத்துல்ஜைஸ், என்ற இடத்தை வந்தடைந்ததும் எனது கழுத்தணி அறுந்து (தொலைந்து) விட்டது. அதை தேடுவதற்காக நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கி விட்டோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை. அப்போது அபூபக்ர் (ரலி)இடம் சிலர் வந்து (உங்கள் மகளான) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நபி (ஸல்) அவர்களையும் மக்களையும் இங்கே தங்கச் செய்து விட்டார்கள். அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை. அவர்களுடனும் தண்ணீர் எடுத்து வரவில்லை என்று முறையிட்டனர். அபூபக்ர் (ரலி) (என்னருகே) வந்தபோது நபி (ஸல்) அவர்கள் தங்களது தலையை எனது மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்து விட்டாயே? அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை, அவர்களிடத்திலும் தண்ணீர் இல்லை எனக் (கடிந்து) கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லி விட்டு, தங்களது கையால் எனது இடுப்பில் குத்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் தலை என் மடி மீது இருந்த காரணத்தினால் நான் அசையாது இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் காலையில் விழித்தெழுந்த போதும் தண்ணீர் கிடைக்க வில்லை. அப்போது அல்லாஹ் தயம்முமுடைய வசனத்தை இறக்கினான். எல்லோரும் தயம்மும் செய்து கொண்டனர். இது பற்றிப் பின்னர் உஸைது பின் ஹூளைர் (ரலி) அபூபக்ருடைய குடும்பத்தினர்களே! உங்கள் மூலமாக ஏற்பட்ட பரக்கத்துகளில் இது முதலாவதாக இல்லை. (எத்தனையோ பரக்கத்துகள் இதற்கு முன்பும் உங்கள் மூலம் ஏற்பட்டுள்ளன) எனக் கூறினார். நான் இருந்த ஒட்டகத்தை எழுப்பி விட்டபோது அதன் அடியில் (காணாமல் போன) என் கழுத்தணி கிடந்ததைக் கண்டேன்.
207- அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அபூ மூஸல் அஷ்அரி (ரலி) ஆகியோருடன் நானும் இருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி) அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி)இடம் அபூஅப்திர்ரஹ்மானே! குளிப்புக் கடமையான ஒருவருக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழவேண்டியதில்லை என அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) சொன்னார்கள். அதற்கு அபூ மூஸா (ரலி), நபி (ஸல்) அவர்கள் அம்மார் பின் யாஸிர் (ரலி)இடத்தில் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது என்று சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்? என்று கேட்டார். அதற்கு (அம்மார் (ரலி) உமர்(ரலி) இடம் அச்செய்தியைக் கூறியபோது) அதை உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதா? என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) பதில் கூறினார்கள். அப்போது அம்மார் (ரலி) அறிவிப்பதை விட்டு விடுங்கள். தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள் என்ற இந்த இறைவசனத்தை என்ன செய்வீர்கள்? என்று அபூமூஸா (ரலி) கேட்டார்கள். அதற்கு இந்த விஷயத்தில் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கி விட்டால் யாருக்காவது தண்ணீர் கொஞ்சம் குளிராகத் தெரிந்தால் அதில் உளூ செய்வதை விட்டு விட்டு தயம்மும் செய்து விடுவார்கள் என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) தாம் சொல்லக்கூடிய இந்த வார்த்தையின் விபரீதத்தைப் புரியாமலே சொல்லிவிட்டார்கள். இதற்காகத் தான் தயம்மும் செய்வதை அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) வெறுத்திருக்கக் கூடுமோ? என ஷகீகிடம் நான் கேட்டேன். அதற்கு ஆம்! எனப் பதில் கூறினார்கள். ‘என்னை ஒரு வேலைக்காக நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தபோது எனக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே பிராணிகள் மண்ணில் புரளுவது போன்று புரண்டேன். இச்செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி (ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளால் பூமியில் ஓர் அடி அடித்து, பின்னர் இரண்டு கைகளையும் தட்டிவிட்டு, தங்களின் வலக்கரத்தால் இடது புறங்கையைத் தடவினார்கள். அல்லது தங்களின் இடக்கரத்தால் வலப்புறங்கையைத் தடவினார்கள். பின்னர் இரண்டு கைகளால் தங்களின் முகத்தைத் தடவிவிட்டு ‘இப்படிச் செய்வது உமக்குப் போதுமானதாக இருந்தது’ என்று கூறினார்கள் என்ற செய்தியை ‘உமர் (ரலி) அவர்களிடம், அம்மார் சொன்னதை நீங்கள் கேள்விப் படவில்லையா?’ என அபூ மூஸா (ரலி) கேட்டதற்கு, ‘அம்மார் சொன்னதில் உமர் (ரலி) திருப்திப்படவில்லை’ என்பது உமக்குத் தெரியாதா? என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) திரும்பக் கேட்டார்” என ஷகீக் அறிவித்தார்.
208- ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து நான் குளிப்புக் கடமையானவனாக ஆகிவிட்டேன். தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்ய வேண்டும்? என்று வினவினார். அப்போது அங்கிருந்த அம்மார் பின் யாஸிர் (ரலி) உமர் (ரலி) இடத்தில் நானும் நீங்களும் ஒரு பிரயாணத்தில் சென்றோம். (அப்போது தண்ணீர் கிடைக்காததால்) நீங்கள் தொழவில்லை. நானோ மண்ணில் புரண்டு விட்டுத் தொழுதேன். இந்நிகழ்ச்சியை நபி (ஸல்) அவர்களிடம் நான் சொன்ன போது நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைகளையும் தரையில் அடித்து, அவற்றில் ஊதி விட்டு அவ்விரு கைகளால் தமது முகத்தையும் இரு முன் கைகளையும் தடவிக் காண்பித்து இவ்வாறு செய்திருந்தால் அது உனக்குப் போதுமானதாக இருந்தது எனக் கூறிய சம்பவம் உங்களுக்கு நினைவில்லையா? என்று கேட்டார்கள்.
209- நானும் நபி (ஸல்) அவர்களுடைய மனைவியான மைமூனா (ரலி)உடைய அடிமை அப்துல்லாஹ் பின் அல் ஹாரிது பின் அஸ்ஸிம்மத்தில் அன்சாரி (ரலி)இடம் சென்றோம். எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் பீர்ஜமல் என்ற இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் அவர்களைச் சந்தித்து ஸலாம் சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பதில் சொல்லாமல் ஒரு சுவர் பக்கம் சென்று (அதில் கையை அடித்து) தமது முகத்தையும் இருகைகளையும் தடவிய பின்னர் அவருடைய ஸலாத்திற்கு பதில் சொன்னார்கள் என்று அபூஜூஹைம் (ரலி) கூறினார்கள்.