Featured Posts

21] இஸ்லாத்தின் வானளாவிய வளர்ச்சியின் அஸ்திவாரம்

முகம்மது நபியின் மத நல்லிணக்க அறிக்கை வெளியானபோது, அதனை மனப்பூர்வமாக ஏற்பதாகச் சொல்லித்தான் யூதர்களும் தம்மை மதினாவின் இஸ்லாமிய அரசுக்கு உட்பட்ட குடிமக்களாக அறிவித்துக்கொண்டார்கள். ஆனால் இஸ்லாமிய சரித்திரத்தில் குறிப்பாக முகம்மது வாழ்ந்த காலத்தில் இஸ்லாத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஏராளமான கலகங்களுக்கும், ஒரு சில யுத்தங்களுக்கும் மறைமுகத் தூண்டுதல்கள் அவர்களிடமிருந்தே வந்ததாகச் சரித்திரம் சொல்கிறது. யுத்தம் என்று வரும்போது, ஒப்பந்தப்படி யூதர்கள் முஸ்லிம்களை ஆதரித்தாகவேண்டும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் யூதர்கள் யுத்தத்தில் பங்கெடுக்காமல் “நடுநிலைமை” காப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

முஸ்லிம்களுக்கு முதலில் யூதர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது புரியவில்லை. பிறகு, அவர்கள் முகம்மதை ஒரு இறைத்தூதராக மனப்பூர்வமாக ஏற்கவில்லை; ஒப்புக்குத்தான் அவரது அறிக்கையை ஏற்பதாகச் சொல்லியிருக்கிறார்கள் என்கிற விஷயம் தெரியவந்தபோது, உடனடியாக யூத உறவைக் கத்திரித்துவிட விரும்பினார்கள்.

யூத குலத்திலேயே பிறந்து, யூதர்களின் மரபு மீறல்களை மட்டுமே சுட்டிக்காட்டி கண்டித்த முந்தைய இறைத்தூதரான இயேசுவையே ஏற்காதவர்கள் அவர்கள். முகம்மதை எப்படி மனப்பூர்வமாக ஏற்பார்கள்? தவிரவும் யூதர்களுக்குத் தம்மைப்பற்றிய உயர்வு மனப்பான்மை எப்போதும் உண்டு. யூத இனத்தைக் காட்டிலும் சிறந்த இனம் வேறொன்று இல்லை என்பதில் அவர்களுக்கு இரண்டாவது அபிப்பிராயமே கிடையாது. ஆகவே, ஓர் அரேபியரை இறைத்தூதராகவோ, அரபு மொழியில் வழங்கப்பட்டுக்கொண்டிருந்த குர்ஆனை ஒரு வேதமாகவோ ஏற்பதில் அவர்களுக்கு நிறையச் சங்கடங்கள் இருந்தன. இவையெல்லாவற்றையும் விட முக்கியமான காரணம், அச்சம். இஸ்லாத்தின் வீச்சு குறித்த அச்சம். பெரும்பாலான அரேபிய சமூகமும், ஏராளமான கிறிஸ்துவர்களும் “உமக்கே நாம் ஆட்செய்தோம்” என்று குழுக் குழுவாக இஸ்லாத்தில் இணைந்துகொண்டிருந்ததால் விளைந்த அச்சம். ஏற்கெனவே கிறிஸ்துவத்துக்கு மாறிய யூதர்களையே மீட்க இயலாத நிலையில், மிச்சமிருக்கும் யூத சமூகத்தினர் எங்கே இஸ்லாத்தில் இணைந்துவிடுவார்களோ என்கிற கலவரம்.

அப்போது பெரும்பாலும் பிரசாரம் மூலம்தான் இஸ்லாம் பரவிக்கொண்டிருந்தது. புனிதப்பயணமாக உலகெங்கிலுமிருந்து சவூதி அரேபியாவுக்கு வரும் மக்களிடையே முஸ்லிம்கள் பிரசங்கம் நிகழ்த்துவார்கள். குறைஷியரின் வன்முறைகளுக்கு இடையிலும் பிரசாரப் பேச்சுகள் நிற்காது. பேச்சு என்பது பெரும்பாலும் பேச்சாக இருக்காது. மாறாக, குர்ஆனிலிருந்து சில சூராக்களை ஓதிக் காட்டுவார்கள். மனிதர்கள் ஆயிரம் எடுத்துச் சொன்னாலும் இறைவனின் நேரடிச் சொற்களின் வலிமைக்கு நிகராகாது என்பதை முகம்மதின் தோழர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆகவே, தமது கருத்துக்களை முன்வைக்காமல், குர்ஆனிலிருந்து முக்கியமான பகுதிகளை ஓதிக்காட்டுவார்கள். அதனால் கவரப்பட்டு விவரம் கேட்பவர்களிடம் மட்டுமே இஸ்லாம் குறித்து விளக்கம் அளிப்பார்கள். இந்த இரு கட்டங்களைத் தாண்டுபவர்கள் அவசியம் முகம்மது நபியைச் சந்திக்க விருப்பம் தெரிவிப்பார்கள். அவரை ஒருமுறை சந்தித்துவிட்ட யாரும் இஸ்லாத்தில் இணையாதோராக இருந்ததாகச் சரித்திரமில்லை!படித்தவர்கள் அதிகமில்லாத அந்தக் காலத்தில், ஓர் இனக்குழுத்தலைவர் இஸ்லாத்தைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறார் என்றால், அந்த இனக்குழுவே ஏற்றுக்கொண்டுவிடுவதில் பிரச்னை ஏதுமிராது. அதாவது, தலைவர் ஒப்புக்கொண்ட ஒரு விஷயத்தைத் தம் சமூகத்தின் மக்களுக்குத் தெரிவித்துவிட்டால் போதும். கேள்விகளற்று ஒட்டுமொத்த சமுதாயமும் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டுவிடும் வழக்கம் இருந்திருக்கிறது. மிகக்குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான அரேபியர்கள் இஸ்லாத்தில் இணைந்ததற்கு இந்த வழக்கம் ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது.

இதனாலெல்லாம்தான் யூதர்கள் கலங்கிப்போனார்கள். பரவல், பிரசாரம் போன்ற எதுவுமே யூத மதத்தில் கிடையாது. இதனை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். இருக்கும் யூதர்களையாவது கட்டிக்காக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்த யூத மதகுருமார்களின் சபை, இந்தக் காரணத்தினால்தான் முகம்மது நபியிடம் ஒப்புக்கொண்டபடி முஸ்லிம்களுடன் நல்லுறவு பேணாமல், விலகி விலகிப் போகத் தொடங்கியது.கி.பி. 630-ல் மிகப்பெரிய ராணுவபலம் பொருந்திய ஒரு குட்டி ராஜ்ஜியமாக இருந்தது மதினா. அதன் முடிசூடாத சக்ரவர்த்தியாக முகம்மதுவே இருந்தார். பத்தாண்டுகால வெளியேற்றத்துக்குப் பிறகு அந்த ஆண்டுதான் மெக்காவை அடைந்தே தீருவது என்கிற உறுதி கொண்டு படையுடன் புறப்பட்டார். எந்த முகம்மதுவையும் அவரது தோழர்களையும் ஒழித்துக்கட்டியே தீருவது என்று கொலைவெறி கொண்டு திரிந்தார்களோ, அந்த குறைஷிகளுக்கு அப்போது முகம்மதுவின் படையினரை எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லை. காரணம், முகம்மதுவின் பின்னால் அணிவகுத்திருந்த அந்தப் படை, பத்ருப்போரில் பங்குபெற்றதைப் போல முந்நூற்றுப் பதின்மூன்று பேர் கொண்ட படை அல்ல. மாறாக, கண்ணுக்கெட்டும் தொலைவு வரை அணிவகுத்திருந்தனர் முஸ்லிம் ராணுவ வீரர்கள். அவர்களது ஒட்டகப்பிரிவு ஒரு சாலையை அடைத்து நிறைத்திருந்தது. யானைகள் மறுபுறம் அணிவகுத்திருந்தன. வீரர்களின் வாள்களில் நட்சத்திரங்கள் மின்னின. வெற்றியை முன்கூட்டியே தீர்மானித்தவர்களைப் போல் அவர்களின் முகங்களில் அமைதியும் உறுதியும் ததும்பின.முன்னதாக முகம்மது தன் வீரர்களிடம் சொல்லியிருந்தார். “இந்த யுத்தம் மனிதர்கள் தம் பகைவர்களுடன் நிகழ்த்தும் சராசரி யுத்தமல்ல. இறைவனுக்காக நிகழ்த்தப்படும் யுத்தம். நமது தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு இதில் இடமில்லை. மெக்காவில் உள்ள க”அபா இறைவனின் வீடு. அதனுள்ளே செல்லவும் தொழுகை செய்யவும் எல்லாரைப் போலவும் முஸ்லிம்களுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமைக்காகத்தான் இப்படி அணிவகுத்திருக்கிறோம்.

“ஆனால் முகம்மது உள்பட யாருமே அதை எதிர்பார்க்கவில்லை. போரிட அச்சம் கொண்ட குறைஷியரும் அவர்களது அணியிலிருந்த பிற இனக்குழு படையினரும் தமது ஆயுதங்களை வீசிவிட்டு க”அபாவுக்குள்ளே இருந்த ஏராளமான தெய்வச் சிலைகளின் பின்னால் உயிருக்குப் பயந்து பதுங்கிக்கொண்டிருந்தார்கள். இந்த யுத்தம் மட்டும் நடக்குமானால் மெக்காவில் ஒரு குறைஷியும் உயிருடன் இருக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

காரணம், அணிவகுத்து வந்திருந்த முஸ்லிம்களின் படைபலம் ஒருபுறம் என்றால், மெக்காவிலேயே பொதுமக்களிடையே பரவியிருந்த முகம்மதுவின் புகழ் இன்னொருபுறம். உள்ளூர் மக்களின் செல்வாக்கை இழந்திருந்த குறைஷி ராணுவத்தினர் எப்படியும் தம் மக்களே முகம்மதுவுக்கு ஆதரவாகத்தான் செயல்படுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். ஆகவே, ஏதாவது செய்து உயிர்பிழைத்தால் போதும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது!ஒரு துளி ரத்தம் சிந்தாமல் அன்றைக்கு மெக்கா முகம்மது நபியின் வசமானது. போரில் அடைந்த வெற்றியல்ல; அதற்குப் பிறகு அவர் செய்த ஒரு காரியம்தான் மகத்தானது.

வெற்றிக்களிப்புடன் க”அபாவுக்குள் நுழைந்த முஸ்லிம் ராணுவ வீரர்களுக்கு முகம்மது ஓர் உத்தரவை இட்டிருந்தார். யாரையும் கொல்லாதீர்கள். யாரையும் எதிரி என்று எண்ணாதீர்கள். யாரையும் கைது செய்யவும் வேண்டாம்.

உலக சரித்திரத்தில் இன்றுவரை இதற்கு நிகரானதொரு சம்பவம் எந்த தேசத்திலும், எந்தப் போர்க்களத்திலும் நடந்ததில்லை. தோல்வியுற்ற மெக்கா ராணுவத்தினர் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. கொல்லப்படவில்லை. மாறாக, “உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. எல்லாவற்றிலிருந்தும் நீங்கள் விடுதலை பெற்றீர்கள். மனிதர்களுக்கு இடையில் இதுகாறும் இருந்துவந்த அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் வெறுப்பையும் காலடியில் இட்டு நசுக்கிவிடுவோம்” என்று சொன்னார் முகம்மது நபி.

இதனை அவர் மன்னராகச் சொல்லவில்லை. ஓர் இறைத்தூதராகச் சொன்னார்! அந்தக் கருணை பீறிட்ட உள்ளம்தான் இஸ்லாத்தின் வானளாவிய வளர்ச்சியின் அஸ்திவாரம். அன்றைய தினம் தொடங்கி இஸ்லாம் “பரப்பப்படவேண்டிய” அவசியமே இன்றித் தானாகப் பரவத் தொடங்கியது. மனிதர்களுக்குள் ஜாதி, மத, இன வித்தியாசம் கூடாது என்பதை அடிப்படையாக வைத்து, இறைவனை மட்டுமே தொழத்தக்கவனாகச் சுட்டிக்காட்டிய இஸ்லாத்தின் எளிமை அரேபியர்களைக் கவர்ந்தது. அலையலையாக வந்து அவர்கள் இஸ்லாத்தில் இணைந்தார்கள். சவூதி அரேபியா, ஈராக், ஈரான், லிபியா, சிரியா, பாலஸ்தீன் என்று ஒவ்வொரு தேசமாக இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டது. அதுநாள் வரை “நீங்கள் யார்?” என்று கேட்டால் எந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள், எந்த கோத்திரத்தினர்கள் என்றெல்லாம் பட்டியலிட்டுக்கொண்டிருந்தவர்கள், அதன்பின் “நாங்கள் முஸ்லிம்கள்” என்கிற ஒரு சொல்லில் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளத் தொடங்கினார்கள். குர் ஆனை ஓதவேண்டும் என்கிற விருப்பம் காரணமாகவே அரபியில் எழுதப்படிக்கக் கற்கத் தொடங்கினார்கள். கல்வி பயிலத் தொடங்கியதனாலேயே தமது கலாசாரச் செழுமை புரிந்தவர்களானார்கள். கலாசாரபலம் உணர்ந்ததனாலேயே அதனைக் கட்டிக்காக்க வேண்டிய அவசியத்தைப் புரிந்துகொண்டார்கள்.

காட்டரபிகள்!
இனி யார் அப்படிச் சொல்லிவிடமுடியும்? இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அரேபியர்கள் தமது நிலப்பரப்பின் புவியியல், அரசியல் சார்ந்த உண்மைகளையும் உணரத் தொடங்கினார்கள். எல்லைகளால் பிரிந்திருந்தாலும் முஸ்லிம்கள் என்கிற அடையாளத்தால் தாங்கள் ஒரே மக்கள்தாம் என்பதையும் உணரத் தொடங்கினார்கள். தங்களுடன் இணைந்து வசிக்கும் யூதர்களும் கிறிஸ்துவர்களும் எந்தெந்த வகையில் தம்மிடமிருந்து மாறுபட்டிருக்கிறார்கள் என்பதையும் விழிப்புணர்வுடன் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

மெக்கா வெற்றிக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து முகம்மது நபி கி.பி. 632-ல் காலமானார். (சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.) அவரது இறப்புக்குப் பிறகு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் முதல் கலீஃபாவாக அதிகாரபூர்வமாகப் பதவியேற்றவர், அபூபக்கர். நபிகளாரின் முக்கியத் தோழர்களுள் ஒருவர் அவர். இரண்டு ஆண்டுகாலம் (கி.பி.632-லிருந்து 634-வரை) ஆட்சியில் இருந்தார்.

உண்மையில் ஒரு சக்ரவர்த்திக்கு நேரெதிரான துறவு மனப்பான்மை கொண்டவர் அவர். பரம சாது. அதைவிடப் பரம எளிமைவாதி. தானென்ற அகங்காரம் ஒருபோதும் தனக்கு வந்துவிடக்கூடாது என்பதனால், கலீஃபாவான பிறகும் ஒரு வயதான மூதாட்டியின் வீட்டுக்குத் தினசரி சென்று வீட்டுவேலைகளைச் செய்து வைத்துவிட்டு, ஊரிலுள்ள அத்தனை பேரின் ஆடுகளிலும் பால் கறந்து கொடுத்துவிட்டு வந்தவர்.

ஒரு சமயம் முகம்மது நபியிடம், “நீங்கள் இல்லாவிட்டால் நாங்கள் யாரிடம் செல்வது?” என்று சில எளிய மக்கள் கேட்டார்கள். “அபூபக்கரிடம் செல்லுங்கள்” என்பதுதான் அவரது உடனடி பதிலாக இருந்தது. அந்தளவுக்கு இஸ்லாத்தில் தோய்ந்தவர் அவர். அவரது காலத்தில்தான் முதல்முதலாக குர்ஆன் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டது.

அபூபக்கரின் காலத்துக்குப் பிறகு கலீஃபாவானவர் உமர். இவரை ஏற்கெனவே நாம் சந்தித்திருக்கிறோம். முஸ்லிமாகியிருக்கிறார்கள் என்கிற காரணத்துக்காகத் தன் தங்கையையும் மாப்பிள்ளையையும் கொலை செய்யும் வெறியுடன் சென்று, இறுதியில் குர்ஆனின் வரிகளில் தன்வசமிழந்து, இஸ்லாத்தைத் தழுவியவர். இறுதிக் காலம் வரை முகம்மது நபியின் வலக்கரமாக விளங்கியவர்.

இறக்கும் தறுவாயில், அபூபக்கரே தமக்குப்பின் உமர்தான் கலீஃபாவாக வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றதனால், கி.பி. 634-ல் உமர் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் பெருந்தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். ராஜாங்க ரீதியில் படையெடுப்புகள் மூலம் சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட விரிவான மதப்பிரசாரங்கள், குர் ஆனை உலகறியச் செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், முகம்மது நபியின் வாழ்வில் நடந்த சம்பவங்கள், அவரது பொன்மொழிகளைத் திரட்டும் பணியை மேற்கொள்ளுதல் போன்ற பல காரியங்கள் உமரின் காலத்தில்தான் ஆரம்பமாயின.

ஜெருசலேத்தில் கால்வைத்த முதல் இஸ்லாமியச் சக்ரவர்த்தி உமர்தான். அது கி.பி. 638-ம் ஆண்டு நடந்தது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 3 பெப்ரவரி, 2005

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *