863.”இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கினார்கள். அதற்காக பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கியது போல் நான் மதீனாவைப் புனித நகராக்கினேன். இப்ராஹீம் (அலை) மக்காவிற்காக பிரார்த்தித்தது போல் நான் மதீனாவிற்காக அதன் ஸாவு, முத்து ஆகியவற்றில் (பரக்கத்துக்காக) பிரார்த்தித்தேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
864. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ தல்ஹா (ஸைத் இப்னு ஸஹ்ல் (ரலி) அவர்களிடம், ‘உங்கள் சிறுவர்களில் ஒருவரை எனக்குச் சேவகம் செய்ய அழைத்து வாருங்கள்” என்று கூறினார்கள். உடனே அபூ தல்ஹா (ரலி) (தம் வாகனத்தில்) என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு புறப்பட்டார்கள். எனவே, நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குச் சேவகம் புரிந்துவந்தேன். அவர்கள் (வழியில் எங்கேனும்) இறங்கித் தங்கும் போதெல்லாம் ‘இறைவா! துக்கம், கவலை, ஆற்றாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன்சுமை, மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று அதிகமாகப் பிரார்த்தனை புரிவதை நான் செவியேற்றுள்ளேன். நாங்கள் கைபரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வரை நான் அவர்களுக்குச் சேவகம் செய்து கொண்டேயிருந்தேன். ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை (கைபர் போர்ச் செல்வத்தில் தம் பங்காகத்) தேர்ந்தெடுத்துக்கொண்ட பின் அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவுக்காக ஓர் ‘அங்கியால்’ அல்லது ‘ஒரு போர்வையால்’ தமக்குப் பின்னே திரை அமைத்துப் பிறகு அவர்களைத் தமக்குப் பின்னால் (வாகனத்தில்) அமர்த்திக் கொள்வதை பார்த்தேன். நாங்கள் ‘(சத்துஸ்) ஸஹ்பா’ எனும் இடத்தை அடைந்தபோது அவர்கள் ‘ஹைஸ்’ எனும் பலகாரத்தைத் தயாரித்து ஒரு தோல் விரிப்பில் வைத்தார்கள். பிறகு என்னை அவர்கள் அனுப்பிட நான் (வலீமா விருந்திற்காக) மக்களை அழைத்தேன். அவர்கள் வந்து விருந்து சாப்பிட்டார்கள். அது (அன்னை) ஸஃபிய்யா (ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தொடங்கிய(தற்கு அளித்த வலீமா – மணவிருந்)தாக அமைந்தது. பிறகு அவர்கள் முன்னேறிச் செல்ல அவர்களுக்கு ‘உஹத்’ மலை தென்பட்டது. அவர்கள், ‘இது நம்மை நேசிக்கிற ஒரு மலை. இதை நாமும் நேசிக்கிறோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனா நகரை நெருங்கிவிட்டபோது ‘இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனிதமானதாக அறிவித்ததைப் போன்று மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையேயுள்ள அதன் நிலப்பரப்பை நான் புனிதமானதாக அறிவிக்கிறேன். இறைவா! மதீனாவாசிகளின் ‘ஸாஉ’ மற்றும் அவர்களின் ‘முத்(து)’ ஆகிய அளவைகளில் அவர்களுக்கு வளத்தைக் கொடுப்பாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.
865. நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவைப் புனித நகரமாக அறிவித்தார்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்; இன்ன இடத்திலிருந்து இன்ன இடம் வரை (மதீனா புனிதமானது என்று நபியவர்கள் அறிவித்தார்கள். மேலும், சொன்னார்கள்:) அதன் மரம் (எதுவும்) வெட்டப்படக்கூடாது. அதில் யார் புதிதாக (மார்க்கத்தில் இல்லாத செயல்) ஒன்றை உருவாக்குகிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் உண்டாகட்டும்” என்று கூறினார்கள் என பதிலளித்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள் வழியாக வரும் மற்றோர் அறிவிப்பில், ‘அல்லது புதியவற்றைப் புகுத்துபவனுக்குப் புகலிடம் அளிக்கிறவன் மீது” என்று வந்துள்ளது.
866. ”இறைவா! மதீனாவாசிகளின் முகத்தலளவையில் நீ பரக்கத்தை (அருள் வளத்தை) அளிப்பாயாக! குறிப்பாக அவர்களின் ஸாவு, முத்து ஆகியவற்றில் நீ பரக்கத்தை அளிப்பாயாக!”என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
867. ”இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய பரக்கத்தைப் போல் இரண்டு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
868. அலீ (ரலி) அவர்கள் சுட்ட செங்கற்களாலான ஒரு சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று எங்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் வாள் ஒன்றை வைத்திருந்தார்கள். அதில் ஓர் ஏடு தொங்க விடப்பட்டிருந்தது. அவர்கள் (தம் உரையில்), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தையும் இந்த ஏட்டையும் தவிர ஓதப்படுகிற நூல் எதுவும் எங்களிடம் இல்லை” என்று கூறிவிட்டு, அதை விரித்துக் காட்டினார்கள். அதில் (உயிரீட்டுத் தொகையாகத் தரப்பட வேண்டிய) ஒட்டகங்களின் வயது விவரங்கள் இருந்தன. மேலும், அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது மதீனா நகரம் ‘அய்ர்’ எனும் மலையிலிருந்து இன்ன (ஸவ்ர்) இடம் வரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்துகிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் புரிந்த கடமையான வழிபாட்டையும் கூடுதலாக வழிபாட்டையும் அவனிடமிருந்து அல்லாஹ் ஏற்கமாட்டான். முஸ்லிம்களில் யார் அடைக்கலம் அளித்தாலும் அது ஒன்றேயாகும் (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்). அவர்களில் கீழ்நிலையில் உள்ளவர்கள் கூட அடைக்கலம் அளிக்க முன்வரலாம். ஒரு முஸ்லிம் அளித்த அடைக்கலத்தை யாரேனும் முறித்தால் அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வணக்கம், கூடுதலான வணக்கம் எதையுமே அல்லாஹ் ஏற்க மாட்டான். தன்னை விடுதலை செய்த எசமானர்களின் அனுமதியின்றி வேறு யாரையேனும் வாரிசுகளாக ஆக்கிக் கொள்ளும் அடிமையின் மீது அல்லாஹ்வின் சாபமும் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வணக்கம், கூடுதலான வணக்கம் எதையுமே அல்லாஹ் ஏற்கமாட்டான்.
869. மதீனாவில் மான்கள் மேய்ந்து கொண்டிருக்க நான் கண்டால், அவற்றை (விரட்டவோ, பிடிக்கவோ முயன்று) பீதிக்குள்ளாக்க மாட்டேன். (ஏனெனில்) ‘மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்டவை புனிதமானவை!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
870. நபி (ஸல்) அவர்கள், ‘இறைவா! மக்கா நகரை எங்கள் நேசத்திற்குரியதாக நீ ஆக்கியதைப் போன்று மதீனாவையும் எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை ‘ஜுஹ்ஃபா’ எனும் பகுதிக்கு நீ இடம்பெயரச் செய்திடுவாயாக! இறைவா! (எங்களுடைய அளவைகளான) ஸாஉ, முத்(து) ஆகியவற்றில் (அதாவது எங்கள் உணவில்) எங்களுக்கு நீ செழிப்பை (பரக்கத்) ஏற்படுத்துவாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.