1069. என் நண்பர்கள் என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, தமக்காக (பயண) வாகனம் கேட்கும்படி அனுப்பினார்கள். அப்போது அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் உஸ்ரா(ப் போரின்) படையுடன் செல்லவிருந்தனர் – உஸ்ராப் போரே தபூக் போராகும் – அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் நண்பர்கள் தமக்காக வாகனம் கேட்கும்படி என்னைத் தங்களிடம் அனுப்பி வைத்துள்ளனர்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு எந்த வாகனத்தையும் என்னால் தரவியலாது” என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கோபத்திலிருந்த சமயத்தில் நான் அவர்களிடம் சென்றுவிட்டேன். நான் அதை அறிந்திருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் (வாகனம் தர) மறுத்ததனாலும் என் மீது அவர்கள் வருத்தம் கொண்டிருப்பார்கள் என்ற அச்சத்தினாலும் நான் கவலை கொண்டவனாகத் திரும்பினேன். நபி (ஸல்) அவர்கள் கூறியதை என் நண்பர்களிடம் வந்து தெரிவித்தேன். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள், ‘அப்துல்லாஹ் இப்னு கைஸே!” என்று பிலால் (ரலி) அழைப்பதைக் கேட்டேன். உடனே நான் பதிலளித்தேன். அப்போது அவர்கள், ‘உங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கிறார்கள். அவர்களின் அழைப்பை ஏற்றுச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது அவர்கள், ‘ஒரே ஈற்றில் பிறந்த இந்த இரண்டு ஒட்டகங்களையும், ஒரே ஈற்றில் பிறந்த இந்த இரண்டு ஒட்டகங்களையும்…” என்று ஆறு ஒட்டகங்களைக் காட்டி, ‘பிடித்துக்கொள்” என்று கூறினார்கள்.
அவற்றை அப்போதுதான் ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார்கள். உங்கள் நண்பர்களிடம் இவற்றை (ஒட்டிக்) கொண்டு சென்று அவர்களிடம், ‘அல்லாஹ்’ அல்லது ‘இறைத்தூதர்’ அவர்கள் இந்த ஒட்டகங்களை உங்கள் பயணத்திற்காக அளித்துளளார்கள். எனவே, இவற்றிலேறிப் பயணம் செய்யும்படி சொல்லக் கூறினார்கள்’ எனத் தெரிவியுங்கள்” என்று கூறினார்கள். அவர்களிடம் நான் அவற்றை(ஓட்டி)க் கொண்டு சென்று, ‘நபி (ஸல்) அவர்கள் இவற்றின் மீது உங்களைப் பயணம் செல்லும்படி கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் சிலர் என்னுடன் வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (‘நான் எந்த வாகனமும் தர மாட்டேன்’ என்று) கூறியதைக் கேட்டவர்களிடம் விசாரிக்கும் வரையில் உங்களை நான் விடமாட்டேன். ஏனெனில், நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை உங்களிடம் சொல்லிவிட்டதாக நீங்கள் நினைத்துவிடக் கூடாதல்லவா?’ எனக் கூறினேன். அதற்கு என் நண்பர்கள், ‘(அதற்கெல்லாம் அவசியமில்லை.) உங்களை உண்மையாளர் என்றே நாங்கள் கருதுகிறோம். (இருந்தாலும், நீங்கள் விரும்புகிறீர்கள் என்ற காரணத்தால்) நீங்கள் விரும்பியபடி நாங்கள் செய்கிறோம்” என்று கூறினார்கள். நான் அவர்களுக்குத் தரமாட்டேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (முதலில்) மறுத்ததையும், பிறகு அவர்களே தந்ததையும் அறிந்த சிலரிடம் அழைத்துச் சென்றேன். அப்போது அந்தச் சிலர், நான் மக்களிடம் சொன்னதைப் போன்றே கூறினார்கள்.
1070. நாங்கள் அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது கோழிக்கறிச் சாப்பாடு வந்தது. அவர்களிடம் தைமுல்லாஹ் குலத்தைச் சேர்ந்த சிவப்பான மனிதர் ஒருவர் இருந்தார். அவர் (ரோம நாட்டவரிடையேயிருந்து பிடித்துக் கொண்டு வரப்பட்ட) போர்க் கைதிகளில் ஒருவரைப் போல் காணப்பட்டார். அபூ மூஸா (ரலி) அந்த மனிதரை உணவு உண்ண அழைத்தார். அதற்கு அந்த மனிதர், ‘இந்தக் கோழி (அசுத்தம்) எதையோ தின்பதை பார்த்தேன். அது எனக்கு அருவருப்பையுண்டாக்கவே இதை இனி உண்பதில்லை என்று சத்தியம் செய்து விட்டேன்” என்றார். இதைக் கேட்ட அபூ மூஸா (ரலி), ‘இங்கே வா! இதைப் பற்றி உனக்கு (நபி (ஸல்) அவர்களிடமிருந்து) அறிவிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுக் கூறலானார்கள்: நான் அல்லாஹ்வின் தூதரிடம் எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல ஒட்டகங்கள் ஏற்பாடு செய்யும்படி கேட்டுச் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் இல்லை” என்றார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. உடனே எங்களைக் குறித்து, ‘அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே?’ என்று கேட்டுவிட்டு, எங்களுக்கு வெள்ளைத் திமில்கள் கொண்ட கொழுத்த (மூன்று வயதிலிருந்து பத்து வயதிற்குட்பட்ட) ஒட்டகங்களைத் தரும்படி உத்தரவிட்டார்கள். நாங்கள் (அதைப் பெற்று) சென்று கொண்டிருந்தபோது, நாங்கள் எங்களுக்குள், ‘நாம் என்ன காரியம் செய்து விட்டோம். (நமக்குக் கொடுக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய பின் மீண்டும் இவற்றை நாம் வாங்கிச் சென்றால்) இவற்றில் நமக்கு பரக்கத் (அருள் வளம்) வழங்கப்படாதே” என்று பேசிக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்றோம். ‘நாங்கள் தங்களிடம், ‘நாங்கள் பயணம் செய்ய எங்களுக்கு ஒட்டகங்கள் கொடுங்கள்” என்று கேட்டோம். ‘நாங்கள் ஏறிச் செல்ல ஒட்டகம் கொடுக்க முடியாது’ என்று நீங்கள் சத்தியம் செய்தீர்களே மறந்து விட்டீர்களா?’ என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பவில்லை. மாறாக, அல்லாஹ் தான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒரு வாக்குக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாததை அதை விடச் சிறந்ததாகக் கருதும் பட்சத்தில், சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்து அதற்காகப் பரிகாரம் செய்து விடுவேன்” என்றார்கள்.
1071. நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘அப்துர் ரஹ்மான் இப்னு சமுராவே! ஆட்சிப் பொறுப்பை நீயாக (ஆசைப்பட்டு)க் கேட்காதே! ஏனெனில், (நீ) கேட்டதால் அது உனக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவனின் உதவி கிட்டாது.) கேட்காமல் அது உனக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உனக்கு (இறைவனின்) உதவி அளிக்கப்படும். நீ ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீ கருதினால் உன்னுடைய சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடு. சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்து” என்றார்கள்.