Featured Posts

எல்லோரும் கொண்டாடுவோம்…!

புத்தாண்டைக் கொண்டாட தயாராக இருப்பீர்கள்.ஆண்டு முழுவதும் மாடாய் உழைத்துவிட்டு நல்ல/கெட்டபடியாகக் கழிந்த 2007 ஐ வழியனுப்பும் விதமாக நள்ளிரவு 11:59 ஐ ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறீர்கள். இதோ இன்னும் சில நிமிடங்களில் நம்முடன் இருந்த 365 முழு நாட்களுக்கு விடைகொடுத்து அடுத்த _?_ நாட்களை எதிர் நோக்கி இருக்கிறோம்.

2007 ஆம் ஆண்டின் பரவசத்துடன் திக்… திக்..இதயத்துடன் நிசப்தமான நிமிடங்களுக்காக காத்திருப்பவர்களின் சிந்தனைக்கு! இந்த வருடம் பதில் சொல்லா விட்டாலும் பரவாயில்லை. 2008 டிசம்பர் 31 க்குள் சொன்னால் போதும்.

1) தமிழ்பண்பாடு, இந்தியக் கலாச்சாரம் என்று வருடம் முழுதும் வாய்கிழிய பேசும் அரசியல்வாதிகளே!புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பது இந்திய/தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அங்கமல்ல என்பது தெரிந்திருந்தும், ஏன் ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று வாய்ஜாலம் காட்டுகிறீர்கள்?

2) “மது – நாட்டுக்கு,வீட்டுக்கு,உடலுக்குத் தீங்கு” என்று என்று விளம்பரம் செய்யும் அரசாங்கமே! புத்தாண்டிலிருந்து மதுவிலக்கு அமல் படுத்தப்படும் என்று சட்டம் இயற்றத் தயங்குவது ஏன்?

3) ஆணுக்கு இணையாக சமஉரிமை கோரும் பெண்களே! மதுப்புட்டியுடன் இடைவெளியின்றி ஆணுடன் இணைந்து நடனமாடுவதிலா உங்கள் சமஉரிமை உள்ளது? உங்கள் இதயத்தைக் கொள்ளை கொண்ட அன்பிற்குறியவர் மது அரக்கனிடம் கொள்ளை போக அனுமதிக்கலாமா?

4)பள்ளிகளில் பாலியல் கல்வி கோரும் கணவான்களே! உங்கள் பாலியல் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை புத்தாண்டுக் கொண்டாடங்களிலிருந்து தொடங்கலாமே?

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் – மேற்கத்திய முதலாளிகள் வயிறு நிரப்பக் கண்டுபிடித்த யுக்தி. நம் கரங்களில் பீர் (BEER)பொங்கினால்தான் அவர்கள் விட்டில் சோறு பொங்கச் செய்யும் வணிகத் தந்திரம்!

உலகமே புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேற்கக் காத்திருக்கும் இந்நாளில் இப்படி ஒரு அபசப்பதிவு தேவையா? என்ற தயக்குத்துடனேயே எழுதினேன். கொண்டாட்டம் என்பது மற்றவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுப்பது என்று சொல்லப்படுவது உண்மையென்றால்,

“புத்தாண்டுக் கொண்டாட்டம்” என்பது அடுத்தவன் பசித்திருக்க நாம் மட்டும் கொண்டாடும் சுயநலக் கொண்டாட்டம் அல்ல; காகித வாழ்த்து அட்டைகள் உங்கள் அன்பின் தூதுவர்கள் அல்ல! வாழ்த்து அட்டை வாங்கச் செலவிடும் 10 ரூபாயை ஏழையின் ஒருநாள் உணவுக்குச் செலவிட்டுக் கொண்டாடலாமே!

அரைகுறை ஆடையுடன் ஆடினால்தான் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் கவரப்படுவோம் என்று ஆடைகுறைக்கத் தயாராகும் மங்கையரே! உடுத்த உடையின்றி மார்கழிக் குளிரில் வீதியில் சுருண்டு படுத்திருக்கும் ஏழைச் சிறுமிக்கு அதேயளவு ஆடையை புத்தாண்டுப் பரிசளித்து,வருடம் முழுவதும் கொண்டாடச் செய்யலாமே!

எரிபொருளை நிரப்பிக் கொண்டு நள்ளிரவு சாகசத்திற்குக் பைக்கில் கிளம்பும் இளைஞர்களே! விலைவாசி உயர்வுக்கு நீங்கள் வீணடிக்கும் பெட்ரோலும் ஒரு காரணம்! உங்கள் பைக்கின் டேங்கை நிரப்பச் செலவளிக்கும் பணத்தில் ஏழையின் ஒருமாத அடுப்பெரியும் மண்ணெண்னை வாங்கலாம் என்பதையும் நினைவில் கொள்வீர்!

என்ன நண்பர்களே! புத்தாண்டைக் கொண்டாட தயாராவோமா!

2 comments

  1. நல்லதைச் சொல்வோம்! தீயதை முடிந்தவரை தடுப்போம்!! நல்ல சிந்தனைப் பதிவு!!!

  2. சுட்டுவிரல்

    //எரிபொருளை நிரப்பிக் கொண்டு நள்ளிரவு சாகசத்திற்குக் பைக்கில் கிளம்பும் இளைஞர்களே! விலைவாசி உயர்வுக்கு நீங்கள் வீணடிக்கும் பெட்ரோலும் ஒரு காரணம்! உங்கள் பைக்கின் டேங்கை நிரப்பச் செலவளிக்கும் பணத்தில் ஏழையின் ஒருமாத அடுப்பெரியும் மண்ணெண்னை வாங்கலாம் என்பதையும் நினைவில் கொள்வீர்!

    என்ன நண்பர்களே! புத்தாண்டைக் கொண்டாட தயாராவோமா!//

    புத்தாண்டை வரவேற்கிறேன் பேர்வழி என்ற பெயரில் தாந்தோன்றித்தனமாகக் கொண்டாடுபவர்களுக்கு பொருத்தமான அறிவுரை இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *