Featured Posts

விபச்சாரம் புரிந்தோர்க்கு கல்லெறி தண்டனை.

1104. யூதர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தாரிடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில் என்ன காண்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கவர்கள், ‘அவர்களை நாம் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்கள். உடனே, (யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் இப்னு சலாம் (ரலி) ‘நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபசாரம் செய்தவர்களை சாகும்வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் ‘விபசாரிகளுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்படவேண்டும்’ என்று கூறும் வசனத்தின் மீது தன்னுடைய கையை வைத்து மறைத்து, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார். அப்போது அப்துல்லாஹ் இப்னு சலாம் (ரலி), ‘உன் கையை எடு” என்று சொல்ல, அவர் தன்னுடைய கையை எடுத்தார். அப்போது அங்கே (விபசாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படி கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு சலாம் உண்மை கூறினார். முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத்தான் செய்கிறது” என்று கூறினார்கள். உடனே, அவ்விரண்டு பேரையும் சாகும்வரை கல்லால் அடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காக தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவளின் மீது கவிழ்ந்து (மறைத்துக்) கொள்வதை பார்த்தேன்.

புஹாரி :3635 இப்னுஉமர் (ரலி).

1105. நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம் ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை வழங்கினார்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஆம்’ (வழங்கினார்கள்) என்று பதிலளித்தார்கள். நான், ‘(குர்ஆனின் 24 வது அத்தியாயமான) ‘அந்நூர்’ அத்தியாயம் அருளப்படுவதற்கு முன்பா அல்லது அதற்குப் பின்பா (எப்போது கல்லெறி தண்டனை வழங்கினார்கள்)?’ என்று கேட்டேன். அவர்கள் ‘எனக்குத் தெரியாது” என்றார்கள்.

புஹாரி :6813 அஷ்ஷைபானி (ரலி).

1106. ”ஓர் அடிமைப் பெண் விபச்சாரம் செய்து, அது நிரூபணமானால் அவளுக்கு. எஜமானன் கசையடி கொடுக்கட்டும்! (அவளை தண்டித்துவிட்டதால்) குற்றம் சொல்ல வேண்டாம்! பிறகு மறுபடியும் அவள் விபச்சாரம் செய்தால் அவளுக்குக் கசையடி கொடுக்கட்டும்! குற்றம் சொல்ல வேண்டாம்! மூன்றாம் முறையும் விபச்சாரம் செய்தால் அவளை (அவளுடைய எஜமானன்) முடியாலான ஒரு கயிற்றுக்காகவாவது விற்று விடட்டும்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2152 அபூஹுரைரா (ரலி)

1107. ”ஓர் அடிமைப் பெண் கற்புடனிருக்காமல் விபச்சாரம் செய்தால்… (என்ன செய்ய வேண்டும்?)” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ‘அவள் விபச்சாரம் செய்தால் கசையடி கொடுங்கள்; (அதற்குப்) பிறகும் விபச்சாரம் செய்தால் கசையடி கொடுங்கள்; மீண்டும் விபச்சாரம் செய்தால் அவளை ஒரு முடிக் கற்றைக்காவது விற்றுவிடுங்கள்!” என்றார்கள்.

புஹாரி :2153 அபூஹூரைரா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *