Featured Posts

போர் வெற்றிப் பொருட்கள் ஆகுமானது.

1141. இறைத்தூதர்களில் ஒருவர் புனிதப் போருக்குச் சென்றார். அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம், ‘ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்றவன் அவளுடன் வீடு கூட விரும்பி இன்னும் கூடாமல் இருப்பானாயின் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். வீடு கட்டி முடித்து, அதன் முகட்டை (இன்னும்) உயர்த்தாமலிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். ஆட்டையோ, பெண் ஒட்டகங்களையோ வாங்கிவிட்டு, அவை குட்டிகள் போடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வரவேண்டாம்” என்று கூறிவிட்டுப் போருக்குச் சென்றார். ஓர் ஊரை (ஜெரிக்கோ நகரை வெள்ளிக்கிழமை) அஸர் தொழுகையின் நேரத்தில் அல்லது சற்றேறக் குறைய அந்த வேளையில் அவர் நெருங்கினார். (சற்று நேரத்தில் சூரியன் மறையத் தொடங்க, சனிக் கிழமை போரிடுவது அவர்களுக்கு தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் தோற்றுப் போக நேரிடுமே என்றஞ்சி) சூரியனை நோக்கி, ‘நீ இறைவனின் கட்டளைப்படி இயங்குகிறாய். நானும் இறை கட்டளைப்படி நடக்க வேண்டியவன் ஆவேன்” என்று கூறிவிட்டு, ‘இறைவா! சூரியனை (உடனே மறைய விடாமல்) தடுத்து விடு” என்று பிரார்த்தித்தார். எனவே, அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை வழங்கும் வரை அது தடுத்து நிறுத்தப்பட்டது. (வெற்றி பெற்ற) பிறகு அந்த இறைத்தூதர் போரில் கிடைத்த பொருட்களை ஒன்றாகச் சேகரித்தார். அப்போது அதை (எரித்துக் கருக்கி) உண்பதற்கு (வானிலிருந்து) நெருப்பு வந்தது. ஆனால், அவற்றை அது உண்ணவில்லை. எனவே, அந்த இறைத்தூதர் ‘உங்களிடையே (இந்தப் பொருட்களிலிருந்து) திருட்டுப் பொருள் ஏதோ ஒன்று உள்ளது. எனவே, ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவர் என்னிடம் உறுதி மொழி கொடுக்கட்டும்” என்று கூறினார். (உறுதி மொழி கொடுத்துக் கொண்டிருந்த போது) ஒரு மனிதனின் கை இறைத் தூதரின் கையோடு ஒட்டிக்கொண்டது. அப்போது இறைத்தூதர், ‘உங்களிடையே தான் திருடப்பட்ட பொருள் உள்ளது. எனவே, உன்னுடைய குலத்தார் என்னிடம் உறுதிமொழி கொடுக்கட்டும்” என்று கூறினார். (அவ்வாறே அவர்கள் கொடுக்க) இரண்டு மனிதர்களின் கை அல்லது மூவருடைய கை அவரின் கையுடன் ஒட்டிக் கொண்டது. அப்போது அவர், ‘உங்களிடையே தான் திருடப்பட்ட பொருள் உள்ளது” என்றார். எனவே, அம்மக்கள் தங்கத்தாலான பசுமாட்டுத் தலை ஒன்றைக் கொண்டு வந்து அதை வைத்தனர். நெருப்பு வந்து அதைத் தின்றுவிட்டது. பிறகு அல்லாஹ், போரில் கிடைக்கும் பொருட்களை (எடுத்துக் கொண்டு பயன்படுத்த) நமக்கு அனுமதியளித்தான். நம்முடைய பலவீனத்தையும் இயலாமையையும் கண்டு அதை நமக்கு அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3124 அபூஹுரைரா (ரலி).

1142. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைக் குழுவை ‘நஜ்து’ நாட்டை நோக்கி அனுப்பி வைத்தார்கள். அதில் நானும் (ஒருவனாக) இருந்தேன். நாங்கள் நிறைய ஒட்டகங்களைப் போர்ச் செல்வமாகப் பெற்றோம். எங்கள் பங்குங்கள் (ஒவ்வொருவருக்கும்) பன்னிரண்டு ஒட்டகங்கள் அல்லது பதினொரு ஒட்டகங்களாக இருந்தன. எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ஒட்டகம் அதிகப்படியாகத் தரப்பட்டது.

புஹாரி : 3134 நாஃபிஹ் (ரலி).

1143. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அறப் போருக்காகப்) படைக் குழுக்களில் தாம் அனுப்பி வைக்கும் சிலருக்கும் மட்டும் குறிப்பாகக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் பொதுவாகப் படையினருடன் சேர்ந்து பெறுகிற பங்குக்கு மேல் (சற்று) அதிகப்படியாகக் கொடுத்து வந்தார்கள்.

புஹாரி : 3135 இப்னு உமர் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *