Featured Posts

போரில் கொல்லப்பட்டவனின் உடமை கொன்றவனைச் சாரும்.

1144. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுனைன் போர் நடந்த ஆண்டில் (போருக்காக) நாங்கள் புறப்பட்டோம். (எதிரிகளைப் போர்க்களத்தில்) நாங்கள் சந்தித்தபோது (ஆரம்பத்தில்) முஸ்லிம்களுக்குள் பதற்றம் நிலவியது. (அவர்கள் தோல்வியுற்றனர்.) நான் இணைவைப்பவன் ஒருவனைப் பார்த்தேன். அவன் ஒரு முஸ்லிமின் மீது ஏறி உட்கார்ந்து அவரைக் கொல்ல முயன்றான். நான் சென்று அவனைச் வாளால் அவனுடைய (கழுத்துக்குக் கீழே) தோள் நரம்பில் வெட்டினேன். உடனே அவன் (அந்த முஸ்லிமை விட்டுவிட்டு) என்னை இறுக அணைத்தான். அதனால் நான் மரணக் காற்றை சுவாசிக்கலானேன். பிறகு மரணம் அவனைத் தழுவ அவன் என்னை விட்டுவிட்டான். உடனே நான் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களைச் சென்றடைந்து, ‘மக்களுக்கு என்ன நேர்ந்தது? (இப்படிக் களத்திலிருந்து பின்வாங்கி ஓடுகிறார்களே)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘(இது) அல்லாஹ் விதித்த விதி” என்று பதிலளித்தார்கள்.

பிறகு, மக்கள் (அப்பாஸ் (ரலி) அழைத்ததால் போர்க் களத்திற்குத்) திரும்பி வந்தார்கள். (தீரத்துடன் போராடி வென்றார்கள்.) பிறகு, நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து, ‘போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருள்கள் உரியவை” என்று கூறினார்கள். அப்போது நான் எழுந்து நின்று, ‘எனக்கு சாட்சி சொல்வார் யார்?’ என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்து கொண்டேன். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், ‘போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருள்கள் உரியவை” என்று கூறினார்கள். உடனே, நான் எழுந்து நின்று, ‘எனக்கு சாட்சி சொல்வார் யார்?’ என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்து விட்டேன். பிறகு, மூன்றவாது முறையாக அதே போன்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். உடனே, நான் எழுந்தேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அபூ கதாதாவே! உங்களுக்கென்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள்.

நடந்த நிகழ்ச்சியை நான் அவர்களிடம் எடுத்துரைத்தேன். ஒருவர், ‘இவர் உண்மையே சொன்னார், இறைத்தூதர் அவர்களே! இவரால் கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருள்கள் என்னிடம் உள்ளன. எனக்காக அவரை (ஏதாவது கொடுத்துத்) திருப்திப்படுத்தி விடுங்கள்” என்றார். அப்போது அபூ பக்ர் சித்திக் (ரலி), ‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கம் அல்லாஹ்வின் சார்பாகவும் போரிட்டு (தன்னால்) கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுத்த பொருளை உனக்குக் கொடுக்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்” என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘(அபூ பக்ர்) உண்மை சொன்னார்” என்று கூறிவிட்டு அதை எனக்கே கொடுத்துவிட்டார்கள். நான் அந்தப் போர்க் கவசத்தை விற்றுவிட்டு பனூ ஸலமா குலத்தார் வாழும் பகுதியில் ஒரு பேரீச்சந் தோட்டத்தை வாங்கினேன். அதுதான் இஸ்லாத்தைத் தழுவிய பின் நான் சேகரித்த முதல் சொத்தாகும்.

புஹாரி :3142 அபூகதாதா (ரலி).

1145. பத்ருப் போரின்போது நான் (படை) அணியில் நின்றிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் பார்த்தேன். என்னருகே (இரண்டு பக்கங்களிலும்) இள வயதுடைய அன்சாரிச் சிறுவர்கள் இருவர் நின்றிருந்தார்கள். அப்போது, ‘அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா’ என்று நான் ஆசைப்பட்டேன். அவர்களில் ஒருவர் என்னை நோக்கிச் கண் சாடையிட்டு, ‘என் பெரிய தந்தையே! நீங்கள் ஆபூ ஜஹ்லை அறிவீர்களா?’ என்று கேட்டார். நான், ‘ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரர் மகனே!” என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர், ‘அவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனுடைய உடலை என்னுடைய உடல் பிரியாது (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்)” என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண்சாடை காட்டி முதல் சிறுவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூ ஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு, ‘இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி!” என்று கூறினேன். உடனே, இருவரும் தங்கள் வாட்களை எடுத்து போட்டி போட்டபடி (அவனை நோக்கிச்) சென்று அவனை வெட்டிக் கொன்றுவிட்டார்கள். பிறகு, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூ ஜஹ்லைக் கொன்றுவிட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் யார் அவனைக் கொன்றது?’ என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொரு வரும், ‘நானே (அவனைக் கொன்றேன்)” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா?’ என்று கேட்டார்கள். இருவரும், ‘இல்லை” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்துவிட்டு, ‘நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள். (முஆத் இப்னு அம்ர்டைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) ‘அபூ ஜஹ்லுடைய உடலில் இருந்து எடுத்த பொருள்கள் முஆத் இப்னு அம்ர் இப்னி ஜமூஹுக்கு உரியவை” .அவர்கள் இருவர் முஆத் இப்னு அம்ர் இப்னி ஜமூஹ் (ரலி) முஆத் இப்னு அஃப்ரா (ரலி) அவர்களும் ஆவர்.

புஹாரி :3141 அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *