Featured Posts

போதை தரும் பானங்கள் பற்றி…

குடி பானங்கள்

1292. பத்ருப் போரின்போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து என்னுடைய பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத் தந்திருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவுடன் (முதன் முதலாக) வீடு கூட விரும்பியபோது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரை, என்னுடன் வந்து ‘இத்கிர்’ புல்லைக் கொண்டு வர ஏற்பாடு செய்திருந்தேன். அந்தப் புல்லைப் பொற்கொல்லர்களுக்கு விற்று அந்தப் பணத்தை என் மணவிருந்துக்குப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். நான் என் ஒட்டகங்களுக்கான சேண இருக்கைகளையும் தீனிப் பைகள், மற்றும் கயிறுகளையும் சேகரிக்கலானேன். அப்போது என் இரண்டு ஒட்டகங்களும் அன்சாரி ஒருவரின் அறையின் அருகே மண்டியிட்டு அமரச் செய்யப்பட்டிருந்தன. நான் சேகரிக்க விரும்பியவற்றைச் சேகரித்துவிட்டபோது திரும்பி வந்தேன். அப்போது என் இரண்டு ஒட்டகங்களின் திமில்களும் துண்டிக்கப்பட்டிருந்தன. அவற்றின் இந்த (அவலக்) காட்சியைக் கண்டபோது என்னால் என் கண்களைக் (கண்ணீர் சிந்த விடாமல்) கட்டுப்படுத்த முடியவில்லை. நான், ‘இதையெல்லாம் செய்தவர் யார்?’ என்று கேட்டேன். மக்கள், ‘ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப் தான் இப்படிச் செய்துவிட்டார். அவர் இந்த வீட்டில் அன்சாரிகளின் மது அருந்தும் குழு ஒன்றில் தான் இருக்கிறார்” என்று பதிலளித்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களிடம் ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ஹம்ஸா (ரலி) அவர்களின் செயலால் நான் அடைந்த வேதனை என் முகத்தில் தென்பட, அதைப் புரிந்து கொண்டார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள், ‘உங்களுக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! இன்றைய நாளைப் போன்ற (பயங்கரமான) ஒரு நாளை ஒருபோதும் நான் பார்த்ததில்லை. ஹம்ஸா என் இரண்டு ஒட்டகங்களையும் தாக்கி அவற்றின் திமில்களை அறுத்துவிட்டார். அவற்றின் (அடிவயிற்று) இடுப்புப் பகுதிகளை (வாளால்) கிழித்துவிட்டார். அவர் இப்போது ஒரு வீட்டில் மது அருந்தும் நண்பர்கள் குழுவுடன் இருக்கிறார்” என்று சொன்னேன். உடனே, நபி (ஸல்) அவர்கள் தங்களின் அங்கி ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி அதையணிந்து நடந்து செல்ல, அவர்களை நானும் ஸைத் இப்னு ஹாரிஸாவும் பின்தொடர்ந்து சென்றோம். ஹம்ஸா இருந்த வீட்டிற்கு வந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்டார்கள். அவர்களும் நபிக்கு அனுமதி கொடுத்தார்கள். அங்கே அவர்கள் (அனைவரும்) மது அருந்திக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹம்ஸாவை அவர் செய்த காரியத்திற்காகக் கண்டிக்கத் தொடங்கினார்கள். ஹம்ஸாவின் இரண்டு கண்களும் சிவந்திருக்க, அவர் போதையுற்று விட்டிருந்தார். ஹம்ஸா, அல்லாஹ்வின் தூதரைப் பார்த்துப் பார்வையை உயர்த்தி அவர்களின் இரண்டு முழங்கால்களையும் பார்த்தார்; பிறகு பார்வையை உயர்த்தி, அவர்களின் வயிற்றுப் பகுதியைப் பார்த்தார். பிறகு, ‘நீங்கள் என் தந்தையின் அடிமைகள் தாமே?’ என்று கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, தாம் வந்த வழியே (திரும்பாமல்) அப்படியே பின் வாங்கிச் சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.

புஹாரி : 3091 அலீ (ரலி).

1293. நான் அபூ தல்ஹா (ரலி) வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன். அந்த நாள்களில் பேரீச்சம் பழ மதுவை (பேரீச்ச மரக்கள்ளை)யே அவர்கள் குடித்து வந்தனர். (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பட்டவுடன்), இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, ‘(மக்களே!) மது தடை செய்யப்பட்டுவிட்டது” என்று அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அபூ தல்ஹா (ரலி) என்னிடம், ‘வெளியே சென்று இதை ஊற்றிவிடு” என்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது. மக்களில் சிலர், ‘மது தங்கள் வயிறுகளில் இருக்கும் நிலையில் பல பேர் கொல்லப்பட்டிருக்கிறார்களே! (அவர்களின் நிலை என்ன?)” என்று கேட்டார்கள். அப்போதுதான், ‘இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறவர்கள் (முன்னர்) எதையும் உண்டவை பற்றி அவர்களின் மீது குற்றமில்லை” (திருக்குர்ஆன் 05:93) என்னும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டது.

புஹாரி : 2464 அனஸ் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *