நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 48
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம், யூதர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்தபோதிலும் ஒரு நாடகம் அல்லது திரைப்படம் போல, அடுத்தடுத்து வெற்றி மேல் வெற்றியாக அவர்களுக்கு வந்து குவிந்துவிடவில்லை. சாண் ஏறி முழம் சறுக்கும் விதமாகத்தான் விதி ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது.
பாலஸ்தீனில் எப்படியும் ஒரு யூத தேசம் உருவாகிவிடும் என்கிற நம்பிக்கையை முதல் உலகப்போரின் இறுதியில் நடைபெற்ற சம்பவங்கள் உணர்த்தினாலும், அப்படி உருவாகும் தேசத்தில் எத்தனை யூதர்கள் இருப்பார்கள் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. ஏனெனில் ஐரோப்பிய யூதர்களில் சுமார் எழுபத்தெட்டு சதவீதம் பேர் பாலஸ்தீனுக்கு வந்துசேர என்ன வழி என்று அப்போதும் யோசித்துக் கொண்டிருந்தார்கள். அந்தந்த தேசங்களின் சட்டதிட்டங்கள், அவரவர் பொருளாதார நிலைமை, சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணம். தவிர, மொத்தம் இத்தனை லட்சம்பேர் என்று ஒரு கணக்குச் சொல்லிவிடமுடியாதபடி ஐரோப்பாவெங்கும் நீக்கமற நிறைந்து பரவியிருந்தார்கள் அவர்கள். பாலஸ்தீனில் அமையவிருக்கும் யூத தேசத்தின் ‘கொள்ளளவு’ எவ்வளவு என்பதும் அப்போது துல்லியமாகத் தெரியாதல்லவா?
அந்த வகையில், என்ன ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று பால்ஃபர் பிரகடனம் அறிவிக்கப்பட்டவுடனேயே பாலஸ்தீனுக்குக் கிளம்பி வந்த யூதர்கள் ஒருவகையில் அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் சொல்லவேண்டும். வெறும் நம்பிக்கை ஒன்றை மட்டும் பற்றுக்கோலாகப் பிடித்துக்கொண்டு வந்தவர்கள் அவர்கள். புதிய தேசம், புதிய சூழ்நிலை, புதிய ஆட்சி என்றாலும் பழைய நம்பிக்கை ஒன்று அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.
எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்; அப்புறம் கிளம்பிப்போகலாம் என்று காத்திருந்த யூதர்களுக்குத்தான் சிக்கல் ஏற்பட்டுவிட்டது.
சிக்கலின் பெயர் ஹிட்லர். ஒரு விஷயத்தை முதலில் தெளிவுபடுத்திக் கொண்டுவிடவேண்டும். ஹிட்லரால் ஜெர்மானிய யூதர்களுக்கு மட்டும்தானே பிரச்னை ஏற்பட்டது என்று மேலோட்டமாகப் பார்க்கும்போது தோன்றலாம். ஆனால் ஹிட்லரின் நாடுபிடிக்கும் வேட்கையின் விளைவாக, அவர் பதவிக்கு வந்த சூட்டில் அக்கம்பக்கத்து ஐரோப்பிய நாடுகள் அத்தனையையும் கபளீகரம் செய்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது.
முதலில் லேசாக ஆஸ்திரியா, செக்கஸ்லோவாக்கியா, போலந்து என்று ஆரம்பித்தவர் டென்மார்க், நார்வே, பெல்ஜியம், ஹாலந்து, பிரான்ஸில் கொஞ்சம், ருமேனியாவில் கொஞ்சம் என்று கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட ஐரோப்பாவை தன்வசப்படுத்திவிட்டிருந்தார்.
ஹிட்லருக்கு இரண்டு லட்சியங்கள் இருந்தன. முதலாவது ஐரோப்பா முழுவதையும் ஆளவேண்டும் என்பது. இரண்டாவது, தன் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களில் மட்டுமாவது ஒரு யூதரும் இருக்கக் கூடாது என்பது.
ஹிட்லரின் யூத வெறுப்புக்குப் பிரத்தியேகக் காரணங்கள் ஏதும் கிடையாது. அவர் ஒரு சரியான ஆரிய மனோபாவம் கொண்டவர். ஆரிய மனோபாவம் என்றால், ஆரியர்கள் மட்டுமே ஆளப்பிறந்தவர்கள் என்கிற மனோபாவம். அதுசரி, யார் ஆரியர்கள்?
ஹிட்லருக்கு இதில் சந்தேகமே இல்லை. அவர்தான் ஆரியர். ஜெர்மானியர்கள் அத்தனை பேரும் ஆரியர்கள். எனில் மற்றவர்கள் எல்லாம்?
ஆரியர்களுக்கு எதிரிகள். அவ்வளவுதான். தீர்ந்தது விஷயம்.
மிகச் சரியாகச் சொல்வதென்றால், 1933-ம் ஆண்டு ஜெர்மனியின் ஆட்சி அதிகாரத்தை ஹிட்லர் கைப்பற்றியதிலிருந்தே ஐரோப்பிய யூதர்களுக்குச் சனிபிடித்தது. அந்த வருடம் ஜனவரி 30-ம் தேதி ஹிட்லர், ஜெர்மனியின் தலையெழுத்தாக ஆனார். அந்த தினமே ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
இதெல்லாம் ஆட்சிக்கு வந்தபின் திட்டமிட்டுச் செய்யப்பட்ட காரியங்கள் என்று பெரும்பாலானோர் நினைத்துக்கொண்டிருப்பார்கள். உண்மையில், ஹிட்லர், ஜெர்மனியின் ஆட்சி பீடத்தில் அமர்வதற்குச் சுமார் பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, இதையெல்லாம் செய்யவேண்டும், இப்படியெல்லாம்தான் செய்யவேண்டும் என்று திட்டமிட்டு வரைபடமே தயாரித்து வைத்துவிட்டிருந்தார் மனத்துக்குள். தனது திட்டங்களின் ஒரு பகுதியைத் தன் வாழ்க்கை வரலாறான ‘மெயின் காம்ஃப்’பிலும் அவர் எழுதியிருக்கிறார்.
ஆகவே, பதவியேற்ற மறுகணமே யூதர்களை ஒழியுங்கள் என்று உத்தரவிடுவதில் அவருக்கு எந்தவிதமான மனச்சங்கடமும் ஏற்படவில்லை.
ஹிட்லரின் கட்சிக்கு ‘National socialist German workers party’ என்று பெயர். சுருக்கமாக இதனை நாஜி என்பார்கள். பெயரில் சோஷலிசம் உண்டே தவிர, யதார்த்தத்தில் ஹிட்லருக்கு அதெல்லாம் அவ்வளவாகப் பிடிக்காது. ஒரு சம்பிரதாயம் கருதி சோஷலிஸ்ட் என்று பெயரில் சேர்த்துக்கொண்டார் போலிருக்கிறது.
கட்சி என்கிறோம். ஆட்சி என்கிறோம். உண்மையில் ஹிட்லரின் நாஜிக்கட்சியில் இருந்த அத்தனை பேரும் ஆயுதம் தாங்குவோராகத்தான் இருந்தார்கள். கட்சியாக உருவெடுத்து, ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பாகவே ஹிட்லருக்கு விசுவாசமாகப் பின்னால் வந்த அடியாள் படையின் பிரும்மாண்ட விஸ்தரிப்பு அது.
நியாய அநியாயங்கள், தர்மம், சட்டம் போன்றவற்றை அவர்கள் எப்போதும் ஒரு பொருட்டாகக் கருதியவர்கள் அல்லர். மாறாக, ஹிட்லர் ஓர் உத்தரவிட்டால் உடனடியாக அதைச் செயல்படுத்துவது ஒன்றுதான் அவர்களது பணி.
அத்தகைய நாஜிகள், ஹிட்லர் ‘யூதர்களை அழியுங்கள்’ என்று சொன்னதுமே அந்த முதல் நாளே வேலையை ஆரம்பித்துவிட்டார்கள்.
இத்தனைக்கும் ஜெர்மானிய யூதர்கள், வந்தேறிகளாகவே இருந்தாலும் சுமார் 1600 வருடப் பாரம்பரியம் கொண்டவர்கள். யூதர்கள் ஐரோப்பாவுக்கு முதல் முதலில் இடம்பெயர்ந்து போன இடங்களுள் ஜெர்மனியும் ஒன்று. என்னதான் மனத்துக்குள் பாலஸ்தீன் தங்கள் சொந்தமண் என்கிற எண்ணம் இருந்தாலும் தலைமுறை தலைமுறையாக ஜெர்மனியிலேயே வாழ்ந்தவர்கள் அவர்கள். ஜெர்மன் கெய்சர் காலம் வரையிலுமே கூட பிரமாதமான பிரச்னைகள் ஏதுமின்றி அங்கே அவர்களால் வாழமுடிந்திருக்கிறது.
யூத எதிர்ப்பு என்பது எல்லா ஐரோப்பிய தேசங்களிலும் எல்லாக் காலங்களிலும் இருந்துவந்ததுதான். ஜெர்மனியிலும் அது இருக்கவே செய்தது என்றாலும் ஹிட்லர் காலத்தில் அது பெற்ற ‘பரிணாம வளர்ச்சி’ அதற்கு முன் வேறெங்கும் எப்போதும் நிகழ்ந்திராதது.
முதல் உலகப்போர் சமயம், ஜெர்மானிய ராணுவத்தில் யூதர்களுக்கான படைப்பிரிவே ஒன்று தனியாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான ஜெர்மானிய யூதர்கள் தம் தேசத்துக்காகப் போரில் பங்குபெற்றார்கள். அவர்களுள் சுமார் பன்னிரண்டாயிரம் யூதர்கள் யுத்தத்தில் இறந்துபோனவர்கள்.
இப்படியான பாரம்பரியம் கொண்ட ஜெர்மன் யூதர்கள், ஹிட்லரின் அதிரடி அறிவிப்பைக் கேட்டு மிகவும் பயந்துபோனார்கள். என்ன செய்யும் அரசு? சில ஆயிரம் பேரைக் கொல்லும். பல ஆயிரம் பேரை நாடு கடத்தும். இது ஒன்றும் புதிதல்ல. எத்தனையோ முறை சந்தித்த பிரச்னைதான் என்று இம்முறையும் அவர்களால் சும்மா இருக்க முடியவில்லை.
காரணம், ஹிட்லர் தமது யூத எதிர்ப்புப் பிரசாரத்தைக் குழந்தைகளிடமிருந்து தொடங்கியிருந்தார்.
பள்ளி மாணவர்களிடையே யூதக் குழந்தைகளை அருகே சேர்க்காதீர்கள் என்னும் பிரசாரம் முதன்முதலில் தூண்டிவிடப்பட்டது. ஜெர்மானியக் குழந்தைகளின் உடம்பில் ஓடுவது புனிதமான ரத்தம். அது ஆரிய ரத்தம். ஆனால் யூதக் குழந்தைகளின் உடலில் ஓடுவது கிட்டத்தட்ட சாக்கடைக்குச் சமானமான ரத்தம் என்று தன் ஆலாபனையைத் தொடங்கினார் ஹிட்லர்.
ஒரு யூதக் குழந்தையின் அருகே அமரும் ஜெர்மானியக் குழந்தைக்கு வியாதிகள் பீடிக்கும் என்று ஆசிரியர்களால் சொல்லித்தரப்பட்டது. ஒரு யூதக்குழந்தை கொண்டு வரும் உணவை ஜெர்மானியக் குழந்தை உண்ணுமானால் அதன் தேச விசுவாசம் கறைபடிந்துவிடும் என்று போதிக்கப்பட்டது.
பள்ளிகளில் யூதக்குழந்தைகளுக்கு தனி இருக்கைகள் போடப்பட்டன. அவர்களுக்கென்று தனியே ஒரு தண்ணீர் டிரம் வைக்கப்பட்டது. அந்த டிரம்மையோ, சங்கிலி போட்டுப் பிணைக்கப்பட்ட அந்தத் தம்ளரையோ, தவறியும் ஒரு ஜெர்மானியக் குழந்தை தொட்டுவிடக்கூடாது. தொட்டால் தீட்டு ஒட்டிக்கொண்டுவிடும் என்று சொல்லப்பட்டது.
இதெல்லாம் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த ஒரு வார காலத்துக்குள் அமலுக்கு வந்த சட்டங்கள். தொடர்ந்து, ஜெர்மானியக் குழந்தைகள் வகுப்பை முடித்துவிட்டுச் சென்றபிறகுதான் யூதக்குழந்தைகளுக்குப் பாடங்கள் தொடங்கும் என்று சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. யூதக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் பயிலும் ஜெர்மானியக் குழந்தைகள் தினசரி வீட்டுக்குப் போனதும் வாசலிலேயே தங்கள் ஆடைகளைக் களைந்துவிட்டு உள்ளே போனதும் வேறு ஆடை அணியவேண்டும் என்று பெற்றோரிடம் சொல்லும் அளவுக்குப் பிஞ்சு உள்ளங்களில் பிரிவினை மிக ஆழமாக ஊன்றப்பட்டது.
உலகில் மூன்று இடங்களில்தான் இம்மாதிரியான ஆதிக்க ஜாதியினரின் அட்டகாசங்கள் சரித்திரத்தில் தலைவிரித்து ஆடியிருக்கின்றன. முதலாவது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை கருப்பர்களுக்கு எதிராக அமெரிக்கர்கள் நிகழ்த்திய கொடுமைகள். இரண்டாவது, இருபதாம் நூற்றாண்டிலும் தலித்துகளுக்கு எதிராக உயர்ஜாதி ஹிந்துக்கள் இந்தியாவில் நிகழ்த்திய காரியங்கள். மூன்றாவது ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராக நாஜிக்கள் செய்தவை.
இவற்றுள் முதல் இரண்டு இடங்களிலும் படுகொலைகள் கிடையாது. அல்லது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு மிகச் சொற்பம். ஜெர்மனியில் அது மிக அதிகம். அது ஒன்றுதான் வித்தியாசம்.
ஹிட்லர் ஆட்சியில் யூதர்களை ‘கவனிக்க’வென்றே இரண்டு சிறப்புப்படைகள் ஏற்படுத்தப்பட்டன. ஒன்று, ‘Gestapo’ என்று அழைக்கப்பட்ட ரகசிய காவல்படை. இரண்டாவது, ‘SS’ என்று அழைக்கப்பட்ட, கருப்பு யூனிஃபார்ம் அணிந்த பாதுகாப்புப்படையினர்.
இந்த இரண்டு படைகளுக்கும் ஹிட்லர் சில சுதந்திரங்கள் வழங்கியிருந்தார். அவர்கள் யாரை வேண்டுமானாலும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யலாம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் எத்தனை காலம் வேண்டுமானாலும் சிறையில் அடைத்து வைத்திருக்கலாம். விசாரணையில் ‘உண்மை வரவழைப்பதன்பொருட்டு’ எந்தவிதமான தாக்குதல் நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம். இறுதியாக யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லாமல், எந்த விசாரணைக் கைதியையும் கொலை செய்யலாம்.
இந்த இரு படையினருக்கும் இருந்த ஒரே ஒரு நிபந்தனை, அவர்கள் ஜெர்மானியர் யாரையும் கைது செய்யக்கூடாது என்பதுதான்!
ஹிட்லர் பதவிக்கு வந்து சரியாக ஐம்பத்தேழாவது நாள் இந்த இரு படைகளும் தம் பணியைத் தொடங்கின. கண்ணில் தென்பட்ட யூதர்கள் அத்தனை பேரையும் இவர்கள் கைது செய்ய ஆரம்பித்தார்கள். கைதுக்குக் காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. காரணம் கேட்டால், அந்த இடத்திலேயே நிற்கவைத்துச் சுட்டுவிடுவார்கள். விசாரணைக்குப் போனால் உயிர் இன்னும் சில தினங்கள் பிழைக்கலாம், அவ்வளவுதான்.
அன்றைக்கு ஜெர்மனியில் வசித்து வந்த யூதர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் பத்து லட்சம் பேர். (ஹிட்லர் பின்னால் படையெடுத்துச் சேர்க்கும் தேசங்களில் வசித்து வந்த யூதர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் கோடியை நெருங்கும்.) அவர்களுள் சுமார் ஐந்து லட்சம் பேர் எப்படியோ தப்பிப்பிழைத்து விட்டார்கள். ஹிட்லர் பதவிக்கு வந்த மிகச் சில தினங்களிலேயே புத்திசாலித்தனமாக, அகப்பட்டவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு தேசத்தை விட்டு அகதிகளாக வெளியேறி மற்ற பல நாடுகளுக்குப் போய்விட்டார்கள்.
மிச்சமிருந்த ஐந்துலட்சம் பேர்தான் மாட்டிக்கொண்டார்கள்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 8 மே, 2005
ஹிட்லர் ஆட்சியில் யூதர்களை ‘கவனிக்க’வென்றே இரண்டு சிறப்புப்படைகள் ஏற்படுத்தப்பட்டன. ஒன்று, ‘Gestapo’ என்று அழைக்கப்பட்ட ரகசிய காவல்படை. இரண்டாவது, ‘SS’ என்று அழைக்கப்பட்ட, கருப்பு யூனிஃபார்ம் அணிந்த பாதுகாப்புப்படையினர்.