Featured Posts

நபியின் சொத்துக்கு வாரிசுண்டா?

நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் நடந்த வரலாற்று சம்பவங்களை இஸ்லாத்தின் வரலாறாக மேற்கோள் காட்டுவது அறியாமையே என்று மீண்டும் இங்கே சொல்லிக்கொண்டு – நபி (ஸல்) அவர்கள் விட்டுச் சென்றச் சொத்துக்கள் தனியொரு மனிதர் விட்டுச் சென்றச் சொத்துக்களை மாதிரி வாரிசுரிமையைப் பெற்றிருக்கவில்லை. நபிமார்கள் விட்டுச் செல்லவதெல்லாம் தர்மமாகும் என்பதைப் பார்ப்பதற்கு முன் ”குமுஸ்” என்றால் என்னவென்பதை சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

குமுஸ்
போரில் எதிரிகள் விட்டுச் சென்றதில் – போரில் பங்கெடுத்தவர்களுக்கு எண்பது சதவீதமும், நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், திக்கற்றவர்களுக்கும் சேர்த்து இருபது சதவீதமும் என்று பிரிக்கப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் தர்மமாக (ஸகாத்தாகக்) கிடைக்கும் அனைத்தும் விலக்கப்பட்டுள்ளது. ஸகாத் – தர்மமாக வரும் நிதியிலிருந்து எதையும் தொடக்கூடாது என்று தடை விதித்திருப்பதால், போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பங்கு ஒதுக்கினான். இதை இவ்வசனத்திலிருந்து விளங்கலாம்.

8:41. (முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக குமுஸ் – ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும், அவர்களுடைய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

போரில் எதிரிகள் விட்டுச் செல்லும் பொருட்களுக்கு ஃகனீமத் (போர்ச் செல்வம்) எனப்படும் இவ்வாறு கிடைக்கும் போர்ச் செல்வத்தை ஐந்து பாகங்களாகப் பிரித்து, நான்கு பாகங்கள் போரில் கலந்து கொண்ட வீரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். மீதியுள்ள ஒரு பாகம் (குமுஸ்) அல்லாஹ்வின் தூதருக்கு உரியதாகும். இந்த ஐந்தில் ஒரு பாகத்தில் ஐந்தில் ஒரு பாகத்தை இறைத்தூதர் தமக்குரிய நிதியாக – ஆட்சித் தலைவர் நிதியாக வைத்துக் கொண்டு உரிய இனங்களில் செலவிடுவார்கள். இறைத்தூதருக்குப் பின் அரசு கருவூலத்தில் இந்தப் பங்கு சேர்க்கப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்பட்டது. (பத்ஹுல் பாரீ)

குமுஸ் – ஐந்தில் ஒரு பங்கு போர்ச் செல்வமும், ஃபய்வு – என்னும் போர் செய்யாமலேயே எதிரி நாட்டிலிருந்து கிடைக்கும் செல்வமும் ஆட்சியாளரின் பொறுப்பில் சிறப்பு நிதியாக இருக்கும். பய்வு என்னும் செல்வம் பற்றி திருக்குர்ஆன்..

59:7. அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும், மேலும் உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும் எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். மேலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.

ஃபய்வு என்றால் போர் செய்யாமலேயே எதிரி நாட்டிலிருந்து கிடைக்கும் செல்வமாகும். ஃகனீமத் என்பது போரில் எதிரிகள் விட்டுச் செல்லும் பொருளாகும். இதிலிருந்து ஃகனீமத் மற்றும் ஃபய்வு இரண்டுக்குமிடையிலான வித்தியாசத்தை அறியலாம். ஃகனீமத்தில் போராளிகளுக்குப் பங்கு (5ல் 4பங்கு) உண்டு ஃபய்வில் போராளிகளுக்குப் பங்கு கிடையாது. அது ஆட்சியாளர்களின் பொறுப்பில் நிதியாக இருக்கும். (உம்தத்துல் காரீ)

குமுஸ் – ஃபய்வு இவ்விரண்டு சொத்துக்கள் பற்றி விளங்கிக் கொள்ள மேலே எடுத்தெழுதிய ஆதாரங்களே போதுமானதாகும். முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதராகவும், ஆட்சியின் தலைவராகவும் இருந்ததால் அவர்களின் கட்டுப்பாட்டில், கருவூலத்தில் பொது நிதியாக இச்சொத்துக்கள் வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் ஆட்சித் தலைவராக அபூ பக்ர் (ரலி) அவர்கள் பொறுப்பேற்றார்கள்.

நபியின் சொத்துக்கு வாரிசுரிமை இல்லை.
நபி(ஸல்) அவர்கள் மரணித்தப் பின், நபி(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் – நபியின் மகள் என்ற முறையில் தமக்குச் சேரவேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தருமாறு அபூ பக்ர் (ரலி) அவர்களிடம் கேட்டார். அதற்கு ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தருமம் செய்யப்பட வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்” என்று அபூ பக்ர் (ரலி அவர்கள் பதிலளித்தார்கள். (முழு விபரங்களுக்கு பார்க்க புகாரி, 3092, 3093)

அபூ பக்ர் (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின், உமர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்கிறார்கள். உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் – நபி (ஸல்) அவர்களின் உறவினர்களான, நபி (ஸல்) அவர்களின் தந்தை அப்துல்லாஹ்வின் சகோதரரான அப்பாஸ் (ரலி) அவர்களும் – நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் கணவராகிய அலி (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களை சந்தித்து, மதீனாவின் புறநகர் ஃபய்வு சொத்துக்களைப் பராமறிக்கும் பொறுப்பை தங்களிடம் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்கள், இது பற்றிய நீண்ட ஹதீஸில் (புகாரி, 3094) பார்க்கலாம். அந்த ஹதீஸின் விளக்கக் குறிப்புக் கீழே.

நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி) ஆட்சியிலும் ஃபதக் போன்ற (ஃபய்வு) சொத்துக்கள் ஆட்சியாளர்களான அவர்களின் பொறுப்பிலேயே இருந்து வந்தன. அவற்றிலிருந்து கிடைத்த வருமானத்தை எடுத்து நபி (ஸல்) அவர்களின் குடும்பத்திற்கும், மீதி ஏழைகளுக்கும் செலவிடப்பட்டது. உமர் (ரலி) அவர்களும் ஆரம்பத்தில் இதே நடைமுறையையே பின்பற்றி வந்தார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்களின் வாரிசுகளில் அப்போது வாழ்ந்து கொண்டிருந்த அப்பாஸ் (ரலி) அவர்களும் – ஃபாத்திமாவுக்காக அலி (ரலி) அவர்களும் கலீஃபா உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து, அந்தச் சொத்துக்களின் பராமரிப்புப் பொறுப்பை அரசிடமிருந்து தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரினர். அதையேற்று அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இருவரும் இணைந்து அவற்றைப் பராமரித்து வந்தனர்.

பின்னர் இருவரிடையேப் பிரச்சனை எழுந்த போது தங்களிருவருக்கும் தனித்தனியேப் பிரித்துக் கொடுத்து விடுமாறு அப்பாஸ் (ரலி) அவர்களும், அலி (ரலி) அவர்களும் கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் கோரினர். அவ்வாறுப் பிரித்துக் கொடுத்து விட்டால், அவைக் காலப்போக்கில் அவ்விருவருக்கும் சொந்தமான வாரிசுச் சொத்தாகி விடலாம் என்பதால் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் சம்மதிக்கவில்லை. (உம்தத்துல் காரீ)

நபி (ஸல்) அவர்கள் விட்டுச் செல்வதெல்லாம் தருமமாகும்.

”எங்கள் (நபிமார்களின்) சொத்துக்களுக்கு யாரும் வாரிசு தாரர்கள் அல்ல! நாங்கள் விட்டுச் சென்றவை தர்மமாகும்”. (புகாரி, முஸ்லிம்)

”என் வாரிசுகள் பொற்காசையோ, வெள்ளி நாணயத்தையோ பங்கிட்டுக் கொள்ள (வாரிசுரிமையாகப் பெற) மாட்டார்கள். என் மனைவிமார்களின் ஜீவனாம்சத்தையும் என் ஊழியரின் கூலியையும் தவிர நான் விட்டுச் செல்வதெல்லாம் தருமமேயாகும்.” அறிவிப்பாளர், அபூ ஹூரைரா (ரலி) (தமிழ் புகாரி, ஹதீஸ் எண் 2776, 3096)


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்த பின் அவர்களின் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த சொத்துக்களெல்லாம் மறு ஆட்சியாளரின் பொறுப்பில் பொது நிதியாகவே இருந்தது. இச்சொத்துக்களிலிருந்து வரும் வருமானத்தையே, நபி (ஸல்) அவர்கள் தன் மனைவிமார்களின் ஜீவனாம்சமாகக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். ”என் ஊழியரின் கூலியையும் தவிர” என்பது, அடுத்த ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் ஊதியத்தையும் – சொத்துக்களைப் பராமரிப்பவர்களுக்கான கூலியையும் குறிக்கிறது. இவை தவிர அனைத்தும் தர்மம் செய்யப்பட வேண்டும்.

( இது பற்றி விரிவாக, சம்மந்தப்பட்டவர் தனிப்பதிவு எழுதிய பின் நாமும் எழுதுவோம்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *