1408. என்னை ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) (மக்காவிலிருக்கும் போதே) மணந்துகொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரின் குதிரையையும் தவிர வேறு எச்சொத்துபத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனிபோடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரின் தோல் சுமையைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டைவீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து – நானே பேரீச்சங்கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலைமீது வைத்துச் சுமந்து வருவேன். அந்த நிலம் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது. (ஒரு நாள்) நான் என் தலை மீது பேரீச்சங்கொட்டைகளை வைத்து வந்து கொண்டிருந்தேன். (வழியில்) நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களை, (அவர் தம் தோழர்களான அன்சாரிகளில் சிலர் அவர்களுடன் இருக்கச் சந்தித்தேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். எனக்குத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வதற்காக ‘இஃக், இஃக்’ என்ற சொல்லித் தம் ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால்,) நான் ஆண்களுடன் செல்ல வெட்கப்பட்டேன். மேலும், நான் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களையும், அவரின் ரோஷத்தையும் நினைத்துப் பார்த்தேன். அவர் மக்களில் மிகவும் ரோஷக்காரராக இருந்தார். நான் வெட்கப்படுவதைப் புரிந்துகொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். நான் (என் கணவர்) ஸுபைரிடம் வந்து ‘(வழியில்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தலையில் பேரீச்சங்கொட்டைகளிருக்க என்னைச் சந்தித்தார்கள். அவர்களுடன் அவர்களின் தோழர்கள் சிலரும் இருந்தனர். நான் ஏறிக்கொள்வதற்காக(த் தம் ஒட்டகத்தை) மண்டியிடச் செய்தார்கள். நான் அவர்களைக் கண்டு வெட்கப்பட்டேன். மேலும், உங்களின் ரோஷத்தை நான் அறிந்துள்ளேன்” என்று கூறினேன். அதற்கு என் கணவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதைவிட பேரீச்சங்கொட்டைகளை நீ சுமந்து வந்தது தான் எனக்குக் கடினமானதாக இருக்கிறது” என்று கூறினார். (இவ்வாறாக வீட்டுப் பணிகளில் பெரும் பகுதியை நானே மேற்கொண்டு வந்தேன்.) அதற்குப் பிறகு (என் தந்தை) அபூபக்ர் (ரலி) எனக்கு ஓர் அடிமையை (உதவிக்காக) அனுப்பி வைத்தார்கள். அந்த அடிமை குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார். என்னவோ எனக்கு விடுதலை கிடைத்தது போல் இருந்தது.
புஹாரி : 5224 அஸ்மாபின்த் அபூபக்கர் (ரலி).