ஜக்காத் கொடுத்தல்
அல்லாஹ் குர்ஆனில் எங்கெல்லாம் தொழுகையை நிலைநாட்டுமாறு கூறுகின்றானோ அங்கெல்லாம் தொழுகையுடன் சேர்த்து ஜக்காத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் கட்டளையிடுகின்றான். ஜக்காத் என்பது வருடந்தோறும் வசதியுடையோர் தம் கைவசம் உள்ள பணம் நிலம் மற்றும் தங்க வெள்ளி அணிகலன்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ள வரையறைக்கு மேலாக உள்ள கணக்கைப் பார்த்து குர்ஆனில் நபிமொழிகளில் என்னென்ன விகிதாசாரப்படி கொடுக்கக் கூறியுள்ளதோ அதன் பிரகாரம் கொடுத்து விடவேண்டும். வாகனங்கள் கால் நடைகள் விவசாயம் புதையல் போர் வெற்றிப் பொருள் ஆகியவைகளும் வருமானம் வரக்கூடிய வியாபாரம் போன்றவைகளும் ஜக்காத்தில் அடங்கும் . ஜக்காத்தை பெற தகுதியானவர்களை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
9:60. (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.
மேலும் செல்வந்தன் தனக்கு வழங்கப்பட்ட செல்வத்திலிருந்து வழங்கும் ஜகாத் அவனை தூய்மை படுத்துகிறது என்பதை அல்லாஹ் குர்ஆனில் 9:103 குறிப்பிடுகிறான்.
9:103 (நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
ஜக்காத்தை முறைப்படி கொடுப்பவர்கள் நாளை மறுமையில் சுவனத்தை பரிசாகப் பெறுவதையும் ஜக்காத் கொடுக்காமல் செல்வங்களை குவித்து வைத்தோர் அச்செல்வங்களே அவர்களுக்குப் பகையாக மாறி நாளை மறுமையில் நரகில் வேதனை செய்யப்படுவதையும் இஸ்லாம் குர்ஆன் நபிமொழிகள் மூலம் எச்சரிக்கின்றது.
வறுமையில் உழல்வோர் மீது காட்டும் பரிவால் மனிதனிடம் காணப்படும் கஞ்சத்தனம் பெருமை வரட்டு கவுரவம் போன்ற அநீதிகளிலிருந்து பாதுகாக்கப்பட்டு அல்லாஹ் அவனுக்கு வழங்கிய செல்வத்தின் சுவையை அவனின் பிற அடியார்களும் சுவைக்கும் ஒரு தூரநோக்குப் பார்வையாக ஜக்காத் திகழ்கின்றது.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்..)