1501.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் கறுப்பு நிற அடிமையான அன்ஜஷா எனப்படுபவரும் இருந்தார். அவர் பாட்டுப்பாடி (ஒட்டகத்தை விரைந்தோடச் செய்து) கொண்டிருந்தார். அவரிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உமக்கு நாசம்தான் (வைஹக்க). அன்ஜஷா! நிதானம்! (ஒட்டகத்தின் மேலுள்ள) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!” என்று கூறினார்கள்.
1502. இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் -எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழி வாங்கியதில்லை. அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர. (அப்போது மட்டும் பழி வாங்குவார்கள்.)