1854. நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை மக்களின் நடுவே அமர்ந்தபடி தஜ்ஜால்’ என்னும் மஸீஹை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, ‘அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், ‘தஜ்ஜால்’ என்னும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனுடைய கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்” என்று கூறினார்கள்.
1855. இறைவனால் அனுப்பி வைக்கப்பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை பெரும் பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்துகொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். (ஆனால்,) நிச்சயமாக,உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரண்டு கண்களுக்கிடையே ‘காஃபிர்’ (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1856. உக்பா இப்னு ஆமிர் (ரலி) ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா?’ என்று கேட்டார். ஹுதைஃபா (ரலி), ‘தஜ்ஜால் வெளியே வரும்போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை ‘இது நெருப்பு’ என்று கருதுகிறார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும். மக்கள் எதை ‘இது குளிர்ந்த நீர்’ என்று கருதுகிறார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் சந்திக்கிறவர், தான் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.
1857. நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் நகரம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சொர்க்கம் என்று கூறுகிறானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.