வணக்கம்!- சன் டிவியின் காமெடி நிகழ்ச்சியில் சிட்டிபாபு, அர்ச்சனா சொல்லும் வணக்கம் ஒருவகை. எதிரில் இருப்பவரின் கண்களைப் பார்த்து, கம்பீரமாகக் கமலாஹாசன் சொல்லும் வணக்கம் இன்னொரு வகை.தலைக்கு மேல் கைகளைக் கூப்பியும் நெஞ்சில் கைகைகளைக் குவித்தும் சொல்லப்படும் வணக்கம் மற்றொரு வகை. அனேகமாக இலவசமாகக் கிடைப்பனவற்றில் ‘வணக்கம் ‘ என்ற வாழ்த்தும் ஒன்று.
தமிழில் வணக்கம் என்ற பதம் பிறரை வாழ்த்தப் பயன்படுத்தப் படுகிறது. சாதாரணமாக மதிப்புக்குரியவர்களை ‘வணக்கம்’ என்று வாழ்த்துகிறோம். தமிழ் இலக்கியங்களில் இறைவனை, தலைவன் என்றும் போற்றுவர். இறைவனுக்கு மட்டும் உரித்தான வணக்கம் என்ற மரியாதைச் சொல் மனிதர்களுக்கும் பயன் படுத்தப்படுகிறது. உண்மையில் வணக்கம் என்ற வார்த்தை பொருத்தமான வகையில் பயன் படுத்தப்படுகிறதா என்பதை, ஒரு முஸ்லிமுடைய கண்ணோட்டத்தில் இங்குப் பார்ப்போம்.
முஸ்லிம்களைத் தவிர மற்றவர்கள் வணக்கம் என்று பரஸ்பரம் வாழ்த்திக் கொள்வர்.ஓரளவு இஸ்லாத்தின் கோட்பாடுகளை விளங்கியவரிடம் “வணக்கம்” என்று சொல்லப்பட்டால், முடிந்தமட்டும் வேறு வார்த்தைகளில் பதில் சொல்வார் ; அல்லது பதில் சொல்லாமல் தவிர்த்து விடுவார்.பிறமத நண்பர்களுடன் பணியாற்றும் இடங்களில் சிலநேரம் முஸ்லிம்கள் இவ்வாறு பதில் சொல்லாமல் இருப்பதால் தவறாக நினைக்கத் தோன்றும். நன்கு அறிந்த நண்பர்களோ சக ஊழியர்களோ ஓரளவு இதற்கான காரணத்தை அறிந்திருப்பர். பெரும்பாலோர் முஸ்லிம்கள் ஏன் வணக்கம் சொல்லப்பட்டால்,பதிலுக்கு “வணக்கம்” என்று சொல்வதில்லை என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
“வணக்கத்திற்குரியவன் இறைவன் மட்டுமே!” என்பது இஸ்லாத்தின் அடிப்படை. படைத்த இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது என்பது முஸ்லிம்களின் ஆழ்ந்த நம்பிக்கை.பரஸ்பரம் மனிதர்களுக்குள் வணக்கம் என்று சொல்லிக் கொள்வதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லையே; வாயளவில் வணக்கம் என்று சொல்லப்பட்டால் பதிலுக்கு வணக்கம் என்று சொல்லிச் செல்லலாமே; ஏன் அதை இறைவனுக்கு இணைவைப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்? நெருப்பு என்று சொன்னால் வாயைச் சுட்டு விடுமா?” என்று அடுக்கடுக்காய்க் கேள்விகள் எழும். நியாயமானக் கேள்விகள்!
இருவர் சந்தித்துக் கொள்ளும்போது வணக்கம் என்று சொல்வது ஒருவர் மற்றொருவரை வழிபடுவதாக அர்த்தம் அல்ல. இருந்தாலும் ‘வணக்கம்’ என்பது இருவர் சந்தித்துக் கொள்ளும்போதோ மரியாதைக்காகவோ பரிமாறிக் கொள்ளும் சொல் மட்டுமல்ல என்பது முஸ்லிம்களின் கருத்து.சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால்தான் ஒருவன் உண்மையானவனாக இருக்க முடியும்.சொல்வது ஒன்று செய்வது வேறு என்பது நாகரிகமுள்ளவர்களுக்கு அடையாளம் அல்ல.
மண்ணை வணங்கிப் பாடுவதாக உள்ளதாலேயே வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் பாடத் தயங்குவர். இந்திய முஸ்லிம்களின் தேசப் பற்றை அளவிடுவதற்கு வந்தே மாதரம் பாட வேண்டும் என எதிர்பார்ப்பது நகைப்பிற்கு உரியது – அதுவும் மனிதனை சகமனிதனாக மதிக்காத கோட்பாட்டில் இருக்கும் கும்பலைச் சார்ந்தவகள் இதை வலியுறுத்துவதுதான் இன்னும் வேடிக்கை!
வாயளவில் வணக்கம் என்பது, உண்மையில் சகமனிதனை மதிப்பதாகாது. வணக்கம் என்பது மரியாதை நிமித்தமாகப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் முகமன்/ வாழ்த்து என்றால் ‘ தாய் மண்ணே வணக்கம்’ என்பது நேரெதிரான மரியாதையாகும். அதாவது மனிதனுக்கும் வணக்கம் மண்ணுக்கும் வணக்கம் என்பது நியாயமாகச் சிந்தித்தால் மனிதனுக்கு அவமரியாதை ! மனிதர்களுக்கு மட்டுமுள்ள மரியாதையை மண்ணுக்கும் கொடுப்பது எந்த வகையில் நியாயம்? சொல்லும் வணக்கத்துக்கு மனிதரா
நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள். கருத்துள்ள மேலும் பல பதிவுகள் கிடைக்குமென நம்புகிறேன்
//வாயளவில் வணக்கம் என்பது, உண்மையில் சகமனிதனை மதிப்பதாகாது. வணக்கம் என்பது மரியாதை நிமித்தமாகப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் முகமன்/ வாழ்த்து என்றால் ‘ தாய் மண்ணே வணக்கம்’ என்பது நேரெதிரான மரியாதையாகும். அதாவது மனிதனுக்கும் வணக்கம் மண்ணுக்கும் வணக்கம் என்பது நியாயமாகச் சிந்தித்தால் மனிதனுக்கு அவமரியாதை ! மனிதர்களுக்கு மட்டுமுள்ள மரியாதையை மண்ணுக்கும் கொடுப்பது எந்த வகையில் நியாயம்? சொல்லும் வணக்கத்துக்கு மனிதராவது பதில் சொல்வார். மண் பதில் வணக்கம் சொல்லுமா? //
நல்லடியார்,
எப்படி அய்யா இப்படி எல்லாம் சிந்திக்கிறீர்கள்?
மண்ணை வணங்கக்கூடாது சரி, சில முஸ்லிம் தலைவர்கள் மண்ணை முத்தம் இடுகிறார்களே அது சரியா?
சுல்தான்,
நானறிந்தவற்றை முடிந்தவரை தெளிவாக எழுத முயற்சிக்கிறேன். கருத்து உள்ளதா இல்லையா என்று வாசித்து பின்னூட்டுங்கள்.
//மண்ணை வணங்கக்கூடாது சரி, சில முஸ்லிம் தலைவர்கள் மண்ணை முத்தம் இடுகிறார்களே அது சரியா?//
அட்றா சக்கை ஐயா,
எனக்குத் தெரிந்து முஸ்லிம் தலைவர்கள் யாரும் மண்ணை முத்தமிட்டதைப் பார்த்ததில்லை; கிரிக்கெட் வீரர்களில் சில முஸ்லிம்கள் மைதானத்தில் சுஜூது தலை வணங்குவதைக் கண்டிருக்கிறேன்.
(என்ன சொல்ல வருகிறீர்கள், முத்தம் இடுவதும் ஒருவகையான வணக்கம் என்றா?:-)
// மண் பதில் வணக்கம் சொல்லுமா? //
சொல்லாது!
மண்ணுக்கு முத்தம் இட்டால் பதிலுக்கு?
அடிக்க வரும் முன் எஸ்கேப்!
நீங்கள் எப்போதுமே சீரியசானா ஆளா என்பதற்கான டெஸ்ட்!
உங்களைப் புண்படுத்தியதாகக் கருதினால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
//நீங்கள் எப்போதுமே சீரியசானா ஆளா என்பதற்கான டெஸ்ட்!//
நான் இயல்பாகவே கொஞ்சம் நகைச்சுவை உணர்வுள்ள ஆசாமி. நானும் என்னைப் போன்ற முஸ்லிம்களும் உயிரென மதிக்கும் முஹம்மது நபியையும் அவதூறாக எழுதியவற்றிற்கு அதே தொனியில் எதிர்வினையாற்றிதால் சீரியஸ் இமேஜ் விழுந்திருக்கும்.
மன்னிக்க முடியாது ஏனென்றால் நீங்கள் புண்ணும் படுத்தவில்லை; மண்ணும் படுத்தவில்லை!
(நீங்களும் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நப்பாசையில்எதுகை மோனையாக எழுதி விட்டேன்.:-)))
அஸ்ஸலாமு அலைக்கும் ( உங்களுக்கு சாந்தி உண்டாவதாக) – வாலிக்கும் சலாம்.
சரியா
இருப்பினும் நண்பர்கள் சந்திக்கும் போது தமிழில் வணக்கம் என்றும் ஆங்கிலத்தில் Good Morning என்றும் சொல்கின்றனர். பதிலுக்கு இசுலாமிய சகோதரர்கள் என்ன சொல்ல வேண்டும்.
வணக்கம் என்பது வணங்குவதையும், மரியாதை நிமித்தம் கூறுவதையும், முகமனாக அறிவிப்பதையும் குறிக்கும் சொல்லாகும்.
மிகப் பெரிய இறைவனைத் தவிர வேறு யாரையும் ( இறைவனுக்கு ஒப்பாகக் கருதக் கூடாது) வணங்கக் கூடாது என்ற கோட்பாடு சிறந்தது தான். இறைவன் ஒப்பிலாதவன் – அவனுக்கு ஈடு இணை கிடையாது. உடன் படுகிறேன்.
ஆனாலும், இந்துக்களிடையே இந்த பழக்கம் பல ஆண்டுகளாக இருக்கிறது. நாகரீகம் கருதியாவது வணக்கம் சொல்லும் போது பதிலுக்கு ஏதாவது சொல்ல வேண்டாமா ??
குற்றமாகச் சொல்ல வில்லை. விளக்கம் கேட்கிறேன் . அவ்வளவு தான்
//இந்துக்களிடையே இந்த பழக்கம் பல ஆண்டுகளாக இருக்கிறது. நாகரீகம் கருதியாவது வணக்கம் சொல்லும் போது பதிலுக்கு ஏதாவது சொல்ல வேண்டாமா ??
குற்றமாகச் சொல்ல வில்லை. விளக்கம் கேட்கிறேன் . அவ்வளவு தான்//
கீழ்க்காணும் சுட்டிகளில் விளக்கம் உள்ளது:
http://www.satyamargam.com/forum/viewtopic.php?f=10&t=152
http://www.satyamargam.com/forum/viewtopic.php?t=105
வாலிக்கும் சலாமல்ல. “வ அலைக்குமுஸ் ஸலாம்”
வணக்கம் என்பதை பற்றி ஆர்குட் குழுமத்தில் ஒரு விவாதம் நடைபெறுகிறது.
அனைவரும் பங்குகொள்ளுங்கள்.
http://www.orkut.com/CommMsgs.aspx?cmm=37515815&tid=2573717342805780112
வணக்கம் கூறுவது குறித்து எனது கருத்தும் இதுவே.
என்றாலும் வணக்கம் என்பதன் பொருள் வழிபாடு என்பதாக மட்டுமே இருக்காதோ என்ற அய்யமும் எழுவதுண்டு. தமிழறிஞர்கள் விளக்க வேண்டும்.
‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்பதற்கு ‘வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே’ என்பதைவிட ‘வழிபடுதற்குரியவன் இறைவன் ஒருவனே’ என்ற மொழிபெயர்ப்பு சிறந்ததென நான் கருதுகிறேன். மற்றவர்களின் கருத்தையும் அறிய விழைகிறேன்.
//கருத்து உள்ளதா இல்லையா என்று வாசித்து பின்னூட்டுங்கள்.//
தவறாக ஏதும் சொல்லவில்லை. தங்களுடைய எழுத்துக்கள் பொதுவாய் கருத்துள்ளவை. அது போன்ற ‘கருத்துள்ள மேலும் பல பதிவுகள் கிடைக்குமென நம்புகிறேன்’.
நான் தெளிவாக பின்னூட்டவில்லையென்று உணர்கிறேன். நன்றி.
உங்கள் மீது சாந்தியும் சமாதனமாகவும் உண்டவதாக,
முதலில் நட்சத்திர வார வாழ்த்துக்கள்!
வணக்கம் என்பது தற்பொழுது ஏதோ “Greeting” போல தோன்றுகிறினாலும், உண்மையில் வணக்கம் தோன்றிய வரலாறு உயர்ந்தோர்க்கு மரியாதை செய்யும்முகம் தோளில் இருக்கும் துண்டை கையிடுக்கில் சொருகிக்கொண்டு தலை தாழ்த்தி, தாழ்ந்த நிலையில் இருக்கும் ஜாதியினர்(?) உயர்ந்த ஜாதியினரை(?)(இரண்டு ஜாதியினருமே உணவு உண்டால் கழிவறை செல்லவேண்டும் அது வேறு விஷயம்) கண்டவுடன் கண்டிப்பாக இவ்வணக்க மரியாதையை செய்தாக வேண்டும், அரசவையிலும் மன்னர் வரும்பொழுது இம் மரியாதை தவறக்கூடாது. ஆனால் இன்று இதே வணக்கம் எந்த முக்கியத்துவமும் இல்லாது ஏதோ கடமைக்குச் சொல்வது என்றாகிவிட்டது. அதிலும் வணக்கத்திலும் காமெடி வந்துவிட்டது (உதாரணம்: சன் டிவி காமெடி டைம்).
நல்லடியார்,
வணக்கம் என்ற சொல்லின் பயன்பாட்டை, இத்தனை தூரத்திற்கு ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்கள் என்பதை நினைக்கும் பொழுது, வியப்பாக இருக்கிறது.
ஒவ்வொரு செயலையும், எந்த நோக்கோடு செய்யப்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டே, அந்தச் செயல் அங்கீகரிக்கப்படுகிறது. எந்த உள்நோக்கமுமின்றி, இயல்பாக ஒரு மொழியைப் பயன்படுத்துவதால், எந்தப் பாதகமும் நிகழ்ந்து விடுவதில்லை.
நோன்பு வைப்பவர்கள், அதற்கான ‘நிய்யத்’ செய்து கொள்ள வேண்டும். அதாவது தனது நோக்கம் குறித்த உறுதிபாடு. இவ்வாறு ‘நிய்யத்’ செய்யாமல், சும்மா பட்டினி கிடப்பதெல்லாம், நோன்பாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அதே போல், தொழுகையின் போது, ‘இந்தத் தொழுகையை தொழுகிறேன்’ என்று நிய்யத் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், அது தொழுகையாக ஏற்றுக் கொள்ளப்படாது.
ஆக, இறைவனை வணங்கும் பொழுது, ‘நான் உன்னை வணங்குகிறேன்’ என்ற உறுதியில்லாதவற்றை இறைவணக்கமாக ஏற்பதில்லை என்ற கோட்பாட்டை இஸ்லாம் உருவாக்கியதே இணைவைத்தல் என்ற பாவத்தை செய்து விட கூடாது என்ற காரணத்தால் தான்.
இணைவைத்தல் நிகழ்வதற்கு – ‘நான் இன்னதை வணங்குகிறேன் – இறைஞ்சுகிறேன்’ என்ற ‘நிய்யத்’தை செய்து கொண்டாக வேண்டும். இன்றும் பலர் தர்காவில் அடக்கமாகி இருக்கும் அறிஞர்களிடத்தில் ‘நேர்ச்சையாக’ வேண்டிக் கொள்வார்கள் – எனக்கு நீ இதைக் கொடுத்தால், நான் உன் தர்காவில் வந்து இன்னின்ன செய்கிறேன் என்று. அதாவது ஒரு உறுதிபாடை உண்டாக்கிக் கொள்கிறார்கள். ‘நிய்யத்’ செய்கிறார்கள். அதுவே தவறாகிறது. ஆனால், எந்த ஒரு ‘நிய்யத்’துமின்றி, ஒரு சுற்றுலா போன்று அங்கு சென்று வருவதற்கு தடையேது?
இங்கு ‘வணக்கம்’ என்று சொல்வது, எதிரில் இருப்பவரை நான் இறைவனாகக் கருதி வணங்குகிறேன் என்பதாகக் கருதக் கூடாது. மரியாதை செலுத்துவதைக் குறிக்கும் ஒரு மொழியின் சொல். அந்த சொல்லைப் பயன்படுத்தினால், அது இறைவனுக்கு இணைவைத்ததாகிவிடும் என்பது மூளையின் சிந்தனைச் ஜவ்வுகளை வலுக்கட்டாயமாக இழுத்து சிதைப்பதாகும் – வதைப்பதாகும். சிந்தனையாகாது.
வந்தே மாதரம் என்ற பாடலில் மண்ணின் பெருமையைத் தான் சொல்வதாகக் கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர, அதை இறைவனாக உயர்த்தி, மனதில் ‘நிய்யத்’ செய்து கொண்டு வணங்குவதாகக் கருதக் கூடாது. இத்தகைய மனத் தடைகளைக் களைவதில் நாம் முனைப்பு காட்ட வேண்டும். மொழியைக் கையாள்கையில், அநாவசியமாக நோக்கங்கள் கற்பித்துக் கொண்டு, தன்னைச் சுற்றி ஒரு சுவர் எழுப்பிக் கொண்டு, தனித்தீவாக ஆவது சரியல்ல என்பது எனது கருத்து. இதை நான் எங்கும் படித்துச் சொல்லவில்லை. எனது சிந்தனையாகத் தான் முன்வைக்கிறேன்.
மொழிகளின் பயன்பாடு குறித்து இத்தனை மனத்தடைகளை எழுப்பிக் கொண்டது நாம் தானே தவிர, மொழிகள் எந்தத் தடையும் விதிக்கவில்லை. மொழி பெயர்த்தவர்கள் அப்படி செய்திருக்கிறார்கள். அப்படியும் மனதில் சஞ்சலமிருந்தால், அழகப்பன் சொல்லியது போல, வணக்கத்திற்குரியவன் என்பதை வழிபடுதலுக்குரியவன் என்ற சரியான பதத்தை இனி நாம் கையாள வேண்டுமே தவிர, ‘வணக்கம்’ என்று சொல்ல மாட்டேன் என்று விலகி நிற்பது சரியல்ல.
நாம் பேசும் தாய்மொழியைத் தவறாக அர்த்தம் செய்து கொண்டு, அதை நான் சொல்ல மாட்டேன். ஆனால், அதற்குப் பதிலாக, நாம் இருவருக்குமே அந்நியமான மொழியில், ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ சொல்லிக் கொள்வோம் என்று அழைப்பு விடுப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதை அறிந்த இரு முஸ்லிம்கள் சொல்லிக் கொள்வதில் பொருள் இருக்கும். ஆனால், அரபி மொழி அறியாத ஒரு பிற மதத்தினருக்கு அவ்வாறு செய்யலாமே என்று பரிந்துரைப்பது தவறு.
‘நோக்கங்கள்’ தெளிவாக இருக்கும
் பொழுது, இறைவனுக்கு இணை வைத்தல் ஒரு பொழுதும் நிகழாது – ஒரு மொழியைக் கையாள்வதால்.
வணக்கம் என்று சொல்வதினாலும், வந்தே மாதரம் என்று பாடுவதினாலும் நாம் இறைவனுக்கு எந்த விதத்திலும் குற்றமிழைத்தவர்களாக மாட்டோம்.
As long as the intentions are clear, everything is fine.
(வழக்கம் போல், நான் இதை ஒரு தனிப்பதிவாகவும் இட்டுக் கொள்கிறேன்.)
//ஆனாலும், இந்துக்களிடையே இந்த பழக்கம் பல ஆண்டுகளாக இருக்கிறது. நாகரீகம் கருதியாவது வணக்கம் சொல்லும் போது பதிலுக்கு ஏதாவது சொல்ல வேண்டாமா ??குற்றமாகச் சொல்ல வில்லை. விளக்கம் கேட்கிறேன் . அவ்வளவு தான்//
cheena (சீனா),
வணக்கம் என்பது தங்களின் நம்பிக்கைக்கு எதிரானது என்று நம்புபவர்களிடம் பொதுவாக வாழ்த்துவதே நாகரிகம். எதிரில் இருப்பவர் எந்த நம்பிக்கையில் உள்ளவர் என்று அறியாமல் எப்படி பொதுவாக வாழ்த்த முடியும்? அபத்தமாக இருக்கிறதே என்று கேட்பீர்களென்றால்,முன்பின் அறிந்திராதவரிடம் வணக்கம் சொல்வதும் அபத்தமே! எப்படி சைவம் சாப்பிடுபவரிடம் மட்டன் பிரியானி சாப்பிடுங்கள் என்று அறிந்து கொள்ளாமல் (அன்பாகச்) சொல்வது அபத்தமோ அதுபோல்.
நான் அறிந்தவகையில் விளக்கி இருக்கிறேன். குற்றமாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். :-)
//வாலிக்கும் சலாமல்ல. “வ அலைக்குமுஸ் ஸலாம்”//
என் சார்பில் பதிலுரைத்த அதி.அழகு அவர்களுக்கு நன்றி! :-)
(சுட்டிகளை இன்னும் வாசிக்கவில்லை)
//வணக்கம் என்பதை பற்றி ஆர்குட் குழுமத்தில் ஒரு விவாதம் நடைபெறுகிறது.அனைவரும் பங்குகொள்ளுங்கள்.//
கழுகு,
அதேபோல் ஆர்குட் குழுமத்திலும் என் பதிவைப் பற்றி ஒரு விளம்பரம் போட்டும் இங்கு வரச்சொல்லுங்களேன்.! :-)
//என்றாலும் வணக்கம் என்பதன் பொருள் வழிபாடு என்பதாக மட்டுமே இருக்காதோ என்ற அய்யமும் எழுவதுண்டு. தமிழறிஞர்கள் விளக்க வேண்டும். //
அழகப்பன்,
நான் தமிழறிஞல்லன்! தமிழில் வணக்கம் என்ற பதத்திற்கு வேறு அர்த்தம் இல்லையெனும்போதும் வணக்கம் என்று மனிதர்களுக்குச் சொல்வது வணங்குவதாகவே கருதப்படும். (நீங்கள் என்னைப் பார்த்து மிருகமே என்றால், என்னை மிருகம் என்று சொன்னதாகவே கொள்(ல்:-)வேன் என்பதுபோல் வணக்கம் என்பதும் அவ்வாறே அர்த்தப்படும்!)
நண்பன் ஷாஜகான்,
மொழியாளுமையப் பற்றிச் சொல்லியுள்ளீர்கள்;சிந்திக்கக் கூடியவை. இதற்கு சுருக்கமாக விளக்க முடியாது. நட்சத்திர வாரத்திற்குள் (இன்ஷா அல்லாஹ்) என்பக்க வாதத்தையும் வைக்கிறேன்.
//நான் தெளிவாக பின்னூட்டவில்லையென்று உணர்கிறேன். நன்றி.//
சுல்தான்,
என் பதிவுகளுக்கு முந்திக் கொண்டு பின்னூட்டும் நீங்கள் எழுதியுள்ள பின்னூட்டம் தெளிவாகவே இருக்கிறது. நான் தவறாகப்புரிந்து கொள்ளும்படி நீங்கள் ஒன்றும் அப்படிச் சொல்லவில்லை!
ஸயீத்,
உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும்
வ அலைக்குமுஸ் சலாம்
நன்றி ஆதி அழகு மற்றும் நல்லடியார்க்கு
நல்லடியாருக்கு,
இறைவன் எண்ணத்தைதான் பார்க்கிறான் – செயல்களையோ – வார்த்தைகளையோ அல்ல என்பதுதானே இஸ்லாமிய சித்தாந்தம்.
மாற்றுமதச்சகோதரர்களுக்கு – முகமன் கூறுவதற்காக (ஆங்கிலத்தில் greet – salute என்பார்களே) வணக்கம் சொல்ல இஸ்லாமிய தமிழர்கள் தயங்கவேண்டியதில்லை.
நன்பர் அழகப்பன் சொன்னது போல – வணக்கம் என்பதற்கு – வழிபாடு என்றும் ஒரு பொருள் -அது மட்டுமல்ல.
///அதேபோல் ஆர்குட் குழுமத்திலும் என் பதிவைப் பற்றி ஒரு விளம்பரம் போட்டும் இங்கு வரச்சொல்லுங்களேன்.! :-)///
உங்களுடைய வலைக்கும் அங்கே ஒரு இனைப்பு கொடுத்துள்ளேன்.
மண்ணை வணங்கிப் பாடுவதாக உள்ளதாலேயே வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் பாடத் தயங்குவர்.- நல்லடியார்.
வந்தே மாதரம் பாட இந்திய இஸ்லாமியர்கள் மறுக்க நியாயமான நிறைய காரணக்கள் உள்ளன.
‘வந்தே மாதரம் ‘ என்ன இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்டதா ? இல்லை. கட்டாயமாக பாடவேண்டிய ‘தாகூரின்’ ஜனகன போன்ற தேசிய கீதமா?
பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘ஆனந்த் மத் ‘ நாவலில் இடம்பெற்ற இப்பாடல் ரவீந்தரநாத் தாகூரால் இசையமைக்கப்பட்டு கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. அப்பாடலின் முக்கியத்துவத்தை தாகூர் போற்றிய போதிலும், பாடலின் – நாவலின் பின்னனி
இந்திய முஸ்லிம்களின் சுயமரியாதை-மத உணர்வுகளை புண்படுத்தும் வண்ணம் உள்ளது என்று ஒப்புக்கொண்டார்.
முழுப்பாடலின் பாடலின் கருத்து மத ஒற்றுமைக்கு
பங்கம் விளைவிப்பதாக இருந்ததால் நேரு, தாகூர் போன்றவர்கள் ஐந்து பத்திகள் கொண்ட அப்பாடலில் – பாடஅருகதை இல்லாத மூன்று பத்திகளை
வெட்டி எறிந்தனர்.
அது சரி, ‘ஆனந்த் மத் ‘ நாவல் ‘கரு’ என்ன? சுருக்கமாக சொன்னால் முஸ்லிம்களை ‘கருவறுப்பதுதான். கதை முழுக்க – இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரானது. இந்து தெய்வங்களான
காளியும் துர்கையும் இந்த போராட்டத்தில் முன்னிலைப் படுத்தப்படுவாரகள்- அதாவது இந்து மதச்சாயம் பூசப்பட்ட புரட்(டு)சி கதை.
நாவலின் நாயகன், இந்தியாவில் முஸ்லிம்களே இருக்கக்கூடாது என்று காவிக்கொடியை தூக்கிக்கொண்டு (மூவர்ண தேசியக்கொடி அல்ல)
கூட்டம் கூட்டமாக முஸ்லிம்களை படுகொலை செய்கிறான். குஜராத் கலவரத்தில் நடந்தது போல சன்னியாசிகளும்-துறவிகளும் படுகொலையில்
ஈடுபடுவார்கள். எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் இஸ்லாமியர்களை கொன்று குவித்துவிட்டு நாயகன் தன் குருவிடம் சென்று ‘பிரிட்டிஷாருக்கு
எதிரான போராட்டத்தை எப்பொழுது துவங்குவது ? என்று கேட்கிறான் அதற்கு, தேசப்பற்றுள்ள(!) குரு
‘பிரிட்டிஷார் நமது நன்பர்கள்; அவர்களே இந்தியாவை ஆளட்டும்; மேலும் நாம் அவர்களை வெற்றிக்கொள்ள முடியாது ‘ என்று.
இந்திய விடுதலை போராட்டத்திற்கு எவ்வித பங்களிப்பும் செய்யாத- ஆங்கிலேயரிடம் சரனாகதியடைந்த சங்பரிவார கும்பல் – இந்தப்பாடலை வலியுறுத்துவதற்கு காரணம் என்ன தெரியுமா?
இந்திய முஸ்லிம்களை கோழைகளாகவும் கீழ்தரமாகவும் சித்தரித்த கதை பின்னனியில் இப்பாடல் இடம்பெற்றிருப்பதால்தான்!
இப்பாடலை அந்நாவலின் பின்னனியில் வைத்து இந்திய இஸ்லாமியர்கள் பார்க்கக்கூடாது என்று சிலர் பாடலுக்கு ஆதரவாக ‘சப்பை’ கட்டினாலும், நாவலின் முக்கிய அங்கமான
‘முஸ்லிம் படுகொலைகள் ‘ தற்பொழுதும் சங்பரிவாரத்தினரால் அரங்கேற்றப்படுவதால்தான் இந்திய முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாட மறுக்கிறார்கள்.
நண்பன் ஷாஜஹான்,
//’நோக்கங்கள்’ தெளிவாக இருக்கும் பொழுது, இறைவனுக்கு இணை வைத்தல் ஒரு பொழுதும் நிகழாது – ஒரு மொழியைக் கையாள்வதால். //
//இறைவனை வணங்கும் பொழுது, ‘நான் உன்னை வணங்குகிறேன்’ என்ற உறுதியில்லாதவற்றை இறைவணக்கமாக ஏற்பதில்லை என்ற கோட்பாட்டை இஸ்லாம் உருவாக்கியதே இணைவைத்தல் என்ற பாவத்தை செய்து விட கூடாது என்ற காரணத்தால் தான். //
இணை வைத்தல் குறித்த உங்களின் தெளிவு வியக்க வைக்கிறது. மனபூர்வமாக (நிய்யத்துடன்) செய்யப்படாத எந்த வழிபாடும் இறைவனிடம் ஏற்கப்படுவதில்லை.ஆகவேதான் உளப்பூர்வமாக செய்வதாக நிய்யத் செய்து, தவிர்க்க முடியாத சூழலில் நிறைவேற்ற முடியாமல் போனாலும் அதனைச் நிறைவேற்றியதாகக் கருதப்படும் என்று இஸ்லாம் சொல்கிறது. உடலும் உள்ளமும் இணைந்து செய்யும் வழிபாடுகளை வற்புத்துவதாலேயே வெளிப்பார்வைக்கு இஸ்லாமிய இறைவழிபாடுகள் கடுமையானவையோ என்ற எண்ணம்கூடச் சிலருக்கு ஏற்படுவதுண்டு!
//மொழிகளின் பயன்பாடு குறித்து இத்தனை மனத்தடைகளை எழுப்பிக் கொண்டது நாம் தானே தவிர, மொழிகள் எந்தத் தடையும் விதிக்கவில்லை. மொழி பெயர்த்தவர்கள் அப்படி செய்திருக்கிறார்கள்.//
மனிதர்களின் பலவீனங்களை அறிந்ததால்தான் இறைவன் தனக்குச் செய்யப்படும் வழிபாடுகளில் உள்ள(நிய்ய)த்தை நோக்குகிறான். அல்லாஹ் என்ற அரபிப் பதத்தை எப்படி வேண்டுமானாலும் மொழிபெயர்த்து வணங்கலாம்; நோக்கம் அல்லாஹ்வை வணக்குவதாக இருக்க வேண்டும்.
//நாம் பேசும் தாய்மொழியைத் தவறாக அர்த்தம் செய்து கொண்டு, அதை நான் சொல்ல மாட்டேன். ஆனால், அதற்குப் பதிலாக, நாம் இருவருக்குமே அந்நியமான மொழியில், ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ சொல்லிக் கொள்வோம் என்று அழைப்பு விடுப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.’அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதை அறிந்த இரு முஸ்லிம்கள் சொல்லிக் கொள்வதில் பொருள் இருக்கும்.ஆனால், அரபி மொழி அறியாத ஒரு பிற மதத்தினருக்கு அவ்வாறு செய்யலாமே என்று பரிந்துரைப்பது தவறு. //
வணக்கத்தை விட சலாம் சிறந்தது என்றதன் நோக்கம் அரபி மொழியை உயர்த்திச் சொல்வதற்கல்ல;மாறாக, சொல்லின் பயன்பாட்டை முன்னிருத்திச் சொல்லப்பட்டது.மேலும் மொழிகளில் சுதேசி/விதேசி என்று பாகுபடுத்ததிப் பார்ப்பது,குறிப்பிட்ட மொழியின் வளர்ச்சிக்கு உதவாது என்பது என் கணிப்பு. அந்நியச் சொல்லாக இருந்தாலும் பயன்பாட்டின் சிறப்பு கருதி ஏற்றுக் கொள்வதே மொழியை வளர்க்கும்; ஆகவேதான் இங்கிலாந்தில் மட்டும் வழக்கிலிருந்த ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவியது என்பதைச் சொல்லத் தேவையில்லை.
வணக்கம் என்று இருகைகளைக்கூப்பி அந்நியப்படுவதை விட, அஸ்ஸலாமு அலைக்கும் என்று கைகுலுக்கி, நெஞ்சோடு அனைத்து மனங்களை இணைப்பது எளிது. தாய்மொழியில் உள்ளது என்பதற்காக அதன் நெருடலைச் சுட்டுவது தவறாகாது. அந்நிய மொழி என்றாலும் அதன் பயன்பாடு அர்த்தமுள்ளதாக இருந்தால் ஏற்பதில் தவறில்லை என்பது எனது நிலைப்பாடு. இதைப் பரிந்துரைப்பதில் குற்றமிருப்பதாகக் கருதவில்லை!
சிந்திக்க வைத்த பின்னூட்டத்திற்கு நன்றி!
அன்புடன்,
Excellent 100%truth
மலேசியாவிலிருந்து காவேரி, இறைவன் என் ற சொல்லின் உண்மை பொருளை உணர்வதிலிருந்து வெகு தொலைவிற்குச் சென்று விட்டோம்.
தமிழர்கள் மட்டுமே கைகள் கூப்பி வணக்கம் சொல்லும் வழக்கத்தை உலக அளவில் பரப்பினார்கள். இந்த வழக்கத்துக்குக் காரணங்கள் உள்ளன. நம் கலாச்சாரப்படி, ‘வணக்கம்’ என்று இரு கைகளையும் இணைத்து நெஞ்சத்துக்கு நேராக வைத்து அனைவரையும் வரவேற்போம்.
அதை மரியாதை செலுத்தும் ஒரு குறியாகக் காலம் காலமாக நாம் பின்பற்றி வருகிறோம். இறைவனை தொழும்பொழுது கைகளை இணைத்து நெற்றிவரை வைத்து வணங்குவோம். இவற்றின் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?
இரு கைகளை இணைக்கும் பொழுது, எல்லா விரல்களின் நுனியும் இணைக்கப்படுகிறது; இது நம் கண்கள், காதுகள் மற்றும் மூளையின் நினைவு நரம்புகளைத் தூண்டுகின்றன. விரல் நுனிகளை அழுத்தி நெஞ்சத்துக்கு நேராக வைப்பதன் மூலம், நாம் சந்திக்கும் நபரின் முகமும், குரலும் நம் நினைவில் பதியும்.
அதுபோல, கைகளை இணைத்து நெற்றிக்கு நேராக வைத்து வணங்குவது நம் எண்ணங்களை ஒருநிலைப் படுத்தி, முழுமையாகக் கவனம் செலுத்த உதவும்.
மகான்கள், சித்தர்கள் ஆகியோரை வணங்கும்போது, புருவ மத்திக்கு அருகில் கைகளை கூப்பி வணங்கவேண்டும். புருவமத்தியின் ஆக்கினை என்கிற சக்கரத்தை இது தூண்டக்கூடியது.
இறைவனை வணங்கும்போது, இரண்டு கைகளையும் தலைக்கு மேலே கூப்பி வணங்குதல் வேண்டும். அடிக்கடி இரண்டு கைகளையும் இணைப்பதால் மூளையின் இரண்டு பக்கங்களும் சீராகச் செயலாற்றும். அத்தோடு உடல் சக்கரங்களையும் தொடர்பு படுத்துவதால் ஏராளமான நன்மைகளை அளிக்கவல்லது வணக்கம்.
தமிழர்களை யாரும் இந்துக்கள் என்று அழைக்க வேண்டாம், நாங்கள் இந்துக்கள் அல்ல , எங்களுக்கு என்று மதம் ,வாழ்க்கைமுறை, உள்ளது, தமிழர்திருநாள், தமிழ்வருடப்பிறப்பு என்ற எதையும் பின்பற்றாத கொண்டாடாத இவர்களும் தமிழர்கள். எவ்வளவு பிரச்சினை நம்மிடம் உள்ளது , இதுபோன்று பேசி இங்கிருக்கும் தமிழ் இஸ்லாமியர்களை , தமிழ்க்கிறிஸ்துவர்களையும் எங்களிடம் இருந்து பிரிக்க வேண்டாம்
என்ன உங்களின் பிரித்தாளும் சூழ்ச்சி, வாழ்க உங்கள் சமயம் ,மனிதனை மதிக்காத எந்த சமயமும் சமயம் அல்ல அது மூடர்களின் கூடம்.