Featured Posts

பொது சிவில் சட்டம்

சென்ற மாதம் டெல்லியில் நடந்த பாஜக செயற்குழுவில் பேசிய ராஜ்நாத் சிங், “பொது சிவில் சட்டம்” கொண்டுவரப்பட வலியுறுத்தப்படும் என்றார். இந்திய முஸ்லிம்களைப் பற்றிய மிரட்சித்தீயில் இந்துத்துவா குளிர்காய, ராமர் கோவிலுக்கு அடுத்ததாக சங்பரிவரங்களால் அடிக்கடி உதிர்க்கப் படுவது “பொது சிவில் சட்டம்” என்ற செல்லரித்த முழக்கம்.

சிவில் பிரச்சினைகளுக்கு அந்தந்த மதச்சட்டங்களின்படி தீர்வுகாணும் உரிமை அனைத்து மதத்தவருக்கும் இந்திய அரசியல் சாசணம் வழங்கி உள்ளது.அரசியலமைப்பையும் அரசியல் சாசனத்தையும் தூக்கி எறிந்து விட்டு, மநுவின் வர்ணா’சிரம’த்தைச் செயல்படுத்தி, இந்தியர்களைச் ‘சிரமப்’ படுத்தத் துடியாய்த் துடிக்கிறது சங்பரிவாரக் கும்பல்.

நூறு குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி அநியாயமாகத் தண்டிக்கப் பட்டுவிடக்கூடாது என்ற நீதிக்கோட்பாட்டைக் கொண்டுள்ள காந்திய தேசத்தில்தான் முஸ்லிம்கள் தங்களின் சதவீதத்தைவிட அதிமாகச் சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால்கூட சட்டப்படி கிடைத்திருக்கும் தண்டனைக் காலத்தைவிட வாழ்நாளின் பெரும் பகுதியை சிறைகளில் விசாரணைக் கைதிகளாகவே கழிக்கும் பெருமை இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமே உண்டு.

செல்போனில்வந்த அழைப்பை ஏற்றதற்காக மரண தண்டனை நிலுவையில் உள்ள அப்சல் குருவுக்குச் சிறைச்சாலையில் கொடுமை;ஆனால்,கருவைச் சுமந்திருக்கும் தாயின் வயிற்றைக் கீறி சிசுவை தீயிலிட்டுக் கொன்ற மாபாதகர்கள் “குற்றம் நிரூபிக்கப்படவில்லை” என்ற காரணம் சொல்லப் பட்டு வழக்கிலிருந்தே விடுவிக்கப்படுவர். ஒரே குற்றத்திற்குப் பல்வேறு நீதிபதிகளால் வெவ்வேறு வகையில் தீர்ப்புகள் வழங்கப்படுவதும் நமது நீதிமன்றங்களில்தான்!

நமது சட்டங்களால் வழங்க முடியாத தீர்வுகளைக் கொண்டுள்ளதால்தான் அரபு நாடுகளைப்போன்ற தண்டனைகளை வழங்க வேண்டும் என்று சங் பரிவாரத்தின் பிரதம ஊதுகுழல் திருவாளர் அத்வானியே ஒருமுறை ஒப்புக் கொண்டார்.

சென்றவாரம் உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்தைப் படிக்கும்போது, இனி பொது சிவில் சட்டம் குறித்து வாய்திறக்க யாருக்கும் அருகதை இல்லை. இந்துத் திருமணச் சட்டம் குடும்பங்களை இணைப்பதற்குப் பதிலாக பல குடும்பங்களை பிரிக்கக் காரணமாக அமைந்துள்ளன என்று உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இஸ்லாமியத் திருமணச் சட்டத்தின் பொதுவான அம்சங்கள்:

* திருமணம் ஒரு ஒப்பந்தம்.

* மணமகன் மணமகளுக்கு முன்கூட்டியே ஜீவனாம்சம் (மஹர்- திருமணக் கொடை) வழங்க வேண்டும்.இதை நிர்ணயிக்கும் உரிமை மணப்பெண்ணுக்கு உண்டு. மஹர் தொகையில் கணவனுக்கு எவ்வித உரிமையும் இல்லை.

* தம்பதியினரிடையே ஏற்படும் பிணக்குகளை இருவரின் நெருங்கிய உறவினர்கள் மூலம் சமரசம் செய்து வைக்கலாம். அடங்காத மனைவியை வழிக்குக் கொண்டுவரப் படுக்கையிலிருந்து சிலகாலம் ஒதுக்கி வைக்கலாம். அதிகபட்சம் காயம் ஏற்படாதவாறு அடிக்கலாம். எதற்குமே ஒத்துவராதபோது மூன்று தவணைகளாக தலாக் சொல்லி விவாகரத்து பெறலாம்.ஆனால், வேண்டாத கணவனை, மனைவியானவள் உடனடியாக ‘குலா’ சொல்லி கணவனிடமிருந்து விடுதலை பெறலாம்.

* விவாகரத்துப் பெற்ற தம்பதிகளுக்குக் குழந்தை இருந்தால், பிணக்கின்றி சேர்ந்தோ அல்லது தனித் தனியாகவோ பராமரிக்கலாம். ஏழு வயது வரை தாயிடமே குழந்தைகள் இருக்கவும் உரிமையுண்டு. அவர்களின் திருமணம் வரை பொறுப்பாளர் தந்தையே!

உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் கே.ஜி பாலகிருஷ்ணன் அவர்கள் “பெருகும் குற்றங்கள்-தகுந்த தண்டனைகளுக்கான தேடல்” என்ற பயிலரங்கில் “இஸ்லாமிய தண்டனைச் சட்டங்கள் உன்னதமானவை; குற்றங்களைத் தடுக்க வல்லவை” என்று அரபு நாட்டுச் சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பேசியபோது,
“வளைகுடா நாடுகளில் நடப்பில் இருக்கும் இஸ்லாமியச் சட்டக் கூறுகளே அந்நாடுகளில் குற்றங்கள் சொற்ப அளவிலில் இருப்பதற்கான உத்தரவாதமாக உள்ளன; அவற்றுள் சில சட்டங்கள் மிகக் கடுமையானதாகத் தெரியலாம். ஆனால் அவற்றால்தான் குற்றங்களைக் கட்டுக்குள் வைக்க முடிகிறது என்றார்.

1857-க்கு முன்பு வரை இந்தியாவில் இஸ்லாமிய தண்டனைச் சட்டங்களே நடப்பில் இருந்தன;அப்போதைய சட்டம் ஒழுங்கு மிகவும் நல்ல நிலையில் இருந்தது 1857-இல் இந்திய தண்டனைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகே, அதற்கு முன்பிருந்த சட்டம்-ஒழுங்கு தொடர வில்லை”என்றும் கூறினார்.

பிரிட்டன் தலைமை நீதிபதி லார்ட் பிலிப்ஸ்,”இஸ்லாமியச் சட்டங்களின் சிலகூறுகள் பிரிட்டனுக்கு ஏற்றவை” என்று குறிப்பிட்டதையும் கருத்தில் கொண்டால், இஸ்லாமியச் சட்டங்களுக்கே மனித குலத்துக்கான பொதுச் சட்டமாக இருக்கும் தகுதி உண்டென்பதைத் தெளிவாக விளங்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *