மகாராஷ்டிரா குண்டு வெடிப்புக்களை நடத்திய பண்ணாடைகளைக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து “இந்து பயங்கரவாதம்” என்று மக்களவையில் சொன்னதற்கு பா.ஜ.க எதிர்ப்புத் தெரிவித்தது. திருவாளர் ராமகோபாலனும் இதை கடுமையாக எதிர்க்கிறார்.எதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட நாள்முதல் நேற்றுவரை எங்கு குண்டு வெடித்தாலும் அந்தக்குண்டுக்கு சுன்னத் செய்து, தாடி வைத்து, தொப்பிப் போட்டு அதை இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று சொல்லி இன்பம் கண்டுவந்ததோடு அதை வைத்து பிழைப்பு நடத்தி அரசியல் இலாபம் கண்டு வந்த சங் பரிவாரங்களுக்கு, தற்போது அதையே இந்துப் பயங்கரவாதம் என்றதும் குய்யோமுறையோவெனக் கூக்குரல் போடுகிறார்கள்.
அப்பாவிகளைக் குண்டு வைத்துக் கொல்லும் தீவிரவாதிகளுக்கு எம்மதமும் இல்லை. மனிதகுல விரோதிகளான அவர்கள் மதமற்ற, மனிதாபிமானமற்ற மிருகங்கள். அத்தகைய மக்கள்விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் தீவிரவாதி, பயங்கரவாதி என்றே குறிப்பிடப்பட வேண்டும் என்று சொன்னபோதெல்லாம் கண்டும்காணாமல் இருந்துவிட்டு, “தற்போது இந்து பயங்கரவாதம் என்றதும் வலிக்கிறதோ?
இஸ்லாம் என்றால் அமைதி. அமைதியும் பயங்கரவாதமும் எக்காலத்திலும் ஒன்றுசேர முடியாது. இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற சொல்லாடலே முரணானது. எனினும் இந்திய முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்க,வாய்ப்புக்கிட்டியபோதெல்லாம “இஸ்லாமிய” என்ற அடைமொழியுடன் தீவிரவாத,பயங்கரவாதச் செயல்களோடு சேர்த்தே ஊடகப்படுத்தி சிற்றின்பம் கண்டனர்.
இந்துபயங்கரவாதம் என்றதும் சாமியாடும் இவர்களே குஜராத, ஒரிஸ்ஸா, மஹாராஷ்டிரா மற்றும் பலமாநிலங்களில் சிறுபான்மையினரை அச்சுருத்தி, பொது இடங்களில் ஆயுதப்பயிற்சி செய்தும், ரதயாத்திரை என்ற பெயரில் கலவரம் செய்து வருகிறார்கள். சிறுபான்மையினரை இந்தியாவை விட்டும் முடிந்தால் உலகையும்விட்டுத் துரத்திவிட்டு இந்து ஞானமரபு அல்லது வருணாசிரத்தை எஞ்சிய மக்களை அச்சுருத்தி ஏற்கச்செய்து அகண்டபாரதக் கனவில் வன்முறையாட்டம் போட்டு வருகிறார்கள்.
இந்துக்களில் பெரும்பான்மை சாதியைச் சார்ந்த மிகச்சிறுபான்மையினரான இவர்களால் பெரும்பான்மை இந்துக்கள் நிம்மதியற்று வாழவேண்டியுள்ளது. காலங்காலமாக அண்டை வீட்டுக்காரர்களாக, அண்ணன்-தம்பிகளாகப் பழகி வந்தவர்களை ராமர் பெயரால் மதவெறியேற்றி உசுப்பிவிடும் இவர்களை இந்துப் பயங்கரவாதிகள் என்பதைவிட இந்துத்வா பயங்கரவாதிகள் என்பதே சரியாகும். உலகெங்கும் இந்து என்றால் அஹிம்சாவாதி, பிற உயிர்களுக்கு தீங்கிழைக்காதவர்கள் என்றே அறியப்பட்டு வந்துள்ளனர்.அதனால்தான் காந்தியடிகள்கூட தன்னை ஓர் இந்து என்று பகிரங்கமாகச் சொல்லத் தயங்கவில்லை.
இராம.கோபாலன் சொல்வதுபோல், மஹாராஷ்டிரா குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்டவர்களை இந்து பயங்கரவாதிகள் என்பது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்படுகிற துரோகம் ஆகும்.
குமுதத்தில் அரசு பதில்களில் படித்தது…
முகம்மது அன்சாரி, தஞ்சை.
நான் ஒரு இஸ்லாமியன். எந்தத் தீவிரவாத இயக்கங்களுடனோ அல்லது அத்தகைய கொள்கைகளிலோ சிறிதளவும் பற்றில்லாதவன். இந்திய இறையாண்மையிலும், அதன் மதச்சார்பற்ற கொள்கைகளிலும் பெருமதிப்பு வைத்திருப்பவன். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு என்னை ஒரு தோழனாகவும், சக மனிதனாகவும் பார்த்த பலரிடம் இன்று ஏதோ ஒரு சொல்ல முடியாத தயக்கமும், எதிர்ப்புணர்ச்சியும் இருப்பதை என்னால் உணர முடிகிறது. இது எனக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சொந்த சகோதரர்களிடமிருந்தே விலகி நிற்கும் வலி ஏற்படுகிறது?
இது உங்களுக்கு மட்டுமல்ல. அமெரிக்க ஜனாதிபதியாக எதிர்காலத்தில் வரப் போவதற்கான பிரகாசமான வாய்ப்புள்ள ஒபாமாவுக்கே ஏற்படும் உணர்வுதான். அவர் பெயரின் நடுவில் உள்ள சொல் “ஹூசேன்”. அதனால் அவரைப் பற்றிய மதரீதியான பிரச்சாரங்கள் அங்கே வெறுப்புடன் நடத்தப்படுகின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிடும் மெக்கேய்னிடம் ஒரு பெண்மணி இப்படி கேட்டிருக்கிறார். “ஒபாமா ஒரு அரேபியர் என்று கேள்விப்பட்டேனே?” அதற்கு மெக்கேய்ன் சொன்ன பதில் “இல்லை மேடம். அவர் ஒரு நாகரிகமான குடும்பத் தலைவர்”. இதற்கு என்ன அர்த்தம்? ஒரு அரேபியரால் நாகரிகமான குடும்பத்தலைவராக இருக்க முடியாது என்பதுதானே? இஸ்லாமியர்கள் எல்லோரையும் தீவிரவாதிகளாகச் சித்திரிப்பதில் மீடியாவுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. அதனுடைய விளைவுதான் உங்களின் வலி. கவலைப்படாதீர்கள். உண்மைதான் கடைசியில் வெல்லும்.