Featured Posts

பண்டிகைகளும் நல்லிணக்கமும் -2

பொங்கல், ஓணம்,புத்தாண்டுப் பண்டிகைகளைச் சொல்லலாம். இதை மற்ற மதத்தவர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் இஸ்லாமியர்கள் இவற்றைக் கொண்டாடததின் மூலம் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைக்கு எதிரானவர்கள் என்ற தோற்றம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என தனித்தனியாக கொண்டாடுவதை விட தமிழர்களாகிய நாம் பொங்கல் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடி உலகின் மற்ற மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கலாமே? என்ற
நியாயமான கருத்து முன்வைக்கப்படுகிறது.

ஒவ்வொரு கொள்கையும் ஒவ்வொரு கருத்தைச் சொல்கின்றன. அதனைப் பின்பற்றிக் கொண்டு எம்மதமும் சம்மதம் என்பது வாயளவில் நல்ல சித்தாந்தமாக இருந்தாலும் உளப்பூர்வமாக தங்கள் மத நம்பிக்கைகளை
இது போன்ற பொதுவான பண்டிகைகளில் திணித்து விடுகின்றனர். இதை தவிர்க்கவும் முடியாது.

எப்படியெனில் படைத்தவனைத் தவிர படைப்புகளை வணங்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் நிலை. அதே நேரத்தில் மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவாக மாட்டான் என்பதும்
இஸ்லாத்தின் கோட்பாடு. இறைவனுக்குச் செலுத்தும் நன்றி வணக்க வழிபாடு சார்ந்ததாகவும், மனிதனுக்குச் செலுத்தும் நன்றி பொருள் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

உழவர்களுக்கும், உழவில் ஈடுபடுத்தப்பட்ட கால்நடைகளுக்கும், விளைந்த பொருட்களையும் வணங்குவதை விட அவற்றைப் படைத்த அல்லாஹ்வை வணங்குவதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இஸ்லாமியர்கள் பொங்கலைக் கொண்டாடவில்லை என்பதற்காக தமிழர் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்று கருதக் கூடாது.

இஸ்லாம் மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்திட அறிவுக்குப் பொருத்தமான வழியை சொல்கிறது.

“உங்கள் மார்க்கம் உங்களுக்கு; என் மார்க்கம் எனக்கு” (109:6)

என திருக்குர்ஆன் கூறுகிறது. அதாவது ஒவ்வொரு மதத்தவரும் தத்தமது மதத்தைப் பேணி நடந்து கொள்ளட்டும். அதே சமயத்தில் மற்ற மதத்தவர்கள்
தங்கள் மதத்தின் படி நடப்பதை தடுக்கவோ/குறுக்கிடவோ கூடாது என்ற இக்கோட்பாட்டில் எவ்வித முரண்பாடும் இல்லை. இதை நடைமுறைப் படுத்தும்போது உண்மையான மத/சமூக நல்லிணக்கமும் கடை பிடிக்கப்படும்.

மற்றவர்களின் வழிபாட்டை தடுக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் சவூதியில் இந்துக்கள் கோவில் கட்டி வணங்குவதற்கும், கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் ஜெபம் செய்யவும் அனுமதி
மறுக்கப்படுகிறதே என்ற குற்றச்சாட்டிற்கு, இஸ்லாம் எவ்விதத்திலும் காரணமில்லை, அது சவூதியின் அரசியலமைப்பும், சட்டதிட்டமும் காரணம் என்பதோடு மேற்கொண்டு விவாதிக்காமல், இந்தியாவில்/தமிழ்நாட்டில் எப்படி சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பது எனப் பார்ப்போம்.

மாமிசம் சாப்பிடும் முஸ்லிம்களுக்கு அண்டை வீட்டு இந்து, மாமிசம் அல்லது தீபாவளி, ஆயுத பூசை போன்ற பண்டிகைகளின் படைக்கப்பட்ட பலகாரங்களை அன்பாக கொடுத்த போதிலும் ஏற்பதில்லை என்ற
குற்றச்சாட்டு உள்ளது.

முஸ்லிம்கள், அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி அறுக்கப்பட்ட உயிரிணங்களை மட்டுமே உண்ண வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை. இந்த கட்டளையின் காரணமாகவே மற்றவர்கள் அறுப்பதை உண்ண மறுக்கின்றனரே தவிர காழ்புணர்வோ அல்லது வேறு ஜாதியக் காரணங்களோ அல்ல.

கடவுளுக்கு எந்தத் தேவையும் இல்லை. கடவுளுக்காக எந்த பொருளையும் படைக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் அடிப்படை. இதில் முஸ்லிம்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் படையல்
செய்யப்பட்ட உணவுகளை உண்ண வேண்டாம் என இஸ்லாம் முஸ்லிம்களை வலியுறுத்துகிறது.

சைவம் சாப்பிடும் ஒருவர் எப்படி அசைவ உணவை ஏற்க மறுப்ப
ாரோ அதே அளவுகோல்தான் முஸ்லிம்களுக்கும் வைக்க வேண்டும். அடுத்தவர் அன்பாக கொடுப்பதை ஏற்கவில்லை என்பதற்காக கொடுத்தவரை அவமதித்து விட்டார் என அர்த்தமல்ல. உண்மையில் சைவம் சாப்பிடுபவரிடம் அசைவ
உணவைக் கொடுப்பதுதான் அவமதிப்பு.

இந்த வேறுபாட்டை உணர்ந்து கொண்டால், இஸ்லாம் தமிழர்களுக்கும் பிற சமயங்களுக்கும் எதிரானதல்ல என்ற உண்மை புலப்படும்.

ஆக சமூக/சமய நல்லிணக்கத்திற்கு அவரவர் தத்தம் வழிபாடுகளையும் வணக்கங்களையும் அடுத்தவரை பாதிக்காதாவாறு அமைத்துக் கொண்டால் மட்டுமே சாத்தியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *