நிச்சயமாக மனிதன் நன்றி மறந்தவனாகவே இருக்கிறான்; மனிதருக்கு நன்றி செலுத்தாதவன், இறைவனுக்கு நன்றி செலுத்தியவானாக மாட்டான். இவையெல்லாம் குர்ஆனிலும் நபி மொழிகளிலும் சொல்லப்பட்டுள்ள அறவுரைகள்.
சாதாரணமாக அருகிலிருப்பவர் தும்மியதற்கு “அல்ஹம்துலில்லாஹ்” (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!) என்று சொன்னவருக்கு “யர்ஹமுகல்லாஹ்” (அல்லாஹ் உனக்கு அருள் பாலிப்பானாக!) என்று பரஸ்பரம் நன்றி சொல்லிக் கொள்வதை இஸ்லாம் கடைபிடிக்கச் சொல்கிறது.
அதே போல் தமிழர் பண்பாட்டிலும் நன்றி செலுத்துவது தலையாய பண்பாடாக இருக்கிறது. செய்நன்றியறிதல் என்று திருக்குறளிலும் தனி அதிகாரம் உண்டு, இன்னும் பல தமிழர் இலக்கியங்களிலும் நன்றியின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நன்றி மறந்தவனை “நன்றி கெட்ட நாயே” என்று விளிப்பதன் மூலம் நன்றி செய்வதன் அவசியத்தை தமிழன் எந்த அளவு முன்னிலைப்படுத்தியுள்ளான் என்பது விளங்கும்.
தமிழில் “நன்றி” என்கிறோம். அதையே ஆங்கிலத்தில் (Thanks) தாங்ஸ் என்கிறோம். இந்தி/உருது/அரபியில் சுக்ரியா/சுக்ரன் என்கிறோம். இதே போல் அனைத்து மொழிகளிலும் நன்றிக்கு வெவ்வேறான வார்த்தைகள் உண்டு. சீனர்களும் ஜப்பானியர்களும் நன்றி என்று வாயளவில் சொல்வதோடு உடலை வளைத்து செய்கையாகவும் சொல்வர்.
உண்மையில் நன்றி என்பது என்ன? வாயாளவிலும் உடலளவிலும் சொல்லி விட்டால் உண்மையான நன்றியாகி விடுமா என்பதையும் அறிந்து கொண்டால் “நன்றி” செலுத்துவதற்கு இஸ்லாம் வரையறுத்திருக்கும் இலக்கணம் எல்லோருக்கும் பாரபட்சமின்றியும் அறிவுப்பூர்வமாகவும் உண்மையாகவும் இருப்பது புலப்படும்.
நன்றி என்பது ஒருவர் செய்த உதவிக்கு ஈடாக அதே அளவு மறு உதவி செய்வது அல்லது அதை விட அதிகமான உதவியைச் செய்வதாகும்.
மனிதர்களுக்குள் இப்படி பரஸ்பரம் உதவி செய்து கொள்வதை நன்றி என்று சொல்கிறோம். பொங்கல் திருநாளை தமிழர்கள் சூரியனுக்கும், பூமிக்கும், உழவனுக்கும், உழவுக்கு உதவியாக இருந்த மாட்டிற்கும் நன்றி செலுத்துவதாகச் சொல்கிறோம். இதை தமிழ் இந்துக்கள் கொண்டாடுவது போல் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஏன் கொண்டாடுவதில்லை என்று கேட்கின்றனர்.
கடவுளை (அல்லாஹ்வை)த் தவிர வணங்குவதற்குத் தகுதியுள்ளவர் வேறு யாரும் இல்லை என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. இதனை ஏற்றுக் கொண்டால்தான் முஸ்லிம். படைத்து பரிபாலித்து, இறக்கச் செய்து பிறகு உயிர்த்தெழச் செய்பவன் அல்லாஹ்வே என்றும் அவனே செலவத்தையும், இன்பத்தையும் அதேபோல் சோதனைகளையும், துன்பத்தையும் தருபவன் என்பது இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கை.
பொங்கல் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. விவசாயத்திற்கு உதவிய மழை, சூரியன், காளை மாடு ஆகியவற்றிற்கு இந்த நாட்களில் நன்றி தெரிவிக்கப்படுகிறது.
முதலாவது நாள் போகிப் பண்டிகை எனப்படுகிறது. இந்நாளில் மழையைத் தந்து அதன் மூலம் வளம்மிகு அறுவடைக்கு உதவிய முகில்களின் தெய்வமான இந்திரனுக்கு நன்றி கூறப்படுகிறது.இரண்டாம் நாளான தைப்பொங்கல் நாளில் சூரியனுக்கு பொங்கலிட்டு படைக்கப்படுகிறது. கானும் பண்டிகை அல்லது மாட்டுப் பொங்கல் எனப்படும் மூன்றாம் நாளில் உழுவதற்கு உதவிய மாட்டுக்கும் பாலை வழங்கும் பசுவுக்கும் பொங்கலிட்டு நன்றி கூறுவார்கள். (பார்க்க : http://uyirppu.yarl.net/archives/000190.html )
பொங்கலை உழவுக்கு உதவியவர்களுக்கு நன்றி செலுத்துவதற்காகக் கொண்டாடப்படும் பண்டிகை என்று சொல்லி விட்டு நம்மில் எத்தனை பேர் உழவர்களுக்கு சரியான கூலியை வழங்குகிறோம்? மாடுகளுக்கு நன்றி செலுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு ஜல்லிக்கட்டு
என்ற பெயரில் மாடுகளைக் கொடுமைப்படுத்துகிறோம். இதுவா உழவுக்கு உதவியவ்ர்களுக்கு வந்தனம் செய்யும் முறை?
உண்மையில் பொங்கலன்று மட்டும் நன்றி செலுத்துவதை விட இஸ்லாம் எல்லா நாளும் நன்றியுடையவர்களாக இருக்கச் சொல்கிறது. உதாரணமாக, உழைப்பவனின் வியர்வைத் துளி உலரும் முன் அவனுக்குறிய கூலியை வழங்கி விடுங்கள் என்பது நபிகள் நாயகத்தின் அருள் மொழி. மேலும் அபூஹூரைரா(ரலி) அறிவித்தார்
‘இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்)
நற்பலன் கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(ஆம்:)
உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்)
அதற்கான நற்பலன் கிடைக்கும்”
என்று கூறினார்கள் (புகாரி-6009)
பொங்கல் தமிழர் பண்டிகை என்று சொல்லப்பட்டாலும் அதை கொண்டாடும் முறை இந்துக்களின் வழிபாடாகவே இருக்கிறது. இஸ்லாம் மற்ற மதத்தவரின் வழிபாடுகளில் தலையிடுவதில்லை. தங்கள் நம்பிக்கைக்கு மாற்றமாக இருக்கிறது என்ற காரணத்தால்தான் அவற்றைக் கொண்டாடுவதில்லையே தவிர காழ்புணர்வோ அல்லத் வேறு காரணங்களோ அல்ல.