Featured Posts

நேசகுமாரின் விளக்கங்களுக்கு பதில்!

நபிகள் நாயகம் – அன்னை ஜைனப் திருமணம் குறித்து நேசகுமார் தனது வலைப்பதிவில் நீண்ட விளக்கம் ஒன்று அளித்திருக்கிறார். இந்த நீண்ட கடிதம் எழுதும்முன் எனது முந்திய திண்ணை கடிதத்தை அவர் சற்று கவனமாக படித்திருக்கலாம். இந்த விவாதத்தில் அவர் தரப்பு வாதங்கள் அனைத்தும் ஆதாரமற்ற ஒரு கட்டுக்கதையை அடிப்படையாக கொண்டே அமைந்திருக்கின்றன. பொய்யை உண்மை என்று வாதிடுபவர்களுக்குத்தான் அதற்கான ஆதாரங்களை தெள்ளத்தெளிவாக எடுத்து வைக்க வேண்டிய கடமை இருக்கிறது. மாறாக, பொய்யை ‘பொய்தான்’ என்று சொல்வதற்கும் ஆதாரம் கேட்கிறார் நேசகுமார். நாம் அதற்கும் தயார்!

1. //ஹதீஸ்களிலும் தப்ஸீர் புத்தகங்களிலுமே இந்த ‘கட்டுக்கதை’ காணக்கிடைக்கிறது எனும்போது, எது ஹதீஸ், எது ஹதீஸ் இல்லை என்ற வாதத்தின் அடிப்படையே தகர்ந்து போகிறது.// என்கிறார் நேசகுமார். எனது முந்திய கடிதத்தை அவர் சற்று கவனமாக படித்திருந்தால் இந்த கேள்வியே எழுந்திருக்காது. இங்கு விவாதம் எது ஹதீஸ், எது ஹதீஸ் இல்லை என்பதல்ல. எது ஸஹீஹ் (ஆதாரபூர்வமான) ஹதீஸ், எது ஸஹீஹ் அல்ல என்பதுதான். இதை தெளிவுபடுத்துவதற்காகவே ஹதீஸ் பற்றிய சிறு விளக்கத்தை அளித்திருந்தேன். அது குழப்பவாதமோ, திசைதிருப்பும் முயற்சியோ அல்ல. (இந்த விவாதத்தில் ஷியாக்களைப் பற்றி நேசகுமார் பேச ஆரம்பிப்பதுதான் தெளிவான திசை திருப்பும் முயற்சி!)

2. ஒரு ஹதீஸ் ஸஹீஹ் என்று ஒப்புக்கொள்ளப்படுவதற்கு அதன் அறிவிப்பளர் வரிசை மிக முக்கியமானது. நேசகுமார் குறிப்பிடும் ஹதீஸ், ஸஹீஹ் என்று ஒப்புக்கொள்ளப்படுவதற்கு எந்த தகுதியும் அற்றது என்பதை எனது முந்திய கடிதத்தில் தெளிவு படுத்தியிருந்தேன். இது குறித்து, சகோதரர் அபூமுஹை தனது வலைப்பதிவில் நீண்ட விளக்கம் அளித்திருக்கிறார்.

http://abumuhai.blogspot.com/2004_12_01_abumuhai_archive.html

//முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபி(ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஸைனபைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்ததாக நபி(ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஸைனபும் சொல்லவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் கிடையாது. ஒரு ஆதாரமுமின்றி இவ்வாறு எழுத எப்படித் துணிந்தார்கள்? நபி(ஸல்) அவர்களின் உள்ளத்தில் மறைத்திருந்த எண்ணத்தை நபி(ஸல்) அவர்களின் உள்ளத்தில் ஊடுறுவி அறிந்தார்களா? அல்லது நபி(ஸல்) அவர்களின் கடந்தகால வாழ்வில் ஏதேனும் களங்கத்தைக் கண்டு அதனடிப்படையில் இவ்வாறு அனுமானம் செய்தார்களா? நபி(ஸல்) அவர்களைக் களங்கப்படுத்த வேண்டுமென்பதற்காகவே இஸ்லாத்தின் எதிரிகள் இந்தக் கதையை புனைந்துள்ளனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.//

இதற்கு நேசகுமாரின் பதில் என்ன?

3. நேசகுமார் கூறுகிறார், “இவ்விஷயத்தை பதிவு செய்த ஆரம்பக்கால இஸ்லாமிய அறிஞர்கள் கடுமையாக சோதித்து உண்மையென்று தம்மில் தெளிந்த பின்னரே பதிவு செய்து வைத்துவிட்டு சென்றிருக்கும் நிலையில்..”. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதற்கான ஆதாரங்கள் நேசகுமாரின் கைவசம் இருக்கும் பட்சத்தில், இந்த நிகழ்வு ஒரு ஸஹீஹான ஹதீஸ்தான் என்று நிரூபிக்க நேசகுமாருக்கு எந்த பிரச்னையும் இருக்கப் போவதில்லை. (ஸஹீஹ் என்றால் என்ன என்பதற்க்கு எனது முந்திய பதிவைப் பார்க்கவும்) இதை அவர் ஆதாரங்களுடன் நிரூபித்தால் அதை ஒப்புக்கொள்வதில் யாருக்கும் எந்த தயக்கமும் இருக்கப் போவதில்லை. நேசகுமார் செய்வாரா?

4. நேசகுமார் மேலும் கூறுகிறார், “…இதை கட்டுக்கதை என்று கூறும் மெளதூதியோ மற்றவர்களோ அம்முடிவை, தம்முடைய மதநம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே முன்மொழியும்போது, அதற்கு வேறு ஏதும் சான்று பகராதபோது, இதை எம்போன்றவர்களால் ஒப்புக் கொள்ள முடிவதில்லை.” நேசகுமாரின் இந்த கூற்றும் அடிப்படையற்றதே. இதில், மதப்பிடிப்புள்ள அறிஞர்கள் இந்த நிகழ்வு நபிகளாரை அவதூறு செய்வதாலேயே இதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என்ற கருத்து தொனிக்கிறது. ஒரு ஹதீஸ் ஒப்புக்கொள்ளப்படுவதற்கும், ஒப்புக்கொள்ளப்படாததற்குமான அளவுகோல், முன்பே விளக்கியதுபோல், அது ஸஹீஹ் ஆனதா, அல்லவா என்பதுதானே ஒழிய அது நபிகளாரை போற்றுகிறதா, தூற்றுகிறதா என்பதல்ல. நபிகளாரை அளவுக்கு அதிகமாக போற்றும் ஒரு ஹதீஸ் (“நபியே! உம்மை படைத்திருக்காவிட்டால் இந்த உலகையே படைத்திருக்க மாட்டேன்” என்று இறைவன் அறிவித்தான் என்பது) ஆதாரமற்றது என்பதால், மதப்பிடிப்புள்ள மார்க்க அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

5. நேசகுமார் குறிப்பிடும் நிகழ்வு “ஹதீஸ் மற்றும் தஃப்ஸீர் புத்தகங்களிலேயே காணக்கிடைக்கிறது என்று தீவிர மதப்பிடிப்புள்ள முஸ்லிம்களே ஒப்புக்கொள்கிறார்கள்” என்று சொல்லும் அவர், இதற்கென ‘ரஹீக்’ என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால் அப்புத்தகத்தில் 399-400 பக்கங்களில், மேற்குறிப்பிட்ட அந்த நிகழ்வு அப்பட்டமான கட்டுக்கதை என்றும் அதை இறைவன் எவ்வாறு தெளிவு படுத்தினான் என்றும் விளக்கப் பட்டிருக்கிறது.

அந்நூலிலிருந்து குறிப்பிட்ட அந்த பகுதி:

ஜைனப் (ரழி) நபி (ஸல்) திருமண விஷயத்தில் பெரும் பொய்க் கதைகளையும் கற்பனைகளையும் நயவஞ்கர்கள் புனைந்தனர். அதவது, முஹம்மது ஒருமுறை திடீரென ஜைனபைப் பார்த்து விட்டார். அப்போது ஜைனபின் அழகில் மயங்கி ஜைனபின் மீது காதல் கொண்டார். இதை அறிந்த அவரது வளர்ப்பு மகன் முஹம்மதுக்காக தனது மனைவியை விட்டுக் கொடுத்து விட்டார் என்று கூறினர். இந்தக் கட்டுக் கதையை அவர்கள் எந்தளவு பரப்பினார்கள் என்றால், இன்று வரை அதன் தாக்கம் ஹதீஸ் மற்றும் தஃப்ஸீர் நூற்களில் காணக்கிடைக்கிறது. இந்த பொய்ப் பிரச்சாரம் இறை நம்பிக்கையில் குறையுள்ளவர்களைப் பெரிதும் பாதித்தது. ஆகவே, உள்ளங்களில் ஏற்பட்ட சந்தேக நோய்களைக் குணப்படுத்தும் விதமாக பல தெளிவான வசனங்களை அல்லாஹ் குர்ஆனில் இறக்கி வைத்தான். இது பொய்ப் பிரச்சாரம் என்று அல்லாஹ் அத்தியாயம் அஹ்ஜாபின் தொடக்கத்திலேயே இவ்வாறு கூறுகிறான்.

நபியே! நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிராகரிப்பவர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் (பயந்து அவர்களுக்கு) வழிப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) அறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:1)

6. நேசகுமார் குறிப்பிடும் நிகழ்வு ஆதாரமற்றது என்பதற்கு மேலும் ஆதாரங்கள்:

அல்லாமா ஷபீர் அஹமது உஸ்மானி அவர்களின் ‘த•ப்ஸீரே உஸ்மானி’ எனும் குர்ஆன் விளக்கஉரை நூலில் 33-ம் அத்தியாயத்தின் அடிக்குறிப்பு ஒன்று கீழ்க்கண்டவாறு கூறுகிறது: “..The legends which are described by the unauthentic historians at this place are rejected by Ibne Hajar and Ibne Kathir’

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இப்னு கஸீர் (Ibne Kathir) தனது விரிவுரை நூலில் நபிகளார் – அன்னை ஜைனப் திருமணம் நிகழ்ந்த சூழ்நிலையை விரிவாக விவாதித்திருக்கிறார். நேசகுமார் குறிப்பிடும் சம்பவம் அதில் இடம்பெறாததோடு, ‘இச்சூழலில் அறிவிக்கப்பட்ட சில ஹதீஸ்கள் ஆதாரமற்றவை (ஸஹீஹ் அல்ல) என்பதால் அவற்றை புறக்கணிப்பதே சரி’ என்ற குறிப்பும் இடம் பெற்றுள்ளது.

7. “இச்சம்பவம் இப்னு சாதின் தப்காத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று உணர்ந்தால், அப்போதாவது நபிகள் நாயகமும் நம்மைபோன்று அல்லது நம்மைவிட அதிகமாக ஆசாபாசங்கள் உடையவரே என்பதை சலாஹ¤தீனும் மற்ற இஸ்லாமிய அன்பர்களும் ஒப்புக்கொள்வார்களா?” என்று நேசகுமார் கேள்வி எழுப்புகிறார். நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன், ஒரு பதிவு அரபியில் எழுதப்பட்ட ஒரு நூலில் இடம்பெற்றிருப்பதாலேயே ஆதாரபூர்வமானதாக ஆகிவிடாது. ஒரு ஸஹீஹ் ஆன ஹதீஸ் என்று நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அது ஒப்புக்கொள்ளப்படும். நேசகுமார் தனது வாதத்தை ஸஹீஹ் ஆன ஹதீஸ்களை கொண்டு நிரூபித்தால் அதை எல்லா முஸ்லிம்களும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இதை நிரூபிக்க நேசகுமார் தயாரா?

8. “இம்மாதிரியான விவாதங்களிலிருந்து முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் தமது மதத்தின் குறைபாடுகள் புலப்பட்டு, அது மத வெறியை தணித்தால் சமுதாயம் மிகவும் பயன்பெறும்.” என நேசகுமார் கருத்து தெரிவித்திருக்கிறார். விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவர் எப்படி இந்த ஒரு முடிவுக்கு வந்தார் என்பது எனக்கு புரியவில்லை. விவாதம் ஒரு முடிவுக்கு வரும் சூழ்நிலையில் ‘குறைபாடுகள் இஸ்லாம் மார்க்கத்தில் இல்லை, அதை தவறாக புரிந்து கொண்டவர்களின் செயல்பாடுகளில்தான் இருக்கிறது’ என்பதை அவர் சரியாக புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

9. மற்றபடி, நேசகுமார் இவ்வாறு விவாதம் புரிவதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே! அவர் எழுப்பும் கேள்விகளுக்கு விடை அறிவதற்காக வேண்டியாவது பல நூற்களை படிக்கிறேன். மார்க்க அறிஞர்களுடன் பேசி தெளிவு பெறுகிறேன். இஸ்லாம் ஒரு தெளிவான வாழ்க்கை வழிகாட்டி என்ற என் நம்பிக்கை இன்னும் வலுப்பெற்று வருகிறது.

– சலாஹ¤த்தீன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *