தரீக்கத் الطريقة
அன்றைய புராதன சூஃபித்துவ வாதிகள் முதல் இன்றுள்ள நவீன சூஃபிகள் உட்பட அனைவரிடமும் புரையோடிப் போயுள்ள ஒரு விஷயம்தான் இந்ததரீக்காவாகும். இதி்ல் பல படித்தரங்கள் உள்ளன. சுருங்கக் கூறின் யதார்த்தத்தை அறிந்து கொள்ள விரும்புகின்றவர் முதலில் ஒரு ஷேக்கிடத்தில் பைஅத் செய்து அவர் சொல்லும் வழியில் நடைபயில்வதை இவர்கள் தரீக்கத் என்றழைக்கின்றனர். அதாவது ஒரு ஆத்மீகப் பயிற்சி பெறும் சீடர் தனது உணர்வுகள், புலன்களையெல்லாம் மரணிக்கச் செய்யுமளவு தன்னைச் சிரமத்துக்குள்ளாக்கி தன்னைத்தானே வருத்தி ‘அதஹ்’ எனும் பைத்தியம் போன்ற சுய நினைவிழந்த நிலைக்குக் கொண்டு வருதல் வேண்டும். இதற்கான பயிற்சிகளை அந்த தரீக்காவின் ஷேக்கே முன்னின்று சொல்லிக் கொடுப்பார். இது பற்றி கஸ்ஸாலி இவ்வாறு கூறுகின்றார்..
‘தரீக்கத்தினை அடைவதற்கு கல்வத் (தனித்திருத்தல்), ஜூஉ (பசித்திருத்தல்), ஸஹர்(விழித்திருத்தல்), ஸூம்து(மௌனமாயிரு த்தல்) போன்றன அவசியமாகும்.
( இஹ்யா உலூமுத்தீன் 2-243)
அத்துடன் தனது உடலைத் தானே சிலவேளை வதைத்துக் கொள்ளவும் வேண்டும். இதற்காக நீண்ட நேரம் ஒற்றைக் காலில் நிற்றல், தலைகீழாக நிற்றல், முள்ளின் மீது அமர்தல், நெருப்பால் உடலைப் பொசுக்கல் போன்ற பயிற்சிகளையும் ஷேக்கானவர் மேற்கொள்வார்.
இவர் கூறும் அனைத்தையும் முரீது (சீடர்) எவ்வித மறுப்போ, வெறுப்போ இன்றி மேற்கொள்ள வேண்டுமென்பது சூஃபித் துவத்தின் பொது விதி. சுருங்கக் கூறின் அவர்கள் கூறுவது போல் ‘ஒரு (முரீது) சீடனானவன் தனது ஷேக்கின் முன்னால் மய்யித்தைக் குளிப்பாட்டுபவன் முன் வைக்கப்பட்ட சடலத்தைப் போல் நடந்து கொள்ள வேண்டும். அவனுக்கு எந்தவித விருப்பு வெறுப்போ சுய சிந்தனையோ இருக்கக் கூடாது. அவரின் முன் நின்றால் இவனுக்குப் பேச்சே வரக் கூடாது, அவரது அனுமதியின்றி இவன் (தன்மனைவி உட்பட)எவரிடமும் தொடர்பு கொள்வதோ, குர்ஆன்ஓதல், திக்ர்;, அறிவைத்தேடல் போன்ற எவற்றி லுமோ ஈடுபடக் கூடாது.
(அல் அன்வாருல் குத்ஸிய்யா 1- 187)
அபூ யஸீத் அல் புஸ்தாமி எனும் சூஃபி கூறுகின்றார்..
‘ஒரு ஷேக்கானவர் தனது முரீதை ஒரு வேலையின் நிமித்தம் வெளியே அனுப்பினால் அவன் போகும் வழியிலேயே தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் – இந்த முரீதானவன் இப்போது உடனடியாகத் தொழுது விட்டு அதன்பின் அந்த வேலையை முடிக்கலாம்தானே என்று எண்ணிவிட்டால் கூட அவன் ஆழமறியாத ஒருபாதாளக் கிணற்றினுள் வீழ்ந்தவனைப் போலாவான் என்கின்றார். ( ஸத்ஹாத்துஸ் சூஃபிய்யா ப 343)
ஷேக் றிபாயிஃ கூறுவதைப் பாருங்கள்..
‘ஒரு முரீதுக்கு இருக்க வேண்டிய பண்புகளிலொன்றுதான் தனது ஷேக் எப்போதும் நேரிலும், மறைவிலும் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாக உணரவேண்டும். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஊழியஞ் செய்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். எந்த வேலையைச் செய்யும் போதும் அவரது நினைவு மனதில் வரவேண்டும். அவர் செய்யும் எந்தவிதமான மோசமான காரியங்களையும் கண்டு அதைக் கண்டிக்கக் கூடாது. ஒரு முறை இப்படித்தான் ஒரு ஷேக்கின் வீட்டுக்கு அவரது முரீதானவர் சென்ற போது தனது ஷேக் ஒரு அழகிய பெண்ணிடம் சல்லாபித்து, அவளைக் கட்டிப்பிடித்து, முத்தமிட்டு உடலுறவில் ஈடுபட்டிருக்கக் கண்டார். இதைக் கண்டதும் அதிர்ச்சியுற்ற அவர் அவசரப் பட்டு ‘என்ன காரியம் பண்ணிவிட்டீர்’!! என ஷேக்கைக் கண்டித்து விட்டார்.. உடனே அவர் ஷேக்கிடமிருந்து கற்ற அனைத்து நெறிகளும் அவரிடமிருந்து அந்த இடத்திலேயே பறிக்கப்பட்டுவிட்டன.. (நூல் : கிலாததுல் ஜவாஹிர்; பக்கம் :278)
பிரபல சூஃபி இப்னு அஜீனா கூறுகின்றார்..
ஷேக்குக்கு சிஷ்யன் செய்யும் மரியாதை யாதெனில் அவன் ஷேக்கின் கைகளையும் கால்களையும் முத்தமிட வேண்டும். அவரின் முன் இருக்கும் போது தலை தாழ்த்தி வாய்மூடியிருக்க வேண்டும். முரீதுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டு விட்டால் அவனது மனக் கண்முன் ஷேக்கை முன்னிறுத்தி அவரிடமே தனது நோயை நீக்குமாறு முறையிட வேண்டும். ஏனெனில் இவ்வாறு செய்தால் அல்லாஹ்வின் உதவியால் சந்தேகமின்றி நிச்சயம் சுகம்கிடைக்கும். . (புதூஹாத்துல் இலாஹிய்யா : 308-309)
வழிகெட்ட சூஃபி ஸஃரானி சொல்வதைக் கேளுங்கள்…
ஒரு ஷேக்கின் மீது உண்மையான அன்பு கொள்வது எப்படியெனில் அல்லாஹ்வுக்காகவே ஒன்றை நேசித்து அவனுக்காகவே ஒன்றை வெறுப்பது போன்றே இந்த ஷேகுக்காகவே எதையும் நேசிக்க வேண்டும் அவருக்காகவே எதையும் வெறுக்கவும் வேண்டும். அவ்வாறே ஷேக்கின் கப்ரைத் தரிசிக்கச் சென்றால் அவர் மய்யித், மரணித்து விட்டவர், நாம் பேசும் எதையும் செவியுற மாட்டார் என எண்ணிவிடக் கூடாது. எனினும் அவர் திரையுலகில் உயிருடன் இருப்பதாகவே நம்ப வேண்டும். அப்போதுதான் அவரது பரக்கத் – அருளைப் பெற முடியும். ஏனெனில் முரீதானவர் ஷேக்கின் கப்ரை ஸியாரத் செய்து அல்லாஹ்வை திக்ர் செய்தால் அந்த ஷேகும் கப்ரில் எழுந்து உற்கார்ந்து கொண்டு இவருடன் திக்ர் செய்கின்றார். இதை நாங்கள் பல தடவைகள் நேரடியாகவே கணகளாலேயே பார்த்திருக்கின்றோம். (அன்வாருல் குத்ஸிய்யா 1-169)
அப்துல் காதிர் ஜீலானி கூறுகின்றார்..
ஷேக்- குருவானவர் வெளிப்படையாகச் செய்யும் எக்காரியத்துக்கும் முரீத் மாற்றஞ்செய்யக் கூடாது. மறைமுகமாகச் செய்யும் விஷயங்களில் குறுக்கீடு செய்து எதிர்க்கேள்வி கேட்கவும் கூடாது. (அல்குன்யஹ் 2- 164)
தொடர்ந்து முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கூறுகையில்..
‘நிச்சயமாக ஷேக்கின் மூலம் ஒருவனுக்கு நன்மையுமுண்டு, தீமையுமுண்டு. தனது ஷேக்கை நேசிப்பது மறுமையில் ஒருவன் நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்ந்து கொள்ளக் காரணமாகி விடும் இது அவரில் மூலம் கிடைக்கும் நன்மையாகும், அவருடன் முறண்பட்டு வாதம் செய்வது அவனின் நாசத்திற்குக் காரணமாகிவிடும். இது அவரினால் ஏற்படும் தீங்கு. நீ என் கரத் தைப் பிடிப்பதன் மூலமாக வெற்றி பெற வில்லையென்றால் உனக்கு ஒரு போதும் வெற்றியே கிடையாது.
( அல்பத்ஹூர் ரப்பானி)
ஒரு தடவை ஷகீக் பல்கீ, அபூதுராப் ஆகிய இரு சூஃபிகளும் அபூ யஸீத் அல்புஸ்தாமி எனும் சூஃபியிடம் வந்தனர். இருவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அங்கு ஒரு வாலிபன் அவர்களுக்குப் பணிவிடைக்காக இருந்தான். அவ்விருவரும் வாலிபரே.. எம்முடன் வந்து சாப்பிடு என்று கூற அதற்கவன் ‘நான் நோன்பு ‘ என்றான். அதற்கவர்கள் பரவாயில்லை ஒரு மாத நோன்பின் நன்மையைத் தருகின்றோம் வா.. எனக்கூற அதற்கும் அவன் மறுத்து விட்டான். சரி ஒரு வருடகால நோன்பின் நன்மையைத் தருகின்றோம்; வா என்று கூறினர். அவன் அதற்கும் மறுத்து விடவே ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவர் ‘அல்லாஹ்வின் பார்வையை விட்டும் விழுந்து விட்ட அவனை அவன் பாட்டுக்கு விட்டு விடுங்கள்’ என கோபத்துடன் கூறினார். இதன் காரணத்தால் அவ்வாலிபர் திருட்டுக் குற்றமொன்றில் பிடிபட்டு அவன்கை துண்டிக்கப்பட்டது.. . ( ரிஸாலா குஷேரிய்யா ப : 151)
ஒரு சீடன் தன் ஷேக்கை நேசிப்பது சரத் – நிபந்தனையாகும் என்பது அனைத்து சூஃபிகளும் ஏகோபித்த விஷயமாகும். எந்தளவுக்கு நேசிக்க வேண்டுமென்றால் தனது ஷேக் அல்லாத எவரும் எதைக் கூறினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாது செவிடனைப் போல நடந்து கொள்ள வேண்டும். யார் விமர்சித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அந்தப் பகுதியிலுள்ள மக்கள் அனைவருமே ஒன்று கூடி முயற்சித்தாலும் அவர்களால் இவனை அந்த ஷேக்கை விட்டும் தடுக்க முடியாதளவுக்கு அவனது குருப்பற்று இருக்க வேண்டும். ஷேக்குடைய மகத்துவத்தை மனதில் நிறுத்தி மனக்கண்ணால் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தால் அவனுக்குப் பசி, தாகம் எதுவுமே ஏற்படக் கூடாது. ஒரு சீடருக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டது. அவர் எதுவும் உண்ணாமல் குடிக்காமல் சதா தன் ஷேக்கையே நினைத்துக் கொண்டிருந்தார். ஆனாலும் அவர் இருந்ததை விடக் கொளுத்து விட்டார்.
(அன்வாருல் குத்ஸிய்யா 1-168)
இது போன்ற சூஃபித்துவ வாதிகளின் தரீக்கத் விதிகளையும் நிபந்தனைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வாறான அபத்தமிக்க பைத்தியகாரத்தனமான இஸ்லாத்திற்கு முறணான, இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்த்தெறியக்கூடிய கதைகளையும் புராணங்களையும் லட்சக்கணக்கில் சூஃபித்துவ நூல்களில் நீங்கள் காணலாம். விரிவஞ்சி அவற்றைக் குறைத்துக் கொள்கின்றேன். இக்கட்டுக் கதைகளில் பொதிந்திருக்கும் அபத்தங்களை விமர்சிக்க, விபரிக்க முற்பட்டால் புத்தகம் நீண்டு விடும். எனவே அதை வாசகர்களான உங்களின் ஆய்வுக்கு விட்டு விடுகின்றேன். மிகக் குறைந்தளவு இஸ்லாமிய அறிவுடைய ஒரு பாமரன் கூட இக் கருத்துக்கள் இஸ்லாத்தைத் தகர்க்கக் கூடிய மிகப் பெரிய வெடிகுண்டு, இதற்கும் இஸ்லாத்துக்கும் எள் முனையளவு கூட சம்பந்தம் கிடையாது என்பதை அடித்துச் சொல்வான் என்பது மட்டும் உண்மை.
சுருக்கமாகச் சொல்வதாயின் சூஃபிகளின் தரீக்கத் எனும் இந்த மாயையின் பின்னணியில் ஒரு பெரிய சதிவலையே பின்னப் பட்டிருக்கின்றது. அதாவது அப்பாவிப் பாமரர்கள் மத்தியில் தம்மை விலாயத் பெற்ற இறை நேசச் செல்வர்கள், ஷேக்மார்கள் என அறிமுகப்படுத்தி அப்பாமரர்களை இஸ்லாத்தின் பெயரைக் கூறி ஏமாற்றித் தமது சீடர்களாக்கி ஆத்மீகம் எனும் பெயரில் பொய்களையும் பொய்களையும், அதிசயமிக்க கற்பனைச் சம்பவங்களையும் கூறி மூளைச்சலவை செய்து தன்னைப் பின் பற்றாவிட்டால் வழி கேட்டில் வீழ்ந்து நரகத்துக்குத்தான் செல்ல வேண்டும் எனும் அளவுக்குப் பயமுறுத்தி தாமும் வழி கெட்டு எதுவுமறியா அப்பாவி மக்களையும் வழிகெடுக்கும் ஒரு ஷைத்தானிய ஊடகம் தான் இந்த தரீக்கத் ஆகும்.
இதை விட முக்கியமான பயங்கர விஷயம் யாதெனில் இந்தத் தரீக்கத் வாதிகள் அனைவரினதும் மிக முக்கிய குறிக்கோள் யாதெனில் இஸ்லாத்தையே அழித்து இடித்து வீழ்த்திவிடக் கூடிய இரு கொள்கைளின் பக்கம் தம் சீடர்களை அழைத்து அவற்றைப் போதித்து அதன் மூலம் சுய லாபம் தேடுவதே இவர்களின் அடிப்படை நோக்கமாகும். அவையாவன…
1- வஹ்தத்துல் வுஜூத்: – அத்வைதக் கொள்கை –அதாவது படைப்பினங்களான நாமும் படைத்தவனான அல்லாஹ்வும் ஒன்றுதான்., அவன்தான் பல வடிவங்களில் இப்பிரபஞ்சமாகவும், அதிலுள்ள வஸ்த்துக்களாகவும் காட்சி தருகின்றான் எனும் கொள்கை.
2- அல்ஹூலூல் வல்இத்திஹாத்: அதாவது இறைவன் படைப்பினங்களின் மீது இறங்கி சஞ்சரிக்கின்றான் பின் இறண்டறக் கலந்து விடுகின்றான் எனும் இந்துத்துவ, கிருஷ்தவக் கொள்ளை.
அல்லாஹ் கூறுகின்றான்..
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلاثَةٍ وَمَا مِنْ إِلَهٍ إِلاَّ إِلَهٌ وَاحِدٌ وَإِنْ لَمْ يَنتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ المائدة
‘அல்லாஹ் மூன்று கடவுள்களில் மூன்றாவது கடவுளெனக் கூறிய (அதாவது அல்லாஹ் இயேசுவிலும் அவர் தாயிலும் இறங்க அவர்களும் கடவுளாகி விட்டார்கள் எனக் கூறிய கிருஷ்தவர்கள்) காஃபிர்களாகி விட்டார்கள். ( உண்மைக்) கடவுள் ஒரே கடவுளேயன்றி வேறில்லை. அவர்கள் தாம் சொல் வதை விட்டும் விலகிக் கொள்ளாவிடில் அவர்களில் (இக் கொள்கை மூலம்) காஃபிர்களாகி விட்டவர்களை கடுமையான வேதனை பிடித்துக் கொள்ளும். அவர்கள் அல்லாஹ்விடத்தில் (தமது இக்கொள்கையை விட்டு விட்டு) தவ்பாச் செய்து பாவ மீட்சி பெற வேண்டாமா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனுமாகஇருக்கின்றான்.. (அல்குர்ஆன் : மாயிதா 73)
எனவே சூஃபிகள் உருவாக்கிய தரீக்கத் எனும் ஷைத்தானியக் கோட்டையிலே ஷேக் எனப்படுபவர்தான் அல்லாஹ்வின் அனைத்து ஆற்றல்கள், சக்திகள், வல்லமைகளும் பெற்றவராகக் கருதப்படுவார். அவரின் சீடர்களுக்கு அவர் குருநாதர் மாத்திரமல்ல கடவுளும் அவர்தான். ஷேகுக்கு தெய்வீகத் தன்மைகள் – கடவுளின் சக்திகள் இருப்பதை ஏற்றுக் கொள்ளாத சிஷ்யன் நிச்சயமாக உண்மையான வெற்றிப் பாதையை அடைந்து கொள்ள மாட்டான். வெற்றிப் பாதையெனப்படுவது இவர்களிடத்தில் வஹ்தத்துல் வுஜூத்-கண்ணால் காண்பதெல்லாம் கடவுளே.. எனும் கொள்கையைக் குறிக்கும். ஆம் நரகத்துக்குரிய இலவச நுழைவுச் சீட்டை வென்று தரும் பாதை இதுதான்.. சந்தேகமேயில்லை. தனது ஷேக், கடவுளின் வல்லமைகள் பெற்றவர்,சக்திமிக்கவர் என எண்ணும் சீடனுக்குக் காலப் போக்கில் ‘ஜத்பு ‘ (பைத்தியம் போன்ற சுய நினைவற்ற) நிலை ஏற்படும்.அதன் பின் அவன் தனது ஷேக்கையே கட வுளாகக் காண்பான் என்பதே தரீக்கத் போதிக்கும் தத்துவமாகும்.
இந்தப் பேருண்மையை?? விளங்கிக் கொள்ளவே தரீக்காவிற்குப் பிரவேசிப்பது அவசியம் அங்கிருந்து நேரே நரகம்தான்!!!.. இதைப் பகிரங்கமாக மக்கள் மத்தியில் சொன்னால் ஷேக்மார்களுக்கு அவர்கள் பைத்தியக் கிறுக்கர்கள் என்று பட்டம் சூட்டி விடுவார்கள் என்பது மட்டும் உண்மை.
الاخ الفاضل
السلام عليكم ورحمة الله وبركاته
قرات مقالتك التاميليه
وحبيت ارد عليك
كل الكلام اللي تقول عنه صوفيه ليس بصوفيه
يا عزيزي الصوفيه شي بين العبد وربه والشيخ مجرد شخص يوصل المعلومه ويبين الطريقه الصحيحه لاداء العباده
لا يوجد شخص يحل محل الرب ولا شخص يقدر ان يكون مقام ربه فالشيخ ليس بمرتبة الرب هو انما انسام يعلمنا الطريق الصحيح للجنه
اما هالخرافات التي وردت في مقالتك ليست صوفيه ولا تمثل التصوف وانما جهل
يا اخ الكريم لا تكن راس فتنه