Featured Posts

“தி இந்து” நாளிதழில் 10.10.2013 – “பயங்கரவாதத்தின் வேர்கள்” கட்டுரைக்கு மறுப்பு

H. பீர்முஹம்மது என்பவர் “தி இந்து” நாளிதழில் 10.10.2013 கருத்துப் பேழை பகுதியில் எழுதியிருக்கும் பயங்கரவாதத்தின் வேர்கள் கட்டுரைக்கு மறுப்பு
இஸ்லாமியப் பெயர்தாங்கிகள் சிலர், முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிள்ளையாகப் பிறந்துவிட்ட ஒரே காரணத்தைத் தவிர வேறு எந்த இஸ்லாமிய ஞானமும் இல்லாமல் இஸ்லாமையும் முஸ்லிம்களையும் விமர்சிக்க முன்வந்துள்ளனர்.

இஸ்லாமின் தன்மை, போதனைகள் யாவை? இஸ்லாமைப் பற்றி தெரிந்துக்கொள்வதற்குத் தேவையான மூலாதாரங்கள் எவை? இஸ்லாம் கடந்து வந்த பாதைகள் யாவை? என்பனபோன்ற வரலாற்று நுணுக்கங்கள் சரியான முறையில் புரியாததின் காரணமாக H. பீர்முஹம்மது என்பவர் “தி இந்து” நாளிதழில் 10.10.2013 கருத்துப் பேழை பகுதியில் எழுதியிருக்கும் கட்டுரையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை இஸ்லாமின் மீதும் முஸ்லிம்களின் மீதும் வாரி இறைத்துள்ளார்.

மத்திய கிழக்கில் தன் காலனி ஆதிக்கத்தை நிலைநாட்ட பிரிட்டிஷ் துணையுடன் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்ற பழங்குடி தலைவரால் உருவாக்கப்பட்ட வஹ்ஹாபியம் நவீன உலகில் அரசியல் இஸ்லாம் (Political Islam) என்பதை முன் வைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். வரலாறு தெரியாததினால் ஏற்பட்ட விபரீதம் இப்படி அவரை எழுதத் தூண்டியுள்ளது.

முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் என்ற வீரமிக்க ஏகத்துவ கொள்கை போராளி இவர் குறிப்பிட்டதைப் போன்று பழங்குடி இனத்தைச் சார்ந்தவரல்ல, அவர் சிறந்த பாரம்பரியம் மிக்க கல்வியாளர்கள் குடும்பத்தில் பிறந்தவர். அவர் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை அரேபிய தீபகற்பத்தில் நிலை நாட்டுவதற்காக பாடுபட்டவரல்ல, படைத்த ஏக இறைவனின் போதனைகளை அதன் தூயவடிவில் மக்களுக்குப் போதிப்பதற்காக தன்னை அர்ப்பணித்தவர்.

இஸ்லாமின் அடிப்படை கோட்பாடுகள் மறக்கடிக்கப்பட்டு, மார்க்கத்தின் பெயரால் அனாச்சாரங்களும், மூடப்பழக்கவழக்கங்களும் மக்களிடையில், தலைவிரித்தாடி, சட்ட ஒழுங்கு சீர் குலைந்து, அநியாயங்களும் அக்கிரமங்களும் எங்கும் பரவி, கொலை கொள்ளைகள் மலிந்து காணப்பட்டு, முஸ்லிம்கள் வீடு திரும்பிவர முடியுமா என்ற அச்சத்தோடு ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்த காலகட்டத்தில் தான் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் என்ற வீரமிக்க அந்த மனிதர் கொள்கை உறுதியோடு பாடுபட்டு அத்தனை அனாச்சாரங்களையும் அப்புறப்படுத்தி, சவூதி அரேபியாவில் அன்று வாழ்ந்த மக்களை ஒழுக்க சீலர்களாகவும், கொள்கைப் பிடிப்புள்ளவர்களாகவும் மாற்றியமைத்தார். அல்லாஹுடைய மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் மக்களுக்குப் புரியவைத்து, அதை அப்படியே பின்பற்றுகின்ற மக்களை உருவாக்கினாரே தவிர வஹ்ஹாபியம் என்ற ஒரு கொள்கையை அவர் அறிமுகம் செய்யவில்லை.

இன்று சவூதி அரேபிய அரசின் ஆட்சி சிறப்பாக நிலைபெற்று நிற்பதற்கு முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் பிரச்சாரம் முக்கிய காரணமாகும். அங்கே எந்த தீவிரவாத பயங்கரவாத சம்பவங்களையும் பார்க்க முடியவில்லை. உலகத்தில் அரங்கேற்றப்படுகின்ற அத்துணை தீவிரவாத சம்பவங்களுக்கும் மூல காரணம் வஹ்ஹாபிய பிரச்சாரமே என்ற தவறானகருத்தை கட்டுரையாளர் பீர் முஹம்மது குறிப்பிட்டு, அதுதான் பயங்கரவாதத்தின் வேர்கள் என்ற ஒருமாயையை வெளிப்படுத்தியிருப்பதும் அவருடைய அறியாமையின் வெளிப்பாடுதான்.

மேலும் “வஹ்ஹாபியம் நவீன உலகில் அரசியல் இஸ்லாம் என்பதை முன் வைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். ஏதோ இஸ்லாம் அரசியலை ஆதரிக்காததைப் போன்று, முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் காலத்தில் தான் இஸ்லாமை அரசியல் ஆக்கிவிட்டதாகவும் அதற்கு முன்புவரை இஸ்லாமில் அரசியல் இல்லாததுபோன்ற ஒரு மாயையை வாசகர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளார். அரசியல் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் சிறந்த ஆட்சி முறையின் வரைவிலக்கணம் என்னவென்பதையும், அரசு பொறுப்பில் உள்ளவர்களின் பண்புகள் எப்படி இருக்க வேண்டுமென்பதையும் உலகிற்கு உணர்த்தியதே இஸ்லாமிய மார்க்கம் தான்! படைத்த இறைவனால் அருளப்பட்ட பரிசுத்த குர்ஆனும், அதை தனது வாழ்க்கையில் அமுல்படுத்திக் காட்டிய முஹம்மது நபியின் வாழ்க்கை நெறிமுறையும் உயர்ந்த அரசியல் சாசனமாக இன்றுவரை திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இஸ்லாமை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ஒருவர் அதை முழுமையாகத் தனது வாழ்க்கையில் கடைபிடிப்பதும், அதைப் பின் பற்றுவதில் உறுதியாக இருப்பதும் எப்படி தீவிரவாதமாக ஆகமுடியும். தான் கொண்ட கொள்கையில் பற்றுதலோடு இருப்பதும், அதனுடைய சிறப்பை மற்ற மக்களுக்கு எடுத்துச்சொல்லி அதை பின்பற்றுமாறு அழைப்புக்கொடுப்பதும் அவரவர் உரிமை, அதற்கு இந்த நாட்டில் எந்தத் தடையுமில்லை, இந்த நாட்டின் அரசியல் சாசனம் அதற்கு குறுக்கே நிற்கவில்லை. இப்படிப்பட்ட சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கும் போது, ஒரு இஸ்லாமியன் தான் ஏற்றுக்கொண்ட தலைவரின் வழிகாட்டுதலான தாடி வளர்ப்பது தீவிரவாதத்தின் அடையாளம்என விமர்சித்து “1990க்கு பிறகே இளைஞர்கள் முட்டுவரை தாடிவளர்ப்பதும் ஏற்பட்டது” என்று அந்த கட்டுரையில் இந்த நபிவழி முறையை ஏளனம் செய்துள்ளார். அதே கட்டுரையில் இன்னொரு இடத்தில் “தாடி குறித்த அறிவீனமான பார்வை சமூகத்திற்குள் நிலவுகிறது என்றும் குறிப்பிட்டு நபியின் சுன்னத்தின் மீதுள்ள தனது வெறுப்பை உமிழ்ந்துள்ளார்.

முஸ்லிம்கள் வளர்க்கும் தாடி தீவிரவாதத்தின் அடையாளமென்றால் நாட்டின் பிரதமரும் அவர்சார்ந்த மதத்தினரும் தாடியை தங்கள் மதக்கோட்பாட்டின் அடையாளமாகக் கருதுகின்றனரே அது இவருடைய பார்வையில் தீவிரவாதத்தின் சின்னமாகத் தெரியவில்லையா? எத்தனை இஸ்லாமிய இளைஞர்கள் மூட்டுவரை தாடிவளர்த்துள்ளார்கள்?

தேசிய நீரோட்டத்தோடு முஸ்லிம்கள் இரண்டறக்கலந்துவிட வேண்டும். எந்த வகையிலும் அவர்கள் தங்களை பிற சமூகங்களிலிருந்து தனிமைப் படுத்திக்காட்டக்கூடாது என்ற சிந்தனையை வலியுறுத்தியிருப்பது, தூய இஸ்லாமில் கலாச்சார சீர்கேடுகளை புகுத்துவதற்கான முயற்சியாகும், இதுபோன்ற எழுத்துக்கள் தான் சமூகத்தில் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துக்கின்றன அதுவும் இஸ்லாமிய பெயர்தாங்கிகள் மூலம் இப்படிப்பட்ட கருத்துக்கள் வெளிவருவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

நாட்டிலே அரங்கேறுகின்ற பயங்கரவாதச்செயல்கள் எதுவாக இருந்தாலும் அதை திட்டமிட்டு முஸ்லிம்களின் தலையில் சுமத்தி இந்தச் சமூகத்தைக் கொச்சைப் படுத்தும் நிலை நீண்ட காலமாக இந்த நாட்டில் நடைபெற்றுவருகிறது. எந்த விதமான குற்றமும் நீதிமன்றத்தின் மூலம் நிரூபிக்கப்படாத நிலையில், பலகுற்றங்களில் தேடப்பட்டு வருபவர்கள் என்று காரணம்காட்டி, நடக்கின்ற எல்லா சம்பவங்களையும் அவர்கள் தலையில் கட்டி, அவர்களை பலிகடாவாக்கி, அதை நாட்டுமக்களிடம் பூதாகரமாகச் சித்தரிக்கின்ற வேலைகளை அதிகார வர்க்கம் அரங்கேற்றிவருகிறது. கடைசியாக விசாரணைகள் முடிந்த பின்பு அவர்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டு வெளியில் வருகின்றனர். இவையெல்லாம் அரசியல்வாதிகள் நடத்துகின்ற நாடகங்கள் என்பது அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன.

எனவே உண்மையான பயங்கரவாதிகளைக் கண்டறிந்து அதன் வேர்களைக் களைந்தெறிவதை விட்டு விட்டு அப்பாவிகள் மீது பழி சுமத்தப்படும் காலமெல்லாம் தீவிரவாதம் ஒருபோதும் ஒழியப் போவதில்லை.

அல்-ஜன்னத் மாத இதழ் – நவம்பர் 2013

4 comments

  1. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தவும் குழப்பத்தை உண்டாக்கவும் நயவஞ்சகர்கள் எழுதுவதும் பலமாதிரியான சம்பவங்களை செயல் படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது
    Sent from http://bit.ly/otv8Ik

  2. அவரின் அந்த கட்டுரை மூலம் தனக்கும் இஸ்லாமிய ஞானத்திற்கும் சிறிதும் தொடர்பில்லை என்பதை தெளிவாக கூறியுள்ளார்.. இவர்களெல்லாம் உண்மைக்கு புறம்பாக ஊளையிடும் ஊடகங்களினால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள்.. இவர்களுக்கும் நமக்குமிடையில் தீர்பளிக்க அல்லாஹ் போதுமானவன். – அபூ அஃப்ஷீன்

  3. M.K Hameed Sultan

    Assalamu alaikkum WRBH.

    Your reply is commendable. Why don’t we reply to Hindu in the same column as a reply to his article and inform the readers about True Islam.

  4. hasbunallaha niyamavakil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *