Featured Posts

வாழைப்பழ விவகாரம்!

வெகு காலமாக நடந்து கொண்டிருந்த ஒரு வினோத வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. வெகுகாலமாக என்றால் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த காலத்திலிருந்து. உலகின் பலம் பொருந்திய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கின் மூல காரணம் வாழைப்பழம்! ஆம்.. வாழைப்பழம்தான்.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு, ஐரோப்பிய நாடுகளான ஃபிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் ஆகியவற்றிடம் காலனியாக இருந்த பல சிறிய நாடுகள் சுதந்திரமடைந்தன. இருந்தாலும் தமது முன்னாள் காலனி நாடுகளின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு தம்மாலான உதவிகளை செய்ய வேண்டியது தமது தார்மீக பொறுப்பு என்று உணர்ந்த ஐரோப்பிய நாடுகள், அந்தச்சிறு நாடுகளில் வாழைப்பழ உற்பத்தியை ஊக்குவித்தன. அந்தச்சிறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாழைப்பழங்களுக்கு தம் நாடுகளில் முன்னுரிமை வழங்கின. பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தன. இவ்வாறு, பிரிட்டன் ஜமைக்கா, டொமினிக்கா, செயின்ட் லூசியா போன்ற நாடுகளையும், ஃபிரான்ஸ் ஐவரி கோஸ்ட், கேமரூன் போன்ற நாடுகளையும் ஆதரித்தன. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனி தனது நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படும் வாழைப்பழங்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை.

1980-களின் இறுதியில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்த சின்னஞ்சிறுத் தீவு நாடுகளின் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வாழைப்பழ உற்பத்தியில் தொடர்புடையவர்களாக இருந்தனர்.

இந்த ஏற்பாட்டினால் அதிகம் பாதிக்கப்பட்டது லத்தீன் அமெரிக்க நாடுகளாகிய பிரேசில், கொலம்பியா, வெனிசுவேலா போன்ற நாடுகளில் பெருமளவில் வாழைப்பழம் பயிரிட்டுவந்த பெரிய நிறுவனங்கள்தான். (இந்த நாடுகளில் வாழைப்பழங்கள் பெரிய அளவில் பண்ணைகளில் விளைவிக்கப்படுவதால் அவற்றிற்கான உற்பத்தி செலவு மிக குறைவு. எனவே அவற்றின் விலையும் மலிவு). ஜெர்மனி போன்ற நாடுகளில் 50%-க்கும் மேற்பட்ட வாழைப்பழ சந்தையை தம் கைவசம் வைத்திருந்த இந்த நிறுவனங்கள், ஃபிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளில் தம் கைவரிசையைக் காட்ட முடியாமல் தவித்தன. இவை ஒன்றுகூடி உலக வர்த்தக நிறுவனமாகிய WTO-விடம் முறையிட்டன.

இதைத்தொடர்ந்து அமெரிக்காவும் களத்தில் குதித்தது. ஐரோப்பிய நாடுகள் வாழைப்பழ இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளாவிடில், அந்நாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சில ஆடம்பர பொருட்களுக்கு கடும் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அறிவித்தது. அமெரிக்கா இங்கு ஏன் தன் மூக்கை நுழைக்க வேண்டும் என்கிறீர்களா? லத்தீன் அமெரிக்க நாடுகளில் வாழைப்பழ உற்பத்தியில் பெருமளவில் முதலீடு செய்திருப்பது அமெரிக்க நிறுவனங்கள்தானே!

ஐரோப்பிய நாடுகள் லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாழைப்பழங்களுக்கு ஒரு கோட்டா (quota) முறையை நடைமுறைப்படுத்தியிருந்தன. அதன்படி, லத்தீன் அமெரிக்க உற்பத்தியாளர்கள் ஆண்டு ஒன்றிற்கு 2.7மில்லியன் டன் வாழைப்பழங்களை ஒரு டன்னுக்கு $91 டாலர் வரி செலுத்தி ஐரோப்பிய நாடுகளில் இறக்குமதி செய்யலாம். இந்த கோட்டாவிற்கு மேலதிகமாக இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு ஒரு டன்னிற்கு $825 டாலர் (680 யூரோ) வரி கட்ட வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளின் இந்த கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானது என்று WTO 2000-ல் அறிவித்தது. நிர்ப்பந்தத்திற்கு பணிந்த ஐரோப்பிய நாடுகள் கோட்டா முறையை மறுபரிசீலனை செய்ய ஒப்புக்கொண்டன. சொன்னது போல சில ஆண்டுகள் கழித்து அவை ஒரு புதிய முறையை அறிவித்தன. ஜனவரி 2006-ல் அமுல்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்ட அந்த புதிய முறைப்படி கோட்டா நீக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் எல்லா பழங்களுக்கும் வரி $279 டாலராக (230 யூரோ) குறைக்கப்பட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகள் இதையும் ஏற்றுக் கொள்ளாமல் ஆட்சேபம் தெரிவித்தன.

ஐரோப்பிய நாடுகள் முன்மொழிந்த புதிய முறையை ஆராய்ந்த WTO-வின் நிபுணர் குழு, இதுவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என அறிவித்து விட்டது. இந்த முறையின் மூலம் ஐரோப்பா தனது வாழைப்பழச் சந்தையை முழுமையாக திறந்து விட்டதாக ஆகாது என்று WTO கருத்து தெரிவித்தது.

WTO-வின் இந்த அறிவிப்பு வெளியானதும் பத்திரிக்கைகள், “வாழைப்பழ போரில் லத்தீன் அமெரிக்காவிடம் ஐரோப்பா தோல்வி” (EU loses banana war with Latin America) என செய்தி வெளியிட்டன. அதையே இந்த கட்டுரையின் முதல் வாக்கியமும் சொல்கிறது.

ஆனால், உண்மையில் இந்த விவகாரம் இன்னும் முடிவடையவில்லை என்று தோன்றுகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகள் கோட்டா முறை ரத்து செய்யப்படுவதை வரவேற்றாலும், 230 யூரோ வரி மிக அதிகம் என போர்க்கொடி தூக்கி உள்ளன. 75 யூரோ என்பது ஒரு நியாயமான வரியாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறு நாடுகளின் கருத்து வேறு விதமாக இருக்கிறது. 230 யூரோ வரியே மிக குறைவு என அவர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் குறைந்த விலையில் ஐரோப்பிய சந்தைக்குள் நுழையும் லத்தீன் அமெரிக்க பழங்களுடன் தம்மால் போட்டி போட இயலாது என்பது என்பது அவர்களின் கவலை. மிக முக்கியமான ஐரோப்பியச் சந்தை கைநழுவிப்போவதன் மூலம் இந்தச் சிறு நாடுகளின் வாழைப்பழ ஏற்றுமதி தொழில் முற்றிலும் முடங்கிப்போகும் அபாயம் இருக்கிறது. வாழைப்பழ ஏற்றுமதி இந்தச் சிறு நாடுகளின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்ற சூழ்நிலையில் அவர்கள் கவலைப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை.

இருதலைக்கொள்ளி எறும்பாய்த் தவிக்கும் ஐரோப்பிய நாடுகள் என்ன முடிவு எடுக்கப்போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த தலைப்பு: “தோல்வியடைந்த துணிகர முயற்சி”

15 comments

  1. நெல்லையன்

    சலாஹுதீன் பாய், சுவாரசியமான பதிவுகள். சொல்லப்படும் தகவல் கட்டுரையின் நீளத்தால் சில சமயம் போரடிக்கிறது :-(தட்டவும் செய்யனும் தேவைப்பட்டால் குட்டவும் செய்யனும். இதேன் நம்ம பாலிஸி :-)

  2. உங்களின் குட்டுக்கு நன்றி நெல்லையரே! background தகவல்களை விளக்கமாக சேர்த்ததால் பதிவு நீளமாக போய்விட்டது. இனி வரும் பதிவுகளில் குறைக்க முயல்கிறேன்.

  3. Ramya Nageswaran

    வித்தியாசமான டாபிக்.. நிறைய எழுத வாழ்த்துக்கள்.

  4. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரம்யா நாகேஸ்வரன்!

  5. அவதாரம் viji

    நல்ல தகவல்களை தருகிறீர்கள்.நன்றி.

  6. நன்றி அவதாரம் அவர்களே!

  7. பரஞ்சோதி

    வலைப்பூவில் நல்ல விசயங்களை சொல்லத் தொடங்கியிருக்கும் சலாஹீத்தீன் அவர்களே! பாராட்டுகள்.

    தொடர்ந்து எழுதுங்கள்.

  8. நன்றி பரஞ்சோதி அவர்களே!

  9. சலாஹுத்தீன், வழமையான அக்கப்போர்களைத் தவிர்த்து மாறுபட்ட தளங்களில் பதிகிறீர்கள். பாராட்டுகள். தொடருங்கள், உங்கள் பதிவுகளை.

  10. அவதாரம் viji

    அனைத்து இந்திய நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

  11. அனாமதேயம்

    திண்ணையில் ‘அரவிந்த நீலகண்டன்’ என்ற பெயரில் எழுதியவன் தான் பின்னர் நேசகுமார், ஆரோக்கியம் என்ற பெயர்களில் வலைப்பதிவுகள் தொடங்கி இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் விமர்சிக்கிறான். திண்ணையின் கோப்புகளைத் தேடிப்பார்த்தால், அரவிந்த நீலகணடனின் எழுத்து நடையும், நேசகுமார், ஆரோக்கியம் என்ற பெயர்களில் எழுதுபவனின் எழுத்து நடையும் ஒரே மாதிரி இருப்பது தெரியும். இவனுக்கும், டோண்டு, மாயவரத்தான், ரஜினி ராம்கி போன்றவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இவர்கள் சில நேரங்களில் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதாய் காட்டிக் கொள்வதெல்லாம் வெறும் பம்மாத்து தான்.

    இணையப் புலனாய்வு அதிகாரி

  12. சலாஹுதீன், உண்மையிலேயே அதியற்புதமான எழுத்துகளில் ஒரு அசிங்கமான அமெரிக்க அநியாயத்தைக் காட்டியிருக்கின்றீர்கள்.

    என்னடா இதையெல்லாம் தட்டிக் கேட்க ஆளே இல்லையா என்று வருத்தம் வந்தாலும் கொழுத்த நண்டு வலையில் தங்காது என்பதால் பொறுத்திருக்கலாம்.

    வீண்சண்டையே பாதிக்குப் பாதி நடக்கும் வலைப்பூவில் உங்கள் வலைப்பக்கத்தில் மாறுபட்ட தகவல்கள் இனிமை.

  13. enRenRum-anbudan.BALA

    nalla pathivu, vAzththukkaL !

    I was reminded of actor Senthil too :)

  14. நல்லடியார்

    //அதியற்புதமான எழுத்துகளில் ஒரு அசிங்கமான அமெரிக்க அநியாயத்தைக் காட்டியிருக்கின்றீர்கள்//

    ராகவன் சார்,

    “அமெரிக்க அநியாயம்” அருமையான வார்த்தைப் பிரயோகம். பாதிப்பினால் எழுந்த வார்த்தையோ? :-)

  15. this is really a good posting – informationwise- among the garbage we see in this forum…thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *