Featured Posts

மலரும் நினைவுகள்

டோண்டு ராகவனின் ஹைப்பர் லிங்க் பதிவுகளைத் தொடர்ந்து சில மலரும் நினைவுகள்.

சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை அலுவலக வேலையாக ஜக்கர்த்தா சென்றிருந்தேன். எங்கள் கிளை அலுவலகம் இருந்த அதே தளத்தில் ஒரு முக்கிய வாடிக்கையாளர் நிறுவனமும் இருந்தது. அங்கு தமிழர் ஒருவர் இருப்பதைப்பார்த்தேன். எங்கள் அலுவலக காரியதரிசியிடம் விசாரித்தபோது ‘ஓ.. அவர் மிஸ்டர் சந்திரா. நான் உன்னை அவரிடம் அறிமுகம் செய்துவைக்கிறேன்’ என்று என்னை அவரிடம் அழைத்துச்சென்றாள்.

நான் போனபோது அவர் யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். காரியதரிசியுடன் வந்த என்னை அமரும்படி சைகை காட்டினார். சற்று நேரத்தில் பேசி முடித்துவிட்டு நிமிர்ந்தவர் முகத்தின் சினேக பாவத்துடன் கேட்டார் ‘ம்ம்.. நீங்க என்ன தமிழா?’

‘ஆமாம் சார்!’ என்றேன் நான்.

‘எந்த ஊரு?’

‘நாகப்பட்டினம்’

‘என்னது… நாகப்பட்டினமா?’

‘ஆமாம்!?’

‘நாகப்பட்டினமா?’ என மறுபடியும் நம்பாதவர் போல கேட்டார்.

‘ஆமாம் சார். ஏன் கேக்குறீங்க?’ என்றேன் நான் குழப்பத்துடன்.

‘நானும் நாகப்பட்டினம்தான்’

அதன்பிறகென்ன.. ஒரே ஊர்க்காரர்கள் இரண்டு பேர் சந்தித்தால் என்னென்ன பேசுவார்களோ அதையெல்லாம் பேச ஆரம்பித்தோம். ‘எந்த ஸ்கூல்? வீடு எங்கே? இவரைத்தெரியுமா? அவரைத்தெரியுமா?’ என்றெல்லாம். நான் படித்த சிஎஸ்ஐ பள்ளியில்தான் அவரும் படித்திருக்கிறார். வங்கி மேலாளராக இருந்த அவரது தந்தை சென்னைக்கு மாற்றலாகி சென்றபோது குடும்பத்துடன் சென்னை சென்று அங்கேயே தங்கிவிட்டதாக சொன்னார்.

என்னைவிட வயதில் மூத்தவரான சந்திரசேகரன் எனக்கு ஒரு நல்ல நண்பராகிவிட்டார். மிக குழப்பமான தருணங்களில் நான் ஆலோசனைக்காக நாடும் ஒரு சிலரில் சந்திராவும் ஒருவர். எங்கள் இரு நிறுவனங்களுக்கிடையிலான தொடர்பு பலமாக இருந்துவருகிறது. அதுபோல எங்கள் நட்பும். நாளை பணி நிமித்தம் அவரைச்சந்திப்பதற்காக ஜக்கர்த்தா செல்கிறேன் இன்ஷா அல்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *