சிறப்புமிக்க ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் ஆரம்பித்து விட்டது. ரமலான் மாதத்தில் பள்ளிகளெல்லாம் நிறைந்திருந்தது, நல் அமல்கள் செய்வதில் மக்கள் ஆர்வம் கட்டினார்கள். தவறுகளிலிருந்து மக்கள் மிகத்தூரமாக இருந்தார்கள். (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) இவ்வாறுதான் ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாளையெல்லாம் கழிக்க வேண்டும்.
யார் மரணிக்கும் வரை தன் வாழ்க்கையை அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து மரணிக்கின்றாரோ அவரின் மரண நேரத்தில் வானவர்கள் இறங்கி உனக்கு சுவர்க்கம் உறுதி என்கிற நற்செய்தியை சொல்லுமாறு அல்லாஹ் எங்களை உன்னிடம் அனுப்பியிருக்கின்றான். ஆகவே நீ உன் மறுமை நிலை பற்றி பயப்படாதே! உன் குடும்பம் மற்றும் சொத்து சுகங்களைப் பற்றியும் கவலைப்படாதே! நாங்கள் இரு உலகத்திலும் உனக்கு உதவியாளர்களாக இருப்போம் என அம்மலக்குகள் யாராலும் ஆறுதல் வார்த்தைகள் கூறமுடியாத நேரத்தில் அம்மனிதனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறுவார்கள்.
அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:
நிச்சயமாக எவர்கள் “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் படவேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள். “நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது – அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். “மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன் தரும் விருந்தாகும்” (இது என்று கூறுவார்கள்) (அல்குர்ஆன் 41: 30-32)
நான் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களைத்தவிர வேறு யாரிடமும் கேட்க மாட்டேனே அத்தகைய ஒரு சொல்லை இஸ்லாத்தில் எமக்குக் கூறுவீர்களாக! எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வைக் கொண்டு நான் ஈமான் கொண்டேன் எனக் கூறுவீராக! பின்னர் (அதன் மீதே) உறுதியாக நிற்பீராக! எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அம்ரா ஸுப்யான் பின் அப்தில்லாஹ்(ரலி). (முஸ்லிம்)
இதற்குப் பெயர்தான் உறுதி, எப்படிப்பட்ட சோதனைகள் வரும்போதும், காலங்கள் மாறும் போதும், இடங்கள் மாறும் போதும் நம் நிலை மாறக்கூடாது. ஆனால் பெரும்பாலான முஸ்லிம்களின் நிலை இதற்கு மாற்றமாக இருக்கின்றது. காலத்திற்குக் காலம் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றவர்களும் செழிப்பானபோது ஒரு நிலையும், சோதனை வரும்போது மற்றொரு நிலைக்கு மாறுபவர்கள்தான் அதிகம். நோன்பு மாதம் வந்தால் அல்லாஹ்வை அஞ்சுவதும், மற்ற மாதங்களில் பாவங்கள் செய்வதும், கம்பெனியில் தொழுவதற்கு நேரம் கொடுத்தால் தொழுவது, வீட்டுக்கு வந்தபின் தொழுகையை விடுவது, இஸ்லாமிய சூழலில் இருக்கும் வரை இஸ்லாத்தை கடைபிடிப்பது பிறகு அதை விட்டுவிடுவது போன்ற செயல்கள் நமக்கு வாடிக்கையாகிவிட்டது. ஏன் இந்த மாறுபாடு? இது ஒரு உண்மை முஸ்லிமின் பண்பாக இருக்க முடியாது.
ரமலான் மாதத்தில் எந்த இறைவனை பயந்து வாழ்ந்தோமோ அதே இறைவன் ஷவ்வால் மாதத்திலும் மற்ற எல்லா மாதங்களிலும் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான். இந்த உணர்வு நமது உள்ளத்தில் பதிந்திருக்க வேண்டும். இதோ இஸ்லாத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்கு அல்லாஹ் உதாரணமாகக் காட்டும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாருங்கள்.
மூஸா(அலை) அவர்கள் காலத்தில் எகிப்தை (Egypt) ஆட்சி செய்து கொண்டிருந்த ஃபிர்அவ்ன் தன்னை கடவுள் என பிரகடனம் செய்து கொண்டிருக்கும் போதுதான் மூஸா(அலை) அவர்கள் அங்கு நபியாக அனுப்பப்பட்டார்கள், அவர்களோ அல்லாஹ்வை இறைவனாக நம்பும்படி மக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள், இப்பிரச்சாரத்தை ஏற்றுக்கொண்டவர்களில் ஒருவர்தான் ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா பின்த் முஸாஹிம் அவர்கள்.
மூஸா(அலை) அவர்கள் கொண்டு வந்த கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களை ஃபிர்அவ்ன் கொடுமைப் படுத்தினான், தன் மனைவியையும் கடுமையாக கொடுமைப்படுத்தினான், அனைத்துக் கொடுமைகளையும் ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தில் உறுதியாக இருந்தார்கள் ஆசியா(ரலி) அவர்கள். அரசனாகிய தன் கணவனின் மூலம் கிடைத்த இன்பங்களை துறந்தது மட்டுமல்ல தண்டனையையும் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் இவ்வளவு சோதனைகளுக்கு மத்தியிலும் அல்லாஹ்விடத்தில் “எனக்கு சொர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டிக் கொடு இறைவா” என்றுதான் கேட்டார்கள்.
எந்தவொரு சோதனைகளுக்கு மத்தியிலும் ஒவ்வொரு இறை விசுவாசியும் இஸ்லாத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்கு அல்லாஹ் இத் தியாகியை உதாரணம் காட்டுகின்றான்.
அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் “இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறினார். (அல்குர்ஆன் 66: 11)
ஆகவே ரமலான் மாதத்தோடு நல் அமல்களை முடித்துக் கொண்டு பழைய நிலைகளுக்கு திரும்பிவிடாமல் இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கம் வாய்ப்பளிப்பானாக.
ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு
நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றுதான் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பது. இந்நோன்பை நோற்பதினால் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும்.
யார் ரமலான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
இப்படிப்பட்ட மிக சிறப்புமிக்க நோன்பை பலர் நோற்பதில்லை, ரமலான் மாதத்தின் 30 நோன்பை நோற்ற நமக்கு இந்த ஆறு நோன்புகளை நோற்பது சிரமமான ஒன்றல்ல. இந்த ஆறு நோன்புகளையும் தொடர்ந்து நோற்க முடியாதவர்கள் விட்டுவிட்டாவது நோற்கலாம். ஆனால் ஷவ்வால் மாதம் முடிவதற்குமுன் நோற்க வேண்டும்.
யார் ரமலான் மாத விடுபட்ட நோன்பை நோற்க இருக்கின்றார்களோ அவர்கள், அவர்களின் கடமையான ரமலான் மாதத்தின் நோன்பை நோற்ற பின்புதான் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பை நோற்க வேண்டும்.
Published on: 23 Aug 2012
Republished on: 10 Aug 2013
Republished on: 10 Jul 2016
jazakkAllahu Gaira.
May Allah reward you for giving good advice to All Muslims.
Assalamu Alaikkum Wa Rahmathullah!!
Oh My Brother! some body asks me about shawwal fasting .. how can you say put fasting any 6 days in shawwal month. they said to me that i read after edul fidr you ll have to put fasting continuously . not any days @ month. and they asked me that did you see at hadith about this. What to do Brother. Let me know
Sauvaal nonbu oru naal vittu vaikkalaama?