902. நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்டபோது அளித்த (வலீமா) மணவிருந்ததைப் போன்று தம் மனைவியரில் வேறெவரை மணந்தபோதும் அளிக்கவில்லை; ஸைனப் (ரலி) அவர்களை மணந்தபோது நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை (அறுத்து) மணவிருந்தளித்தார்கள்.
903. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்துக்கொண்டபோது மக்களை அவர்கள் (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள். மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, பிறகு பேசிக்கொண்டே அமர்ந்துவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து போகத் தயாராயிருப்பது போல் (பலமுறை) காட்டினார்கள். ஆனால், மக்கள் எழுந்திருக்கவில்லை. அதைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் (ஒரேயடியாக) எழுந்துவிட்டார்கள். அவர்கள் எழுந்துவிடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்துவிட்டார்கள். ஆனால், மூன்று பேர் மட்டும் அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஸைனப் (ரலி) அவர்களிடம்) செல்லப் போனார்கள். அப்போதும் அவர்கள் அமர்ந்து (கொண்டு பேசிக்) கொண்டேயிருந்தார்கள். பிறகு அவர்கள் (மூவரும்) எழுந்து சென்றார்கள். நான் உடனே, உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் எழுந்து சென்றார்கள் என்று தெரிவித்தேன். மீண்டும் (வெளியே) வந்து பார்த்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் உள்ளே சென்றார்கள். நானும், அவர்களுடன் உள்ளே செல்லப்போனேன். அதற்குள் நபி (ஸல்) அவர்கள் எனக்கும் தமக்குமிடையே திரையைப் போட்டுவிட்டார்கள். அப்போதுதான் அல்லாஹ் ‘இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள்” என்று தொடங்கும் இந்த (திருக்குர்ஆன் 35:53 வது) வசனத்தை அருளினான்.
904. பர்தாவின் சட்டத்தை (எடுத்துரைக்கும் வசனம் அருளப்பட்ட சூழ்நிலை குறித்து) மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நானே. உபை இப்னு கஅப் (ரலி) என்னிடம் அது பற்றிக் கேட்டுவந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் மணாளராக ஆனார்கள். ஸைனப் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் மதீனா நகரில் மணந்தார்கள். அப்போது அவர்கள் உச்சிப் பொழுதுக்குப் பின் மக்களை வலீமா மணவிருந்துக்காக அழைத்திருந்தார்கள். (விருந்து முடிந்து) மக்கள் எழுந்து சென்ற பிறகு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (சற்று நேரம்) அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் வேறு சிலரும் அமர்ந்திருந்தார்கள். இறுதியில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அவர்கள் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களின் அறைவாசலை அடைந்தார்கள். பிறகு வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் வெளியேறிவிட்டதாகக் கருதித் திரும்பி வந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பி வந்தேன். அப்போதும் அந்தச் சிலர் அதே இடத்தில் அமர்ந்திருந்தார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் திரும்பி விட, அவர்களுடன் நானும் இரண்டாவது முறையாகத் திரும்பினேன். இறுதியில் ஆயிஷா (ரலி) அவர்களின் அறை வாசலை அடைந்தார்கள். பிறகு (ஸைனப் (ரலி) அவர்களின் இல்லத்திற்கு) நபியவர்கள் திரும்ப, நானும் அவர்களுடன் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் எழுந்து சென்றுவிட்டிருந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தமக்கும் எனக்குமிடையே திரையிட்டார்கள். அப்போதுதான் பர்தா(வின் சட்டத்தைக் கூறும் இறைவசனம்) அருளப்பெற்றது.
அப்போது (நபியவர்களின்) அந்த இல்லம் மக்களால் நிரம்பியிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மிரு கைகளையும் அந்தப் பண்டத்தின் மீது வைத்து அல்லாஹ் நாடிய (பிரார்த்னைச் சொற்கள் முதலிய)வற்றை மொழியக் கண்டேன். பிறகு அதனை உண்பதற்காக அங்கிருந்த மக்களைப் பத்துப் பத்துப் பேராக அழைக்கலானார்கள். அவர்களிடம், ‘அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! ஒவ்வொருவரும் அவரவர் (கைக்கு) அருகிலிருக்கும் பகுதியிலிருந்து உண்ணுங்கள்!” என்று கூறினார்கள். அவர்கள் அனைவரும் அதனைச் சாப்பிட்டுவிட்டு கலைந்து சென்றனர். அவர்களில் வெளியே சென்றுவிட்டவர்கள் போக ஒரு சிலர் மட்டும் (அங்கேயே) பேசிக்கொண்டு இருந்துவிட்டார்கள். (அவர்கள் எழுந்து செல்லாமல் இருப்பது குறித்து) நான் வருந்தலானேன். பிறகு, நபி (ஸல்) அவர்கள் (வழக்கம் போல்) தம் துணைவியரின்) அறைகளை நோக்கி (அவர்களுக்கு ஸலாம் கூறிப் பிரார்த்திப்பதற்காக)ப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் போனேன். ‘(எழுந்து செல்லாமல் பேசிக்கொண்டிருக்கும்) அவர்கள் போய்விட்டிருப்பார்கள்” என்று கூறினேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்து (ஸைனப் (ரலி) அவர்களின்) அந்த இல்லத்திற்குள் சென்று திரையைத் தொங்கவிட்டார்கள். நான் அந்த அறையிலேயே இருந்து கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) பின்வரும் (திருக்குர்ஆன் 33:53 வது) வசனத்தை ஓதினார்கள்:
இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தாயராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்று விடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. அனஸ் (ரலி) கூறினார்: நான் (சிறுவயதில்) இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பத்தாண்டுகள் பணிவிடை செய்தேன்.