Featured Posts

கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களும் அதைக் களையும் வழிமுறைகளும் (தொடர்-2)

Also visit இக்கட்டுரை தொடர்பான மற்றொரு பதிவு: பீஜே தரப்பினர் பரப்பும் ஸஹீஹான ஹதீஸை உமர் ரலி- மறுத்தார் என்தற்கு இஸ்மாயில் ஸலஃபி அவர்களின் பதில்

– இஸ்மாயில் ஸஃலபி

“குர்ஆன்-சுன்னா”வைப் பின்பற்று வதையே தமது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட உத்தமர்களான உலமாக்கள் மத்தியில் கூட மார்க்க விவகாரங்களில், குறிப்பாக “பிக்ஹு”த்துறையில் கருத்து பல்வேறுபட்ட வேறுபாடுகள் நிலவின. இத்தகைய கருத்து வேறுபாடுகள் எழுவதற்கு சில நியாயமான காரணங்களும் இருந்தன. இவ்வகையில் அங்கீகரிக்கத்தக்க அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் எழுந்ததற்கான நியாயமான காரணங்களைப் புரிந்து கொள்வது அவசியமாகும். அப்போது தான் கடந்த கால அறிஞர்கள் குறித்து தப்பெண்ணம் எழுவதைத் தவிர்க்கவும் நிகழ்காலம் குறித்து நிதானமாகச் செயற்படவும் முடியும்.

1. ஆதாரம் கிட்டாமை:
ஒரு அறிஞர் சுன்னாவுக்கு மாற்றமான ஒரு தீர்ப்பைக் கூறியிருக்கலாம். அதற்கு குறித்த விடயம் சம்பந்தமான நேரடியான ஹதீஸ் அவருக்குக் கிடைக்காதது ஒரு காரணமாக இருக்கலாம். குறித்த விடயம் தொடர்பான தெளிவான ஆதாரம் கிடைக்காத போது பொதுவான அறிவிப்புக்களை அல்லது “இஜ்திஹாதி”ன் அடிப்படையில் அவர் தீர்ப்புக் கூறியிருக்கலாம். அந்தத் தீர்ப்பு குறித்த விடயம் தொடர்பான ஹதீஸ்” கிடைத்த அறிஞரின் தீர்ப்புக்கு மாற்றமாக அமைந்துவிடும்.

இந்நிலையில் நாம் ஆதாரத்தின் அடிப்படையிலான தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் அதே வேளை, ஆதாரம் கிட்டாததால் தவறான தீர்ப்பைக் கூறிய அறிஞரைத் தரம்தாழ்த்தி விடாது கண்ணியப்படுத்தவும் கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில், ஒரு ஆலிம் அனைத்து ஹதீஸ்களையும் அறிந்திருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமுமில்லை. அது சாத்தியமானதுமில்லை. இது குறித்து இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) குறிப்பிடும் போது முன்னோர்கள் அறிஞர்களின் கருத்துக்கள் ஹதீஸிற்கு முரணாக அமைந்திருப்பதற்கு இதுவே பெரும்பாலும் காரணமாக அமைந்துள்ளது என்று குறிப்பிடுகின்றார்கள்.
இன்று இருப்பது போன்று அன்றையக் காலங்களில் ஹதீஸ் நூற்கள் முழுமையாகத் தொகுக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு ஹதீஸிற்காக அவர்கள் மாதக் கணக்கான காலத்தைச் செலவு செய்ய வேண்டியிருந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம். நபித்தோழர்களுக்கு மத்தியில் கூட இந்நிலைமை இருந்தது.

உதாரணமாக, ஒரு பாட்டி தனது பேரனின் சொத்தில் பங்கு கேட்டு அபூபக்கர்(ரலி) அவர்களிடம் வந்தாள். அப்போது அபூபக்கர்(ரலி) அவர்கள் அவளிடம் “உங்களுக்கு பேரன் சொத்தில் பங்கிருப்பதாக அல்லாஹ்வின் வேதத்தில் நான் காணவில்லை. அவ்வாறே சுன்னாவிலும் இது குறித்து எதையும் நான் அறியவில்லை. எனினும் நான் மக்களிடம் இது குறித்து விசாரிக்கின்றேன்” என்றார்கள். அவ்வாறே நபித்தோழர்களிடம் விசாரிதித்த போது, முகீரதிப்னு ஷுஃபா(ரலி), முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் பேரனின் சொத்தில் பாட்டிக்கு 1/6 பங்கை நபி(ஸல்) அவர்கள் வழங்கியதாகக் கூறினார்கள்.

இந்தச் செய்தி மூலம் அபூபக்கர்(ரலி) அவர்களுக்கு இந்த ஹதீஸ் கிட்டவில்லை என்பதையும், சரியான விசாரணை இன்றி அவர்கள் தீர்ப்புக் கூறியிருந்தால் அது சுன்னாவிற்கு மாற்றமாகக் கூட அமைந்து விட சாத்தியம் உண்டு என்பதையும் நாம் அறியலாம். இந்நிலை நபித் தோழர்களுக்கு மத்தியிலேயே காணப்பட்டது எனின, ஏனையோர் நிலை பற்றி கூறவும் வேண்டுமா?

எனவே தான் “எல்லா ஸஹீஹான ஹதீஸ்களும் எல்லா அறிஞர்களுக்கும், அல்லது குறித்த ஒரு இமாமுக்கு எட்டியிருக்கும் என எவராவது நம்பினால் அவன் மிக மோசமான தவறை இழைத்துவிட்டான்” என இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) கூறியுள்ளார்கள்!

எனவே, அனைத்து ஹதீஸ்களையும் எல்லோரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஹதீஸ் கிட்டாத போது ஒரு அறிஞரின் தீர்ப்பில் பிழை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த அடிப்படையில் தான் அறிஞர்களுக்கு மத்தியில் “பிக்ஹ்” உடைய விடயங்களில் அனேக கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன.

2. ஆதாரம் கிட்டி, அதை அவர் உறுதியற்றதாகக் கருதியிருக்கலாம்:
ஹதீஸ்களைத் தரம் பிரிக்கும் விடயத்தில் அறிஞர்கள் பல்வேறுபட்ட விதிகளைக் கையாண்டுள்ளனர். ஒரு ஹதீஸை “ஸஹீஹ்” எனக் கூற இமாம் புகாரியும், இமாம் ஹாகிமும் கையாண்ட விதிகள் வித்தியாச மானவையாகும். முன்னையவர் ஹதீஸை “ஸஹீஹ்” எனக் கூறுவதில் கடும் போக்கையும், பின்னையவர் மிதவாதப் போக்கையும் கையாண்டார். இந்த வகையில் இமாம் ஹாகிம் ஒரு ஹதீஸை “ஸஹீஹ்” என்று கூறினால், அது சற்று மீளாய்வு செய்யப்பட வேண்டியதாகும். அதே வேளை அவர் பலவீனமானது எனக் கூறினால், அது நிச்சயம் பலவீனமானதாகவே இருக்கும்.

இவ்வகையில் மார்க்க அறிஞர்களில் ஒருவர் “ஸஹீஹான ஹதீஸ்” எனக் கருதும் செய்தியை மற்றவரின் கணிப்பீட்டின்படி அவர் பலவீனமானது எனத் தீர்மானித்திருக்கலாம். அப்படித் தீர்மானித்துத் தீர்ப்புக் கூறும்போது தன் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது!

இதற்குப் பின்வரும் சம்பவத்தை உதாரணமாகக் கூறுவர்.

பாதிமா பின்த் கைஸ் என்ற பெண்மணியை அவரது கணவர் மூன்றாவது “தலாக்”கும் கூறிவிட்டார். அப்பெண் இத்தா”வில் இருக்கும் போது சிறிது உணவையும் பணத்தையும் வாழ்க்கைத் தேவைக்காக அவர் அனுப்பி வைத்தார்.

அப்பெண்ணோ இது தனக்குப் போதாது எனக் கூற, பிரச்சினை நபி(ஸல்) அவர்களிடம் சென்றது. அப்போது நபியவர்கள் “உனக்கு அவர் உணவோ, உறைவிடமோ வழங்க வேண்டியதில்லை” என்று கூறினார்கள்.

மூன்று “தலாக்” கூறப்பட்ட பெண் கர்ப்பிணியாக இருந்தால், குழந்தையைப் பெறும்வரை வாழ்க்கை வசதியைக் கணவன் அளிக்க வேண்டும். முன்னிரு “தலாக்” கூறப்பட்டு பெண் “இத்தா”வில் இருக்கும் போது கணவன் வாழ்வாதாரம் வழங்க வேண்டும். மூன்றாவது “தலாக்” கூறிவிட்டால், வழங்க வேண்டியதில்லை என இந்தச் செய்தி கூறுகின்றது. இந்தச் செய்தியை உமர்(ரலி) அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. குர்ஆனில் பொதுவாக வாழ்வாதாரம் வழங்க வேண்டும் என்று வந்துள்ளது. அப்படியிருக்க, ஒரு பெண்ணின் பேச்சை நம்பி குர்ஆனின் கூற்றை விடுவதா? இப்பெண் சிலவேளை மறந்திருக்கலாமே” என்று கூறினார்கள்.

இங்கே உமர்(ரலி) அவர்களின் பார்வையில் இந்த ஹதீஸ் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அவர் அளிக்கும் தீர்ப்பு இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டவர்கள் அளிக்கும் தீர்ப்புக்கு முரண்படுவது தவிர்க்க முடியாததாகும்.

இந்த விடயத்தில் அறிஞர்களுக்குக் கூட ஐயம் இருந்ததால் தான், “நான் கூறியதற்கு ஸஹீஹான ஹதீஸ் முரண்பட்டால், எனது கூற்றை விட்டு விட்டு ஸஹீஹான ஹதீஸை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார் கள். இந்நிலையில் ஒரு அறிஞர் தீர்ப்புக் கூறியிருந்து அது தவறாகவும் அமைந்திருந்தால், சரியான கூற்றை ஏற்று அமல் செய்வதுடன், குறித்த அறிஞரையும் குறைகாணாது மதித்து நடக்க வேண்டும். உதாரணமாக, “ஸுப்ஹுடைய குனூத்” விடயமாக வரும் செய்தி ஸஹீஹானது என்ற அடிப்படையில் சுபஹில் குனூத் ஓதுவது சுன்னத்து என இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த ஆதாரங்கள் பலவீனமானது என உறுதியாகத் தெரியவந்தால், “சுபஹ் குனூத்”தை விடுவதுடன் இதைச் சுன்னா எனக் கூறிய இமாம் ஷாபி(ரஹ்) அவர்களை மதித்தும் நடக்க வேண்டும்.

3. ஆதாரம் கிட்டி, அதை மறந்து விடுதல்:
ஒருவர் ஹதீஸை அறிந்திருந்தாலும், குறித்த பிரச்சினைக்குத் தீர்வு கூறும்போது, அதை மறந்து விடலாம். சிலபோது ஹதீஸையே முழுமையாக மறந்து விடலாம். சிலவேளை ஹதீஸ் நினைவு வரலாம். இச்சந்தர்ப்பத்தில், தான் முன்னர் அளித்த தீர்ப்புக்கு மாற்றமாகப் பின்னர் தீர்ப்பளிக்கும் நிலையும் ஏற்படலாம்.

இதற்கு உமர்(ரலி), அம்மார்(ரலி) ஆகிய இருவரும் சம்பந்தப்பட்ட சம்பவம் நல்லதொரு உதாரணமாகும். நபியவர்கள் இவ்விருவரையும் ஒரு வேலைக்காக அனுப்பினார்கள். இருவருக்கும் குளிப்புக் கடமையானது. அம்மார்(ரலி) அவர்கள் மண்ணைத் தண்ணீரோடு ஒப்பிட்டு மண்ணில் புரண்டு எழுந்து தொழுதார்கள். உமர்(ரலி) அவர்கள் தொழவில்லை. பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது நபியவர்கள் “தயம்மும்” செய்யும் முறையைக் கற்றுக் கொடுத்தார்கள். இந்தச் செய்தியை உமர்(ரலி) அவர்கள் முழுமையாக மறந்துவிட்டார்கள். இதனால் கடமையான குளிப்புக்குத் “தயம்மும்” செய்வது பற்றி மாறுபட்ட அபிப்பிராயத்தை அவர் கொண்டிருந்தார். இந்த சம்பவத்திலிருந்து மறதி காரணமாகக் கூட அறிஞர்களுக்கு மத்தியில் அபி;ப்பிராய பேதம் எழலாம் என்பதைப் புரியலாம்.

4. ஆதாரம் கிட்டி, அது என்ன நோக்கத்தைக் கொண்டுள்ளதோ, அதற்கு மாற்றமான விதத்தில் அதை விளங்கிக் கொள்ளுதல்:
மனிதனின் விளங்கும் ஆற்றல் வேறுபட்டதாகும். சிலபோது சில ஆயத்துக்களையும், ஹதீஸ்களையும் ஒருவர் தவறாக விளங்கிவிடலாம். அதனால் அவர் அறிவில் குறைந்தவர் என்று கூட ஆகிவிடாது! அறிஞனும் கூட தவறாக விளங்கலாம்.

இந்நிலையில் கூட கருத்து வேறுபாடு உருவாகலாம். இதற்கு “வுழூ” பற்றிப் பேசும் 3:6 ஆம் வசனத்தில் இடம்பெறும் “அவ்லாமஸ்துமுன்னிஸா” அல்லது “நீங்கள் பெண்களைத் தீண்டினாலும்..” என்ற சொற்றொடரை உதாரணமாகக் கூறலாம். பெண்களைத் தீண்டினால் “வுழூ” முறியும் என்று இந்த வசனம் கூறுகின்றது!

இதைப் பார்த்த சிலர் “தொடுதல்” என்பதே “வுழூ”வை முறிக்கும் என்றனர். மற்றும் சிலர் “ஆசையுடன் தொட்டால்”, வுழூ முறியும் என்றனர். மற்றும் சிலர் ஆடையின்றி தொட்டால் வுழூ முறியும் என்றனர். சிலர் பட்டாலே வுழூ முறியும் என்றனர். மற்றும் சிலர் “தீண்டுதல்” என்பது உடலுறவைக் குறிக்கவே பயன்படுத்தப் பட்டுள்ளது என்றனர்.

இது இந்த வசனத்தில் பயன்படுத்தப் பட்ட வார்த்தையை விளங்கிக்கொள்வதில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வால் எழுந்த கருத்து வேறுபாடுதான் இது. இந்த அடிப்படையில் நல்ல நோக்கோடு ஆய்வு செய்த அறிஞர் முடிவில் தவறு விட்டால் கூட முயற்சித்ததற்குக் கூலியுண்டு என ஹதீஸ்கள் கூறும் போது நாம் எப்படி அவரைக் குறைகாணலாம்? எனவே இந்நிலை தொடர்ந்து நீடிக்கும். நாம் தாம் நிதானம் தவறாத நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டும்.

5. ஆதாரம் கிடைத்து அது “மன்சூஹ்” – மாற்றப்பட்டதாக இருக்கும். ஆனால், அது மாற்றப்பட்டதை இவர் அறியாது இருக்கலாம்:
இஸ்லாத்தில் “நாஸிஹ் மன்சூஹ்” “மாற்றியது, மாற்றப்பட்டது” என்ற சட்டம் உள்ளது. ஆரம்பத்தில் உள்ள ஒரு சட்டத்தைப் பின்னால் வந்த சட்டம் மாற்றியிருக்கும். இந்த சந்தர்ப்பத்தில் “நாஸிஹ்” – மாற்றிய ஆதாரத்தின் அடிப்படையில் தான் செயல்பட வேண்டும். ஆயினும் ஒரு அறிஞர் மாற்றப்பட்ட ஆதாரத்தை வைத்து அது மாற்றப்பட்டது என்பதை அறியாததினால் தீர்ப்புக் கூறி விடலாம். மற்றொருவர் மாற்றிய ஆதாரத்தின் அடிப்படையில் தீர்ப்புக் கூறும் போதும் இரண்டும் முரண்படலாம். இச்சந்தர்ப்பத்தில் மாற்றிய அதாவது பின்னர் கூறப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில் செயல்படுவதுடன், தெரியாமல் மாற்றப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில் தீர்ப்புக் கூறியவரை மதித்தும் நடக்க வேண்டும்.

நபித் தோழர்களிடம் ஏற்பட்ட அனேகக் கருத்து வேறுபாடுகள் இந்த அடிப்படையில் எழுந்ததாகவே இருந்தன. உதாரணமாக, உடல் உறவில் ஈடுபட்டு விந்து வெளிப்படாவிட்டால், குளிக்க வேண்டியதில்லை என ஆரம்பத்திலும், பின்னர் குளிக்க வேண்டும் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். குளிக்க வேண்டியதில்லை என்ற சட்டம் மாற்றப்பட்டதை அறியாத உமர்(ரலி) போன்றோர் இந்நிலையில் குளிக்க வேண்டியதில்லை என்ற அடிப்படையில் செயல்பட்டு வந்தனர். பின்னர் இது குறித்த சர்ச்சை எழுந்தபோது, ஆயிஷா(ரலி) அவர்களிடம் விசாரித்து குளிக்கத் தேவையில்லை என்ற சட்டம் மாற்றப்பட்டு விட்டதை அறிந்து தமது கருத்தை மாற்றிக் கொண்டார்கள்.

6. பலவீனமான ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளல்:
சிலர் “ழயீப்” ஆன ஹதீஸின் அடிப்படையிலும் செயற்படலாம் என்ற கருத்தில் இருக்கலாம். அதன் அடிப்படையில் அவர் ழயீபான ஹதீஸின் அடிப்படையில் தீர்ப்புக் கூறலாம். அல்லது ழயீபான ஹதீஸை, ஸஹீஹ் என்று எண்ணித் தீர்ப்புக் கூறலாம். இது இந்நிலைக்கு மாற்றமானவர்களின் முடிவுகளுடன் முரண்படலாம். ழயீபான ஹதீஸை, ஸஹீஹான ஹதீஸ் என எண்ணித் தீர்ப்புக் கூறியவர் பின்னர் உண்மையை அறியும் போது தான் முன்னர் கூறியதற்கு முரணான முடிவைக் கூட முன்வைக்கலாம். இந்த அடிப்படையிலும் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் எழுந்துள்ளதைக் காணலாம்.

7. அடிப்படை விதிகளிலும், ஆதாரமாகக் கொள்ளும் விதங்களிலும் ஏற்பட்ட முரண்பாடு:

அங்கீகரிக்கத்தக்க அறிஞர்கள் அனைவரிடமும் பல்வேறுபட்ட அடிப்படை விதிகள் இருந்தன. அந்த விதிகளை மையமாக வைத்தே அவர்கள் முடிவுகளை முன்வைத்தனர். விதிகள் முரண்படும் போது முடிவுகளும் முரண்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது!

உதாரணமாக “ஆஹாதான” – அதாவது மூன்றுக்கும் குறைந்த நபர்கள் அறிவிக்கும் ஹதீஸும் மதீனாவாசிகளின் நடைமுறையும் முரண்பட்டால் மதீனாவாசிகளின் நடை முறைக்கு இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஏனெனில், மதீனாவாசிகளின் நடைமுறைகளும் பழக்க வழக்கங்களும் சுன்னாவைக் கொண்டு தொடரப்பட்டதாகும். அதே வேளை அந்த நடைமுறை தவறு என்றால் அறிஞர்கள் மதீனாவில் அதிகமாக இருந்ததினால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும். எனவே, மதீனாவாசிகளின் நடைமுறை குறைந்த சிலரின் அறிவிப்பை விட பலமானது என அவர்கள் கருதினார்கள். இந்தக் கருத்தை அனேக அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறே ஒரு அறிவிப்பாளர் ஹதீஸை அறிவித்து விட்டு அவரே அதற்கு முரணான விதத்தில் செயல்பட்டால், அவரின் அறிவிப்பை எடுப்பதா? அல்லது செயலை எடுப்பதா? என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் உள்ளது. இமாம் அபூஹனீபா அவர்கள் அந்த அறிவிப்பாளர் மார்க்க அறிஞராக இருந்தால், அவரின் செயலையே ஆதாரமாகக் கொள்ள வேண்டும். ஏனெனில், அந்த ஹதீஸின் உண்மையான விளக்கத்தை அவரே சரியாக அறிந்து வைத்திருக்க அதிகம் வாய்ப்புள்ளது. சிலபோது அவர் அறிவித்த செய்தி மாற்றப்பட்டதாகக் கூட இருக்கலாம். அதனால் தான் அவர் தனது அறிவிப்புக்கு மாற்றமாகச் செயற்பட்டிருப்பார் என்ற அடிப்படையில் இந்த முடிவை இமாமவர்கள் எடுத்தார்கள். எனினும் ஏனைய அறிஞர்கள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் அறிவிப்புக்கே முக்கியத்துவமளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பட்டனர்.

இவ்வாறே இமாம் அஹ்மத் அவர்கள் தனது சொந்த அபிப்பிராயமும், ழயீபான ஹதீஸும் முரண்பட்டால், தனது கருத்தை விட ழயீபான ஹதீஸிற்கு முன்னுரிமை அளிப்பார்கள். ஏனெனில், அறிவிப்பாளரின் நிலையை அடிப்படையாகக் கொண்டு ழயீப் எனத் தீர்மானிக்கப்பட்ட ஹதீஸ், ஸஹீஹானதாகக் கூட இருக்க வாய்ப்புள்ளது! இந்த அடிப்படையில் அவர்களது தீர்மானங்கள் அமைந்திருந்தன.

இவ்வாறு நோக்கும் போது அங்கீகரிக்கத்தக்க அறிஞர்களுக்கு மத்தியில் நியாயமான அடிப்படைகளில் அபிப்பிராய பேதங்கள் எழுந்தன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். தொடர்ந்து கருத்து வேறுபாடுகளை எவ்வாறு களைய வேண்டும், இது விடயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய “ஆதாபுல் ஹிலாப்” கருத்து வேறுபாடுகள் விடயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் குறித்தும் நோக்குவோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

2 comments

  1. yasirfirdousi bahrain

    சகோதரர் இஸ்மாயில் salafi அவர்களின் கட்டுரை இக்காலகட்டத்திற்கு
    மிகவும் பயனுள்ளது அல்லாஹு ராப்புல்ஆலமீன் அவருடைய கல்வியை
    அதிகப்படுதுவானாக!

  2. அருமையான கட்டுரை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *