Featured Posts

மனிதன் செய்யும் நல்லமல் இம்மையில் பயன் தருமா? – வஸீலா ஒரு விளக்கம் (1)

-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி
அல்லாஹ்வை ரப்பாக ஏற்று அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை வழி காட்டியாக ஏற்று ஈமானின் அம்சங்களை நம்பி செயற்பட வேண்டிய கடமை ஒரு முஸ்லிமுக்கு உண்டு.

அல்லாஹ்வின் வேதத்தையும் நபிகளாரின் ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் கலப்படமற்ற எண்ணத்துடன் (இஹ்லாஸுடன்) செயற்படுத்தும் போதே அது இபாதத்தாகக் கணிக்கப்படும் அந்த இபாதத்களுக்கே நன்மைகளும் வழங்கப்படும் என் பதை அல்குர்ஆனும் ஹதீஸும் தெளிவு படுத்துகிறது.

இந்நிலையில் அமல்கள், இபாதத்கள் புரிபவனுக்கு மறுமையில் மகத்தான கூலி கள் வழங்கப்பட்டு சுவனமும் பரிசாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த உலகிலேயே அந்த இபாதத்திற்கான நற்பலன்களும் காட்டப்படுகின்றன.

அல்லாஹ் கூறுகிறான்:

“விசுவாசம் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அவனிடத்திலே “வஸீலா” தேடுங்கள். அவனது பாதையிலே போர் புரியுங்கள். வெற்றியடைவீர்கள். (அல்குர் ஆன் 5:35)

இந்த வசனத்தில் விசுவாசிகளை அழைத்து முக்கியமான மூன்று கட்டளைகள் சொல்லப்படுகின்றன.

1. அல்லாஹ்வை அஞ்சி தக்வாவுடன் வாழ வேண்டும்.
2. அல்லாஹ்விடத்தில் வஸீலா தேட வேண்டும்.
3. அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிய வேண்டும்.

தக்வா என்றால் என்ன? அதனை எப்படி செயலாற்ற வேண்டும் என்பதும் அல்லாஹ்வின் பாதையில் எப்படி ஜிஹாத் (போர்) புரிய வேண்டும் என்பதும் நன்கு தெரியும். ஆனால், அல்லாஹ்விடத்தில் எப்படி வஸீலா தேடுவது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை.

“வஸீலா” என்ற இந்த வார்த்தைக்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்கம் சொல்லும்போது, “அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தைப் பெறுதல்” என்பதாகக் கூறுகிறார்கள். அபூ கதாதா (ரஹ்) அவர்கள் கூறும்போது “அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து அவனுக்கு உவப்பான முறையில் நடந்து, அவனது நெருக்கத்தைப் பெறுதல்” என்று கூறுகிறார்கள். (நூல்: தப்ஸீர் இப்னு கஸீர்)

அல்லாஹ்வுக்கும் மனிதனுக்கும் இடையில் நெருக்கத்தைப் பெறுவதற்கு எந்த நற்காரியம் உதவி புரியுமோ அதுவே வஸீலா எனப்படும்.

இதனடிப்படையில் ஒரு விசுவாசி அல்லாஹ் விரும்புகின்ற பிரகாரம் அமல்களைப் புரிந்து அதன் பொருட்டாக அல்லாஹ்வின் நெருக்கத்தை, அன்பை, ரஹ்மத்தை பெற வேண்டும். தான் புரிகின்ற நல்லறங்களினூடாக அல்லாஹ்வின் அன்பைப் பெறும்போது இம்மையிலும் மறுமையிலும் அவன் மிகச் சிறந்த ஸாலிஹான மனிதனாக ஆகிவிடுகின்றான்.

ஸாலிஹான மனிதன் என்ற அந்தஸ்து இறைவிசுவாசியான ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாம் வழங்கியுள்ளது. “விசுவாசம் கொண்டவர்களே!” என்று அல்குர்ஆன் ஆண் பெண் இரு சாராரையும் விழித்தே பேசுகிறது. விசுவாசியான ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அல்லாஹ்வின் நெருக்கத்தின் பால் விரையுங்கள் என்ற கட்டளையை குர்ஆன் கொடுக்கிறது.

அல்லாஹ்வின் பால் நெருக்கத்திற்குக் காரணமான அந்த நல்ல அமல்களை முன்வைத்து அல்லாஹ்விடம் உதவி தேடுமாறும் பிரார்த்தனைகள் செய்யுமாறும் கட்டளையிடுகிறது.

“விசுவாசம் கொண்டவர்களே! பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமை யாளர்களுடன் இருக்கிறான்”. (அல்குர்ஆன் 2:153)

தொழக் கூடிய ஒவ்வொரு தொழுகையாளியும் தன்னுடைய தொழுகையை முன் வைத்து தனக்குத் தேவையான உதவிகளை அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். அல்லாஹ்வுடைய சோதனைக்கு ஆளாகும் போது அதனை பொறுமையாக சகித்துக் கொண்டு அந்த பொறுமையை முன் வைத்து துஆ கேட்க வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் இபாதத்தை முன்வைத்தே துஆ கேட்க வேண்டும்.

யாஅல்லாஹ்! இந்த தொழுகையை உனக்காகத் தொழுதேன். உன் திருப்தியை நாடித் தொழுதேன். எனது இந்த தேவையை நிறைவேற்றித்தா என கஷ்டங்கள், துன்பங்களின்போது பொறுமையைக் கடைப்பிடித்து, தான் தொழுத தொழுகையை (செய்த நல்லமலை) முற்படுத்தி பார்த்திக்கலாம்.

யா அல்லாஹ் நோயைத் தந்து என்னை சோதித்தபோது பொறுமைiயாக இருந்து உன் திருப்தியை நாடி சகித்துக் கொண்டேன். எனது இந்த பொறுமையை முன்வைத்து உன்னிடம் எனது இப்போ துள்ள இந்தத் தேவையை கேட்கிறேன் என பிரார்த்திக்கலாம். (இதுபோன்ற வாசக அமைப்பில் கேட்கலாம்.)

பிரார்த்தனையின்போதும் அல்லாஹ் விடம் கையேந்தி துஆ கேட்கும்போதும் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து அவனது சிறப்புக்குரிய பெயர்களை (அஸ்மாஉல் ஹுஸ்னா) கூறி பிரார்த்திக்க வேண்டும்.

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உண்டு. எனவே அந்த அழகிய பெயரைக் கொண்டே அவனை அழையுங்கள். (7:180)

நபியே! நீர் கூறும், நீங்கள் அல்லாஹ் என்று அழைத்தாலும் சரி! அர்ரஹ்மான் என்று அழைத்தாலும் சரி! எந்தப் பெய ரைக் கூறியும் (அவனை) அழையுங்கள். அவனுக்குரிய பெயர்கள் அனைத்தும் நல்லவைதாம். (17:110)

ஒவ்வொரு இறைவிசுவாசியான ஆணும் பெண்ணும், தான் செய்கின்ற நல்லறங்களை முன்வைத்தே அல்லாஹ் விடம் கேட்பதற்கு உரித்துடையவர்கள். “நான் செய்த நல்லமல்களுக்காக உன்னிடம் என் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்கிறேன்” என்றே பிரார்த்திக்க வேண்டும். அப்படி பிரார்த்திக்குமாறு குர்ஆனும் ஹதீஸும் வழிகாட்டுகிறது. மேலேயுள்ள 5:35 வசனமும் நேரடியாக அப்படித்தான் கட்டளையிடுகிறது.

மூன்று குகைவாசிகள் தாங்கள் செய்த நல்லறங்கள் குறித்து அல்லாஹ்விடம் உதவி தேடிய போது உதவி கிடைத்தது என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் பின்வருமாறு புகாரியில் பதிவாகியுள்ளது.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவிக்கின்றார்கள்:
“உங்களுக்கு முன் வாழ்ந்தோரில் மூன்று நபர்கள் (வெளியூர்) சென்றார்கள். செல்லும் வழியில் ஒரு குகையில் இவு தங்கும்படியான (சூழல்) ஏற்பட்டு, அதில் அவர்கள் நுழைந்தார்கள். (அப்போது) மலையிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து, அவர்கள் இருந்த குகையின் வாசலை அடைத்துவிட்டது. அப்பொழுது அவர்கள், “நாம் செய்த செயல்களில் நல்லதைக் கூறி அல்லாஹ்விடம் நாம் பிரார்த் தனை செய்தாலே தவிர, இந்தப் பாறையிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள இயலாது” என்று (தங்களுக்குள்) பேசிக் கொண்டார்கள். (பின்னர் ஒவ்வொருவராக தாங்கள் செய்த அமலை முன்வைத்து உதவி தேடி பிரார்த்திக்கலானார்கள்.)

“இறைவா! எனக்கு வயதான பெற்றோர் உண்டு, அவ்விருவரும் உண்ணும் முன் குடும்பதாருக்கோ, ஊழியர்களுக்கோ நான் பால் தர மாட்டேன். ஒருநாள் விறகு தேடி வெகு தூரம் சென்றுவிட்டேன். இரவு கடந்துவிட்டது. என் பெற்றோருக்காக நான் பாலைக் கறந்து எடுத்து வந்தேன். இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். எழுப்ப மனமில்லாமல் அவர்கள் விழிக்கும் வரை காத்திருந்தேன். அதற்கு முன் என் குடும்பத்தினருக்கு அதனைக் கொடுக்க விருப்பமில்லை.

இறுதியில் காலை நேரமும் வந்துவிட்டது. குழந்தைகள் என் காலடியில் பசியுடன் தூங்கிவிட்டார்கள். என் பெற்றோர் விழித் தனர். இருவரும் பாலை அருந்தினார்கள். இறைவா! உன் திருப்தியை நாடி இதை நான் செய்திருந்தால் இந்தப் பாறை மூலம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தடையை நீக்குவாயாக!” என்று அவர்களில் ஒருவர் பிரார்த்தித்தார். உடனே அதிலிருந்து வெளியே வர இயலாத அளவுக்கு பாறை சிறிது விலகியது.

“இறைவா! எனக்குச் சிறிய தந்தையின் மகள் இருந்தாள். அவள் எனக்கு மிகப் பிரியமானவளாக இருந்தாள். (மற்றொரு அறிவிப்பில், ஆண்கள் பெண்களை விரும்புவதில் கூடுதல் நிலை இருப்பது போலவே.) அவளை அடைய நான் விரும்பினேன். (என் ஆசைக்கு இணங்க மறுத்தவளாக) என்னிடமிருந்து விலகி விட்டாள். பிறகு பஞ்சம் ஏற்பட்ட ஆண்டுகளில் ஒரு ஆண்டின் போது அவள் என்னிடம் உதவி கேட்டு வந்தாள். “அவளும் நானும் தனியே இருப்பது” என்ற நிபந்தனையின் பேரில் அவளிடம் நூற்றி இருபது தீனார்களைக் கொடுத்தேன். அவளும் சம்மதித்தாள். அவளை நான் நெருங்கினேன். (மற்றொரு அறிவிப்பில், அவளின் இரண்டு கால்களுக்கிடையே உட்கார்ந்தேன்.) அப்போது அவள், “அல்லாஹ்வை அஞ்சுவீராக! உரிமையின்றி முத்திரையை நீக்கிவிடாதீர்” என்று கூறினாள். அவள் எனக்கு. மற்றவர்களை விட மிகப் பிரியமானவளாக இருந்தும், நான் அவளை விட்டும் நீங்கிவிட்டேன். அவளுக்கு நான் கொடுத்த தங்கக் காசுகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை. இறைவா! உன் திருப்தியை நாடி இதை நான் செய்திருந்தால், இந்தச் சிரமத்தை எங்களை விட்டும் நீக்குவாயாக!” என்று மற்றொருவர் பிரார்த்தித்தார். இருப்பினும் அவர்களால் வெளியே வர இயலாத அளவுக்கு பாறை சற்று விலகியது.

“இறைவா! பல கூலியாட்களை வைத்து வேலை வாங்கிக் கொண்டிருந்தேன். அவர் களின் கூலியை ஒருவரைத் தவிர அனை வருக்கும் கொடுத்துவிட்டேன். தனக்குரியதை விட்டுவிட்டு அவர் சென்றுவிட்டார். அவரது கூலியை தொழிலில் பயன்படுத்தி னேன். அதிலிருந்து லாபம் பெருகியது. சில காலம் கழிந்தது. என்னிடம் அவர் வந்தார். “அல்லாஹ்வின் அடியாரே! என் கூலியை எனக்குத் தந்திடுவீராக!” என்று கூறினார். “நீ பார்க்கும் இந்தச் (சொத்து) அனைத்தும் உன்னுடையதுதான். ஒட்டகம், மாடு, ஆடு, அடிமை அனைத்தும் உமக்கே!” என்று கூறினேன். “உன்னை நான் கேலி செய்யவில்லை” என்று விஷயத்தைக் கூறினேன். உடனே அவர் அனைத்தையும் எடுத்துக் கொண்டார். அதிலிருந்து எதையும் அவர் விட்டுச் செல்லவில்லை. இறைவா! உன் திருப்தியை நாடி இதை நான் செய்தி ருந்தால், நாங்கள் இப்பொழுது உள்ள இந்த நிலைமையை எங்களை விட்டும் நீக்குவாயாக!” என்று மூன்றாவது நபர் பிரார்த்தித்தார். உடனே பாறை விலகியது. மூவரும் குகையை விட்டு வெளியேறினார் கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி: 2215, 2272, முஸ்லிம் 2743)

இம்மூவரும் தாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நாடி செய்த சேவைககாக நற்கூலியை கேட்டு பெறும் சந்தர்ப்பத்தை அல்லது சூழலை நபியவர்கள் அழகாக தெளிவுப்படுத்துகிறார்கள்.

உளப்பூர்வமாக அல்லாஹ்வை அஞ்சி காரியமாற்றும் போது அதற்கான பிரதிபலனை அல்லாஹ் இம்மையிலே காட்டிவிடுகிறான் என்பதற்கு இந்த ஹதீஸ் போதிய சான்றாகும். மனிதன் அல்லாஹ்வின் திருப்தியை நோக்காக அமல் செய்யும் போது இக்கட்டான சூழலிலும் அம் மனிதனுக்கு அல்லாஹ் நன்றி பாராட்டும் முகமாக அவனுடைய துஆவை ஏற்று உதவியளிக்கிறான்.

தாங்கள் செய்கின்ற நல்லமல்கள் மூலம் இம்மையிலும் பலனை அடைந்து கொள்ள முடியும் என்ற நன்செய்தியை அறியாத பலர், மரணித்துப் போன நல்லடியார்கள் எனக் கூறப்படுகின்ற கப்றுகளில் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றவர்களின் பெயர்களால் அவர்களின் பொருட்டால் பிரார்த்திக்கிறார்கள். “இந்த அவ்லியாவின் பெயரால் இந்த நாதாவின் பெயரால் இந்த ஷைக் கின் பெயரால் உன்னிடம் கேட்கிறேன். என் தேவைகளை யா அல்லாஹ் நிறை வேற்றித் தா!” என்று கேட்கிறார்கள்.

வஸீலா என்றால் இன்னுமொருவர் மூலம் உதவி பெறல் என்ற அர்த்தம் இருக்குமாக இருந்தால் நபியவர்கள் யார் மூலம் உதவி தேடியிருப்பார்கள்? விசுவாசிகளே அல்லாஹ்வை அஞ்சுங்கள் வஸீலா தேடுங்கள் எனும் போது அதில் நபியவர்களும் உள்ளடங்குகிறார்களே. முதலாவது விசுவாசி அவர்கள் தானே! அவர்கள் மரணித்துப்போனவர்களை அழைத்தார்கள் என்று சொல்லலாமா?

அல்லாஹ்வை ரப்பாக ஏற்றுக் கொண்டு ஈமானின் அடிப்படையில் செயலாற்றும் போது அச்செயலை முற்படுத்தி அல்லாஹ்விடம் கேட்க வேண்டுமா? அல்லது மரணித்துப் போன ஒருவரின் பெயரால் கேட்க வேண்டுமா? என சிந்திக்க வேண்டும்.

நான் செய்கின்ற நல்ல அமல்கள், இபாதத்கள் என்னை நரகிலிருந்து காப்பாற்றி சுவனத்துக்குள் நுழையச் செய்யும் எனும் போது மரணித்தவனின் பெயரால் கப்றில் அடக்கம் செய்யப்பட்டவரின் பெயரால் நான் ஏன் கேட்க வேண்டும்.? அவர் பெயரால் கேட்க வேண்டும் என்றால் நான் ஏன் அமல் செய்ய வேண்டும்? நான் செய்யும் அமல்கள் எனக்குப் பிரயோசனம் தரும் என அல்லாஹ்வும் அவனது தூதரும் வாக்குறுதி தரும்போது போது இறந்து போனவர்களை ஏன் அழைக்க வேண்டும்?

கப்ரில் அடக்கம் பண்ணப்பட்டவர் உயிரோடு பூமியில் வாழும்போது அவர் செய்த நல்லமல்களை வைத்து அவர் அல்லாஹ்விடம் கேட்பதற்கு தகுதியுடையவராக இருந்தது போலவே -நல்லவராகப் போய் சேர்ந்தது போலவே- நானும் உயிரோடு வாழும்போது என்னுடைய நல்லமல்களை முன்வைத்து அல்லாஹ்விடம் துஆ கேட்பதற்கும் நல்ல ஸாலிஹான மனிதனாகப் போய்ச் சேர்வதற்கும் உரித்து டையவனாக இருக்கிறேன். இந்த அம்சத்தைப் புரிந்தாலே வஸீலா அர்த்தம் தெளிவாகப் புரிந்து விடும்.

உங்களில் ஒருவருடைய மூன்று பிள்ளைகள் (பருவ வயதை அடைவதற்கு முன்) இறந்தும் அப்பெண் (தாய்) நன்மையை எதிர்பார்(த்து பொறுமை கா)த்தால் அவர் சுவர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிப் பெண்களிடம் கூறினார்கள்.

அப்போது அப்பெண்களில் ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! இரு பிள்ளைகள் இறந்தாலுமா?” என்று கேட்டார். இரு பிள்ளைகள் இறந்தாலும்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்)

மூன்று குழந்தைகளை மரணிக்கச் செய்த சோதனைக்கு ஆளாக்கும்போது அந்த சோதனையை பொறுமையாக ஏற்று அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்க்கும் பெண்ணுக்கு சுவனத்தை அல்லாஹ் கொடுக்கிறான்.

இச்சோதனை என்பது ஒரு முஃமி னுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறு வதற்கான வழியேயல்லாமல் தண்டனையல்ல. பெரிய இழப்பை இழந்தபோதும் மனம் தளராது அல்லாஹ்விடம் கையேந்தினால் அல்லாஹ் பதிலளிக்கிறான். நல்ல அமல்கள் செய்கின்ற மனிதனுக்கு அல்லாஹ்வின் நெருக்கம் இதன்போது கிடைக்கிறது.

“சிறிதளவு பயந்தாலும் பசியாலும் உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் நிச்சயமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்நிலைகளில்) பொறுமையை மேற்கொள் கின்றவர்களுக்கு (நபியே!) நீ நற்செய்தி கூறுவீராக. அவர்கள் (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்பொழுது நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பச் செல்வோராய் இருக்கிறோம் என்று கூறுவார்கள். அத்தகையோர் மீது அவர்களின் இரட்சகனிடமிருந்து நல்வாத்துகளும் நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்த கையோர் தாம் நேர்வழி பெற்றவர்கள். (அல்குர்ஆன் 2:155)

சோதனைகளைக் கண்டு துவண்டு விடாமல் படைத்தவனாம் அல்லாஹ்வின் பக்கம் மீளும்போது “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” என கூறும்போது அல்லாஹ்வின் அருளும் நல்வாழ்த்தும் கிடைக்கிறது. பொறுமையை கைக்கொள்ளும் ஒவ்வொரு ஆண், பெண் ணுக்கும் இந்த மகத்தான கூலியும் அல்லாஹ்வின் நேசமும் கிடைக்கிறது.

நான் நல்லமல் செய்துவிட்டு -மரணித்து அடக்கம் செய்யப்பட்டவரின் பெயரால்- என் தேவையை நிறைவேற்றித் தா! என கேட்பதுதான் அறிவுள்ள செயலாகுமா? அப்படி கேட்கச் சொல்வதும் அறிவார்ந்த செயலாகுமா?

2 comments

  1. haja jahabardeen

    mashallah! very good explanation ! the sunnath jamath must read this one ! our islam is very easy ,but some body make confusion !inshallah ! it will be cleared !!!

  2. அல்லாஹ்வுக்கும் மனிதனுக்கும் இடையில் நெருக்கத்தைப் பெறுவதற்கு எந்த நற்காரியம் உதவி புரியுமோ அதுவே வஸீலா எனப்படும். thayau seydu ithanai vilangappatuththaum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *