– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
ஒவ்வொரு முஸ்லிமும் தனது உயிரை விட உயர்வாக உத்தம நபி(ஸல்) அவர்களை நேசிப்பது கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களை நேசிக்காமல் ஒருவர் முஃமினாக முடியாது.
“நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்…” (33:6)
இது குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறும் போது “உங்களில் ஒருவர் தனது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் முழு மனித சமூகத்தையும் விட என்னை அதிகமாக நேசிக்காத வரையில் முஃமினாக முடியாது!” எனக் குறிப்பிட்டார்கள்.
நேசத்தின் வெளிப்பாடு:
நபி(ஸல்) அவர்கள் மீது உயர்வான நேசம் எல்லா முஸ்லிம்களிடமும் இருக்கின்றது. ஆனால் அந்த நேசம் உண்மை பெற வேண்டும் என்றால் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதே இதற்கு இருக்கும் ஒரே வழியாகும். சிலர் தாம் அல்லாஹ்வை நேசிப்பதாகக் கூறினார்கள்.
அதற்குச் சோதனையாகப் பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்;
“நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந் தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான், இன்னும், உங்கள் பாவங்களை உங் களுக்கு மன்னிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாவான் என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (3:31)
ஒருவர் அல்லாஹ்வை நேசிப்பவராக இருந்தால் அவர் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும். நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றினால் அவரை அல்லாஹ்வும் நேசிப்பான்; அவரது பாவங்களை மன்னிப்பான். இந்த இரு பாக்கியங்களும் அவருக்குக் கிட்டும்.
இந்த வசனத்துக்கு அடுத்த வசனம் இப்படி அமைகின்றது;
“அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் புறக்கணித் தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை நேசிக்க மாட்டான்.” (3:32)
இங்கே அல்லாஹ்வையும், அவரது தூதரையும் பின்பற்றுமாறு ஏவப்படும் அதே நேரம் அப்படிச் செய்யாத காஃபிர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்றும் கூறப்படுகின்றது. நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றாவிட்டால் அல்லாஹ்வின் நேசம் கிட்டாத அதே நேரம் அவர்களை அல்லாஹ் காஃபிர்கள் எனக் குறிப்பிடுவதும் கவனிக்கத் தக்கதாகும்.
எப்படிப் பின்பற்றுவது?
நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவது என்பது கொள்கை சார்ந்த அமல்கள், அமல்கள் சார்ந்தது, அத்துடன் திக்ர்-அவ்றாது போன்ற வார்த்தைகள் என்பவற்றை உள்ளடக்குவதுடன், செயல்களில் நபி(ஸல்) அவர்கள் விட்டார்கள் என்பதற்காக அவற்றை விடுவதையும் உள்ளடக்கக் கூடியதாகும்.
உதாரணமாகக் கொள்கை விடயத்தை எடுத்துக் கொண்டால் நபி(ஸல்) அவர்கள் ஒரு விடயத்தை நம்பியிருந்தால் அதை நாம் நம்ப வேண்டும்; அவர் நம்பியது போன்றும் நம்ப வேண்டும். உதாரணமாக நபி(ஸல்) அவர்கள் சுவனம் உண்டு, நரகம் உண்டு என நம்பினார்கள். அதை அப்படியே நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை ஈமானில் முக்கிய அம்சம் எனவும் உணர்த்தியுள்ளார்கள். அந்த முக்கியத்துவத்தைக் கொடுத்தே நம்ப வேண்டும். உதாரணமாக ஒருவர் “நான் எல்லாவற்றையும் நம்புகின்றேன்! ஆனால் ஜின்கள் இருப்பதை என்னால் நம்ப முடியாது!” எனக் கூறினால், அவர் கொள்கை விஷயத்தில் நபி(ஸல்) அவர்களை பின்பற்றியவராக மாட்டார். அல்லது ஒருவர் தஜ்ஜாலின் வருகையையோ அல்லது ஈஸா(அலை) அவர்கள் இறுதிக் காலத்தில் இறங்குவதையோ மறுக்கின்றார். ஆனால் முறையாகத் தொழுகின்றார் என்றாலும் அவர் கொள்கை விஷயத்தில் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றியவராக மாட்டார்.
இவ்வாறே, ஒருவர் நபி(ஸல்) அவர்கள் செய்த ஒரு அமலை அவர்கள் செய்த அதே போன்று செய்யாத வரையில்ஃஅவர்கள் செய்த அதே நோக்கத்தில் செய்யாத வரையில் அது நபிவழி நடப்பதாக இருக்காது.
தொழும் ஒருவர் அதை ஒரு உடற்பயிற்சியாக நினைத்துச் செய்தால், நோன்பிருக்கும் ஒருவர் வணக்கமாக இல்லாமல் உடல் மெலிவதற்காக என்ற எண்ணத்தில் செய்தால், அப்போதும் அவர் நபிவழி நடந்ததாக மாட்டாது. நாம் செய்யும் செயலும் நபியால் செய்யப்பட்டிருக்க வேண்டும்; நபி(ஸல்) அவர்கள் செய்த அமைப்பில்தான் அதை நாம் செய்யவும் வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் என்ன நிய்யத்தில் செய்தார்களோ, அதே நிய்யத்துடன்தான் செய்யவும் வேண்டும்.
நபிவழி நடத்தல் – சில அடிப்படைகள்:
“நபி வழி நடப்போம்!” எனக் கூறிக் கொண்டே சில வேளை நாம் நபி வழிக்கு முரணாக நடந்து விடலாம். அல்லது நபி வழியை விட நமது அறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விடலாம். இதைத் தவிர்ப்பதற்காக நபியை நேசித்தல், நபியைப் பின்பற்றல் அல்லது நபியை ஈமான் கொள்ளல் எனும் போது நாம் கவனத்திற்கொள்ள வேண்டிய முக்கிய சில விடயங்களைத் தொட்டுக் காட்டுவது பொருத்தமென நினைக்கின்றேன்.
இஸ்லாத்தின் அடிப்படைகள் வஹீ மூலம் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. அவை பகுத்தறிவின் மூலம் கட்டி எழுப்பப்படவில்லை. எனவே ஆதாரம் உறுதியானால் எமது அறிவுக்குக் காரண-காரியம் ஒவ்வாவிட்டாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இது குறித்து இமாம் சுஹ்ரி(றஹி) அவர்கள் கூறும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்;
“அல்லாஹ்விடம் இருந்து தூதுத்துவம் வந்துள்ளது. அதை எடுத்துரைப்பது அல்லாஹ்வின் தூதரின் கடமை! அதை ஏற்றுக்கொள்வது எமது கடமையாகும்!” (புகாரி)
இது குறித்த இமாம் அபுல் இஸ்(றஹி) அவர்கள் அகீததுத் தஹாவிய்யாவுக்கு விளக்கம் கூறும் போது பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்;
“நபி(ஸல்) அவர்கள் கூறிய ஒன்று எனது அறிவுக்குப் பொருந்தாவிட்டால் ஏற்றுக்கொள்ள மாட்டேன்! அறிவுக்குப் பொருந்தினால் மட்டுந்தான் ஏற்றுக்கொள்வேன் என்று ஒருவர் கூறுவாரெனில் அவர் நபியைப் பின்பற்றவில்லை; தனது அறிவையும், மனோ இச்சையையுமே அவர் பின்பற்றுகின்றார்!” எனவே நபி(ஸல்) அவர்கள் கூறியது அறிவுக்குப் பொருந்தினாலும், பொருந்தாதது போன்று தோன்றினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் செய்யாத, பித்அத்தை ஒருவர் உருவாக்கவோ, செயற்படுத்தவோ முடியாது. அது நபி வழி நடப்பதாகவும் இருக்காது. ஒரு ஸுன்னா ஷரீஆவுக்கு ஒத்துவர வேண்டும் என்றால் பின்வரும் ஆறு விடயங்களுக்கும் அது இசைவாக இருக்க வேண்டும்.
(1) காரணம்:
ஒரு அமலைச் செய்வதற்கான காரணம், அந்த அமல் ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்ததாகவும், சரியாகவும் அமைந்திருக்க வேண்டும். இல்லாவிடில் அச்செயல் ஸுன்னத்தாக மாட்டாது.
உதாரணம், றஜப் மாதத்தின் 27 ஆம் இரவில் சிலர் விழித்திருந்து தஹஜ்ஜத் தொழுகின்றனர். தஹஜ்ஜத் தொழுகை சிறந்த ஒரு வணக்கம் என்பதில் சந்தேகமேயில்லை. இருப்பினும் இந்தத் தஹஜ்ஜத் ஏன் தொழப்படுகின்றது எனக் கேட்டால் அது மிஹ்ராஜுடைய இரவு எனக் காரணம் கூறப்படுகின்றது. இந்தக் காரணத்துக்கு மார்க்கத்தில் ஆதாரமில்லை. எனவே தவறான காரணத்துக்காக செய்யப்படும் இந்த நல்ல செயலும் “பித்அத்” என்ற வட்டத்துக்குள் வந்து விடுகின்றது.
(2) இனம்-வகை:
என்ன செய்கின்றோமோ அந்த இனத்துக்கும், வகைக்கும் ஆதாரம் வேண்டும். ஒருவர் மான் அல்லது மரை வளர்க்கின்றார். இவை உண்ணத் தக்க பிராணிகள் என்றாலும் உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு மானையோ, மறையையோ அறுக்க முடியாது. உழ்ஹிய்யாக் கொடுப்பவர் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே அறுக்க வேண்டும். இவ்வாறே அகீகாக் கொடுக்கும் ஒருவர் ஒட்டகத்தையோ, மாட்டையோ அறுக்க முடியாது. அதற்கு ஆட்டைத்தான் அறுக்க வேண்டும். மாட்டை அறுத்து உணவு கொடுத்து விட்டு நான் அகீகா எனும் நபி வழியைப் பேணி விட்டேன் எனத் திருப்திப்படவும் முடியாது.
(3) அளவு:
ஒரு செயலுக்கான அளவு எவ்வளவு என்பதும் ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். லுஹருடைய ஸுன்னத்துத் தொழும் ஒருவர் இரண்டு றக்அத்துகளோ, நான்கு றக்அத்துகளோ தொழலாம். ஒருவர் மூன்று றக்அத்துகளைத் தொழுதால் அல்லது ஆறு றக்அத்துகள் தொழுதால் அது நபி வழியாகாது. குறித்த அளவுக்கும் ஆதாரம் வேண்டும். 10 ஆடுகளை அறுத்து ஒரு குழந்தைக்காக ஒருவர் அகீகாக் கொடுத்தால் அது நபி வழியைப் பின்பற்றியதாக இருக்காது.
தவாஃப் செய்பவர் ஏழு சுற்றுகள் சுற்ற வேண்டும். இவ்வாறே ஸபா-மர்வாவுக்கு இடையில் ஸஈ எனும் தொங்கோட்டம் போவதும், வருவதுமாக ஏழு தடவைகள் ஸஈ செய்ய வேண்டும் என்றெல்லாம் அளவு குறித்து வந்தால் அந்த அளவையும் சேர்த்துப் பின்பற்ற வேண்டும். தவாஃப் செய்வது சிறந்தது தானே என்று கஃபாவைப் பத்து முறைகள் சுற்றிச் செய்து அதை ஒரு தவாஃபாக ஆக்க முடியாது.
கியாமுல்லைல் தொழுகையின் றக்அத்துகள் இத்தனைதான் என நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்து இருக்கும் போது அந்த அளவை விட நாமாகச் சில றக்அத்துகளை அதிகரித்து விட்டு அதைக் “கியாமுல் லைல்” ஆக்க முடியாது.
(4) செய்முறை ஒழுங்கு:
ஒரு செயலைச் செய்யும் முறையும் நபி வழியையும், ஆதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். உதாரணமாக வுழூச் செய்யும் ஒருவர் காலைக் கழுவுகிறார்; தலையை மஸ்ஹ் செய்கிறார்; முகத்தையும், கைகளையும் கழுவுகின்றார். வுழூவுடைய எல்லா உறுப்புகளும் கழுவியாகி விட்டது. இப்போது இவர் வுழுச் செய்து விட்டார் என்று கூற முடியுமா என்றால் முடியாது. அனைத்து உறுப்புகளும் கழுவப்பட்டு இருந்தாலும் வுழூவை எப்படிச் செய்ய வேண்டும் என்ற செயல்முறை ஒழுங்கு பேணப்படவில்லை என்பதால் அது வுழுவாக அமையாது. சாதாரணமாக உடலைக் கழுவியதாகவே அமையும்.
(5) காலம்-நேரம்:
ஒரு அமலை உரிய காலத்தில் செய்ய வேண்டும். உதாரணமாக றஜப் மாதத்தில் உழ்ஹிய்யாக் கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்தால் அது உழ்ஹிய்யாவாக முடியாது.
இதில் காலம் மட்டுமல்லாது நேரமும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். ஸகாதுல் பித்ரைப் பெருநாள் தொழுகை முடிந்து கொடுத்தால் அது ஸகாதுல் பித்ராவாக ஆகாது.
அவ்வாறே ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் கால்நடைகளை அறுத்தால் அது உழ்ஹிய்யாவாகவும் மாட்டாது. காலம், நேரம் இரண்டும் ஆதாரத்துக்கு உட்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அது நபி வழியாக மாட்டாது.
(6) இடம்:
செய்யும் இடம் ஆதாரத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். துல்ஹஜ் ஒன்பதாம் நாள் இரவு முஸ்தலிபாவில் தங்க வேண்டிய ஒருவர் மினாவிலோ, அறஃபாவிலோ தங்கினால் அது ஹஜ்ஜாகாது. அல்லது கல்லெறியும் இடத்தை விட்டு விட்டு வேறு இடத்தில் கல் எறிய முடியாது. அல்லது 10,11 இரவுகளில் மினாவில் தங்குவதற்குப் பகரமாக மக்காவில் தங்க முடியாது. பள்ளியில் இஃதிகாஃப் இருப்பதற்குப் பதிலாக வீட்டில் இஃதிகாஃப் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது நபி வழி நடந்ததாகவும் அமையாது.
எனவே, நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் நாம் அவர்களது வாழ்வைக் கற்று, அவரைச் சகல துறைகளிலும் முழுமையாகப் பின்பற்ற முனைவோமாக!
useful website. jazakallahu khair.
Asslamu alaikkum
My Dear Islamic Brother Your Message is yous full
(Masha Allah ) At the beginning I ask Almighty Allah to bless you a good life here and hereafter enriched with peace & prosperity along your family and your life span protect you from whole evils on your way of bold