Featured Posts

திருடர்கள் ஜாக்கிரதை!

Articleஹிஜ்ரி 1428, ரமளான் பிறை 23-ல், அஸர் தொழுகையை, வேலை செய்யும் இடத்தில் தொழுதுவிட்டு ஜித்தா (சவுதி அரேபியா), பாப்மக்கா செல்வதற்காக மஹ்ஜர் செனாயியாவிலிருந்து மினி பஸ்ஸில் (கோஸ்டர்) சென்றுக் கொண்டிருந்தேன். செனாயியா செக்கிங் பாயிண்டிற்கும் கிங் அப்துல் அஜிஸ் மருத்துவமனைக்கும் இடைப்பட்ட ஆள்நடமாட்டம் குறைந்த இடத்திலிருந்து பங்களாதேஷை சேர்ந்த ஒரு சகோதரர் 10-15 கிலோ எடை கொண்ட பார்சலுடன் பேருந்தில் ஏறினார். அவர் பதற்றமான சூழ்நிலையில் காணப்பட்டார்.

சிறிது தூரம் செல்லச் செல்ல அவர், தனக்கு ஏற்பட்ட கொடூரத்தை கூற ஆரம்பித்தார் அதாவது தான் NIR என்ற பெயருடைய கெமிக்கல் கம்பெனியில் வேலை செய்வதாகவும், தனக்கு கிடைக்கவேண்டிய சம்பளம், ரமளான் போனஸ், சிறு தொகையை, கம்பெனியிலிருந்து முன்பணமாக (கடன்) பெற்று எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து அதோடு பங்களாதேஷில் இருக்கக்கூடிய தன் மனைவி, மக்கள் மற்றும் குடும்பத்தாருக்கு தேவையான பொருட்களை வாங்கி எடுத்துகொண்டு பொருட்கள் அனைத்தையும் கார்கோ மூலமும், ஒன்றுசேர்த்த பணத்தை பேங்க் மூலமும் தன் குடும்பத்தாருக்கு அனுப்புவதற்காக தன்னுடைய இல்லத்திலிருந்து புறப்பட்டு சவூதியா பால் தொழிற்சாலைக்கு (ஹலீப் சவூதியாவிற்கு) அருகில் பஸ்ஸிற்காக காத்து நிற்கும்போதுதான் அவருக்கு ஏற்பட்ட அந்த துயர சம்பவம் நடக்கத் துவங்கியது.

அதாவது தனியார் காரில் மூன்று கயவர்கள் (தொப்பி மற்றும் தாடி சகிதம்) வந்து எங்கே செல்ல வேண்டும் என்று கேட்க பலத் என்று சொல்ல 2 (இரண்டு) ரியால் கொடுத்தால் கொண்டு செல்லுகிறேன் என்று கூறியும் செல்ல மனமில்லாமல் தயங்கி நின்ற சகோதரரை, வலுக்கட்டாயமாக அழைத்து சென்றது அந்தக்கயவர்களின் கூட்டம். அப்படி அழைத்துச் சென்ற அந்த கூட்டம் புறப்பட்ட ஐந்திலிருந்து பத்து நிமிடங்களில் அதாவது ஆளரவமற்ற இடத்தில் தன்னுடைய வழமையாக நடத்தக்கூடிய நாடகத்தை துவங்கி விட்டது.

அதாவது காரில் டிரைவர் தன் இருக்கையிலும், டிரைவருக்கு அருகில் மற்றொருவரும், மூன்றாம் நபர் பின் இருக்கையில் அமர்ந்து இருப்பர். பயணிக்க விரும்புபவர் பின் இருக்கையில் மூன்றாம் நபரின் பக்கத்தில் அமர வேண்டிவரும். சிறிது நேரத்தில் பின்இருக்கையில் இருந்த மூன்றாம் நபர், சவூதி ரியால்கள் கொண்ட பணக்கட்டை பங்களாதேஷ் சகோதரிடம் காண்பித்து இந்த பணம் கீழே கிடந்தது யாரிடமும் சொல்லாதே இதனை நாம் இருவரும் பாதியாக பிரித்துக் கொள்வோம் என்று சொல்லியிருக்கிறான். அதற்கு சகோதரர் எனக்கு வேண்டாம் என சொல்ல சிறிது நேரத்தில் கார் நிறுத்தப்படுகிறது முன் இருக்கையில் இருக்கக்கூடியவன் என்னுடைய பணம் காணவில்லை யார் எடுத்தது முன்பு நான் பின் இருக்கையில்தான் அமர்ந்திருந்தேன் ஆகையால் நீதான் எடுத்திருக்க வேண்டும் என்று கூறி மற்ற இருவரும் சேர்ந்து சகோதரரின் பர்ஸை எடுக்க வைத்து அதிலிருந்த பணம் முழுவதையும் பிடிங்கிகொண்டு வலுக்கட்டாயமாக சகோதரரையும், பொருட்கள் கொண்ட அட்டை பெட்டியைபும் கீழே தள்ளிவிட்டு நொடி பொழுதில் சிட்டாக பறந்துவிட்டார்கள்.

பிறகுதான் தெரியவந்தது தனக்கு என்ன நேர்ந்தது, என்னனென்ன பொருள்களை பறிகொடுத்துள்ளோம் என்ற செய்தி. கடைசியாக இக்காமா பறிபோகவில்லை காப்பாற்றப்பட்டுவிட்டது (இக்காமாவையும் பிடுங்க முயற்சித்ததுள்ளார்கள், ஆனால் அல்லாஹ்வின் அருளால் அந்தச் சகோதரர் பாதுகாத்துக் கொண்டார்) கொண்டு வந்த பொருள்களும் கிடைத்துவிட்டது அல்ஹம்துலில்லாஹ் ஆனால், தான் வியர்வை சிந்தி உழைத்துக் கிடைத்த ஏறக்குறைய 4500 ரியால் பறிபோயிள்ளது என ஏங்கினார்.

இந்த கருத்து பரிமாறல்கள் நடந்து கொண்டிருக்கும்பொழுது இடையிடையே அவரின் எண்ண குமுறல்கள், ஆதாங்கம் மற்றும் இயலாமையை நினைத்து வருத்தப்பட்டு புலம்பக்கூடியதை கேட்டு மனது வருத்தப்படாமலில்லை அதாவது வருடமெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஒரு நொடிப்பொழுதினில் அபகரிக்கப்பட்டுவிட்டதே யாரிடம் சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும், என்ன செய்தால் பணம் திரும்ப கிடைக்கும் என்று அழாக்குறையாக வினவுகிறார். அதற்கு நான் யாரிடமும் சொல்லவும் முடியாது, எதுவும் செய்யவும் முடியாது மனதை தைரியபடுத்திக் கொள்ளுங்கள் மேலும் இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிட்டு பொறுமையாக இருங்கள் அல்லாஹ் இதைவிட சிறந்த ஒன்றை உங்களுக்கு கொடுப்பான் இன்ஷா அல்லாஹ் என்று அந்த சகோதரருக்கு ஆறுதல் கூறினேன்.

கூடுதல் விளக்கத்திற்காக: தனியார் வாகனத்தில் மூன்று பேராக சேர்ந்து வந்து இதுபோன்ற நிகழ்வுகள் செய்வார்கள் என்றல்ல. இந்த கூட்டத்தின் வேறொரு திட்டம் எதுவெனில் வாகனத்தில் டிரைவரைத் தவிர வேறு யாரும் இல்லாத நிலையிலும் உங்களை வாகனத்தில் அழைத்துக் கொண்டு சிறிது தூரத்தில் மற்ற சகாக்கள் வாகனத்தில் ஏறியும் தன்னுடைய நாடகத்தை துவங்குவார்கள் ஆகவே கவனமாக இருக்கவும்.

அன்பு சகோதரர்களே வயிறு பிழைக்க வெளிநாடு வந்த நாம், உழைத்து உண்டாக்கிய பணத்தை அபகரித்துக் கொள்ளவும், பிடுங்கி எடுத்துக் கொள்ளவும் ஒரு சில கூட்டங்கள் பலமான திட்டந்தீட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன இதுபோன்ற பல நிகழ்வுகள் பல இடங்களில் பற்பல பெயர்களில், பல விதங்களில், கண்கட்டி வித்தைகள் போன்று பலருக்கு அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இவைகள் ஒழிக்கப்படவும், அச்சமின்றி வெளியிடங்களுக்கு சென்று வரவும் அல்லாஹ்விடம் துஆ செய்து கொண்டிருப்பதோடு மட்டுமில்லாமல் இதுபோன்ற விஷயங்களை கேட்கக்கூடிய, பார்க்கக்கூடிய நாம் விழிப்புணர்வோடு செயல்படவும், மற்றவர்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதும் அவசியம் என்ற காரணத்தினாலேயே இக்கட்டுரையை எழுதியுள்ளேன். அன்றாடம் இதுபோன்ற வழிப்பறி கொள்ளைகளில் பலர் மாட்டிக் கொண்டு அல்லல்படுவதை தடுத்து நிறுத்த மற்ற அனைவருக்கும் இச்செய்தி பற்றிய விழிப்புணர்வை கொடுங்கள்.

இதுபோன்ற நிகழ்வுகள் இன்று தொடங்கியது இல்லை பல ஆண்டுகளாக வழிப்பறி நாடகம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதையும் கவனத்திற்கு கொண்டு வருவதோடு மட்டுமின்றி ஒரு சில உயிர்களும் பறிபோயுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது மஸாத் அல்சார்க் என்ற தொழிற்சாலையில் வேலை செய்த மதுரையை சேர்ந்த ராஜா உசேன் என்ற சகோதரர் கடந்த 2000வது வருடத்தில் மே மாதம் 10ந்தேதி காணாமல் போனவர் இன்றுவரை அவரின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்பதையும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் அறிந்தவகையில் நமது நாடுகளில் கூட்டங்கள் நிறைந்த பஸ்களில், பஸ் நிறுத்தங்களில், இரயில்வே நிலையங்களில் மற்றும் விழாக்கள் நடைபெறுகின்ற பகுதிகளில் பிக்பாக்கெட், வழிமறித்து பிடுங்குதல் இன்னும் இவைகள் போன்ற பாதிப்புகளைத்தான் நாம் அறிந்திருக்கிறோம் ஆனால் இங்கேயோ, மேற்சொன்ன நாடகம் போன்று வேறு பற்பல நாடகங்களை அரங்கேற்றியும் நம் சகோதரர்களின் பொருட்கள் மற்றும் உயிர்களை பறிக்கக்கூடியவர்களின் செயல் திட்டங்கள் ஒரு சிலவற்றையும் எனக்கு தெரிந்த வகையில் கீழே தருகிறேன்.

1. முன்பின் அறிமுகமில்லாதவர்கள் காரில் இருந்தபடியே ஏதாவது பெயரை சொல்லி முகவரி கேட்பது, அதற்கு உதவும் முகமாக நம்முடைய சகோதரர்கள் டிரைவர் இருக்கையினருகில் சென்று சற்று குனித்துக் கொண்டு வழியை சொல்லிக் கொண்டிருக்கும்போது சட்டை மேற்பையில் இருக்கக்கூடிய எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு வாகனத்தில் பறந்துவிடுவது.

2. காரில் இருந்தபடியே ஏதாவது விலாசம் கேட்டு அல்லது போன் நம்பரை சொல்லி இதற்கு ஒரு போன் செய்து எப்படி போக வேண்டும் என்று கேட்டு சொல்லுங்கள் என்று கேட்கக்கூடிய திருடர்களுக்கு நம்முடைய சகோதரர்கள் தன்னுடைய போனிலேயே போன் செய்து அவரிடம் கொடுத்து பேச சொல்வதுதான் தாமதம் அவனின் கைக்கு போன் மாறிய ஒருசில நொடிகளிலேயே கார் பறக்க தொடங்கிவிடும். மொபைல் போனும், அதிலுள்ள பணமும் அம்பேல். இதுபோன்ற நாடகத்தில் பங்கு கொண்ட நம் சகோதரர் ஒருவர் கார் பறக்க தொடங்கியதும் காரை பிடித்து பொருளை மீட்டிவிடலாம் என்று நினைத்து காரை பிடித்து தொங்கி உடம்பில் பல இடங்களில் காயங்களோடு மீண்ட சம்பவங்களும் நடந்துள்ளது.

3. மதிப்பில்லா பொருள்களை இரண்டு பிளாஸ்டிக் பைகளில் தூக்கிக் கொண்டு வந்து, ஒரு பையிலுள்ளவற்றை மற்ற பைக்கு மாற்றுவதற்காக உதவி கேட்டு, நம்முடைய சகோதரர்களும் உதவ முன்வந்து சற்று குனிந்த நிலையில் ஒரு பையை பிடித்திருக்கும்போது தன்னுடைய மேல்பாக்கெட்டிலுள்ள அனைத்தையும் பிடிங்கி கொண்டு மதிப்பில்லா பொருள்களை சகோதரருக்கு விட்டு சென்ற சம்பவங்களும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

4. நடைபாதையில் நடந்து கொண்டு தன்னை மறந்த நிலையில் மொபைல் போனில் மற்றவர்களுடன் பேசிக் கொண்டு செல்லக்கூடிய எத்தனையோ நம் சகோதரர்களின் மொபைல் போன் பறிபோயுள்ளது என்பதையும் தெரியபடுத்திக் கொள்கிறேன். இதுபோன்ற செயல்களில் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் பிரபல்யமாக செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போன் உங்கள் காதுகளின் பக்கத்திலோ அல்லது கைகளிலோ இருக்கக்கூடிய நிலையில் இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் சைக்கிள்களிலோ, நடந்தோ, ஓடிய நிலையிலோ உங்களை கடக்க முற்படுவார்களேயாயின் கவனமாக உங்களின் பொருளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

5. பேண்ட் பெல்ட்டோடு மொபைல் போன் கவரையும் சேர்த்து வைத்துக் கொண்டு நடக்கக்கூடிய, நின்று கொண்டு இருக்கக்கூடிய நிலையிலும் சைக்கிள்களிலோ, மோட்டார் சைக்கிள்களிலோ அல்லது காரிலோ வந்து போன் கவரோடு மொபைலை பிடிங்கிய சம்பவங்களும் உண்டு.

6. வழியில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது அறிமுகமில்லாத ஒருவர் 500 ரியால் நோட்டினை காண்பித்து, இந்த பணம் கீழே கிடைத்தது என்னுடையது அல்ல ஆகையால் நாம் இருவரும் சரிபாதியாக எடுத்துக் கொள்வோம் என்று கூறி என்னிடம் சில்லரை இல்லை எனக்கு 250 ரியால் கொடு நான் இந்த 500ஐ உன்னிடம் தந்துவிடுகின்றேன் என்று கூறி 250ரியால்-ஐ வாங்கிக் கொண்டு 500 ரியாலை கொடுக்காமல் 250 ரியாலோடு பறந்து சென்றவனும் உண்டு அல்லது செல்லா பணமாகிய நகல் (Duplicate) 500 ரியால் பணத்தை கொடுத்துவிட்டு சென்றவனும் உண்டு. பேராசையின் காரணமாக மற்றவரின் பொருளுக்கு ஆசைப்பட்டு தன்னுடைய 250 ரியாலையும் தொலைத்துவிட்டு 500 ரியாலை மாற்ற முடியாமல் திண்டாடியவர்களும் உண்டு.

மேற்சொன்னது மட்டுமல்லாது வேறு பல வழிகளிலும் நம்முடைய பொருள்களை அபகரிக்க முயற்சிகள் நடைபெறலாம் அவற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளுவது அவசியம்:

1. வெளியில் செல்லும் போது கூடுமானவரையில் பணம், இக்காமா, மொபைல் போன் மற்றும் இன்னபிற பொருள்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பழகி கொள்ளவும்.

2. காரில் பயணம் செய்ய நேர்ந்தால் அரசாங்க அனுமதி பெற்ற டாக்ஸிகளில் மாத்திரம் பயணம் செய்யவும். கூடுதல் பாதுகாப்பிற்காக டாக்ஸிகளில் அமருவதற்கு முன்பு டாக்ஸியின் நம்பரை உதாரணமாக 32-40 என்று இருக்கக்கூடிய நம்பரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். (32 என்ற எண் டாக்ஸி கம்பெனியையும், 40 என்ற எண் அந்த கம்பெனிலுள்ள காரின் வரிசை எண்ணையும் குறிக்கும்)

3. அறிமுகம் இல்லாத தனியார் வாகனத்தில் எப்பொழுதுமே பயணிக்க வேண்டாம்.

4. இரவு நேரங்களில் பயணம் செய்வோர் துணையில்லாமல் பயணிக்க வேண்டாம்.

5. பள்ளிவாசலுக்கோ அல்லது மற்ற இடங்களுக்கோ நடந்து செல்வோர் குறுக்குவழி பாதைகளை தவிர்த்து ஆள்நடமாட்டம் நிறைந்த பெரிய பாதைகள் வழியாக சென்று வரவும்.

6. பொது வாகனங்களில் பயணிக்கும்போது தூங்குவதை தவிர்த்துக் கொள்ளுவதோடு கவனக்குறைவாகவும் இருக்காதீர்கள். உங்களின் கவனக்குறைவை பயன்படுத்தி உங்களின் பொருளை அபகரிக்க முயற்சிகள் நடைபெறலாம்.

இன்னும் பல்வேறுவிதமான புதுப்புது தொழிற்நுட்பங்களுடன் உங்களை அணுக நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம், இதற்கெல்லாம் நமக்கு தெரிந்த ஒரே உபகரணம்
நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த கீழ்கண்ட துஆவை அன்றாடம் அல்லாஹ்விடம் கேட்டுக் கொள்வதுதான்.

யா அல்லாஹ் விதியை பொருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும், மரணத்திற்குப் பின் குளிர்ந்த (சொர்க்க) வாழ்வையும், வழிகேட்டின் குழப்பத்திலும், தீய விளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டுவிடாது உன்னைச் சந்திப்பதின் ஆசையையும் உன் திருமுகத்தைப் பார்ப்பதில் அடையும் இன்பத்தையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

நான் யாருக்கும் அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது யாராவது எனக்கு அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது நான் அத்துமீறுவதிலிருந்தும் அல்லது யாராவது என்மீது அத்துமீறுவதிலிருந்தும் அல்லது நீ மன்னிக்காத தவறு மற்றும் பாவங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

எல்லாவற்றையும் நன்கு, தீர அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்

2 comments

  1. Verygood information for the public.

  2. that is 100% true.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *