Featured Posts

ஜித்தாவில் “யூசுப் எஸ்ட்” – இஸ்லாமிய நிகழ்ச்சித் தொகுப்பு

யூசுப் எஸ்ட்இஸ்லாமிய மார்க்கம் உலகம் முழுவதிலும் அதிக மக்களால் படிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக அமெரிக்க நாட்டில் பல ஆண்களாலும் பெண்களாலும் இஸ்லாம் படிக்கப்பட்டும் பரப்பப்பட்டும் வருகின்றது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து சவூதி அரேபியாவிற்கு பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் யூசுப் எஸ்ட் அவர்கள் வருகை புரிந்தார்கள். ஜித்தாவிலுள்ள சவூதி ஜெர்மன் மருத்துவமனை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஸ்லாமிய நிகழ்சியில் யூசுப் எஸ்ட் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்பொழுது அவர்கள் அமெரிக்காவில் அழைப்புப்பணிகளின் நிலைபற்றி சுட்டிக்காட்டினார். மேலும் முஸ்லிம்களின் மீதுள்ள மிகப்பெரிய பொறுப்பாகிய ‘இஸ்லாத்தை தங்களோடு இருப்பவர்கள் மத்தியில் எடுத்துரைப்பது’ மற்றும் அவர்களுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்புவிடுப்பது பற்றியும் நினைவுபடுத்தினார்.

யூசுப் எஸ்ட் அவர்கள் ‘இஸ்லாத்தின் அழகு’ என்ற தலைப்பைத் தழுவி உரையாற்றினார். அவர் கூறியதாவது இஸ்லாத்தின் தனிப்பட்ட அழகு என்பது ‘மனிதனை அமைதியான நிலையில் வாழ வழிகாட்டியிருப்பது இஸ்லாம்’ ஆகும். மனிதனுக்கு மனமகிழ்ச்சி மற்றும் அமைதி என்பது வசதியோ, ஆடம்பரமோ ஒருபோதும் கொண்டு வந்து சேர்க்காது. மகிழ்ச்சி மற்றும் அமைதி எப்பொழுது கிடைக்கும் எனின் நாம் இறைவன் மீது தூய நம்பிக்கை வைத்தும் நல்ல செயல்கள் புரிவதன் மூலமே ஏற்படும், என யூசுப் எஸ்ட் அவர்கள் கூறினார். இஸ்லாத்தின் அழகானது ‘இறைவனுக்கு முற்றிலும் அடிபணிவது மற்றும் அவன் கட்டளைகளை முழுவதுமாக ஏற்று-நடப்பதே’ ஆகும்.

இறைவன் மீது நம்பிக்கை-கொண்டுள்ளவர்கள் தனக்கு நல்லவைகள் நிகழும்போது இறைவனுக்கு நன்றி கூறுபவர்களாகவும், தீயவைகள் நிகழும்போது பொறுமையுடையவர்களாகவும் இருக்க வேண்டும். நாம் அதிகம் நேசிக்கக் கூடியவர்களில் ஒருவருக்கு மரணம் நேரிட்டாலும், நாம் இறைவனிடத்திலிருந்து வந்தவர்கள் நாம் அனைவருமே அவனிடத்தில் திரும்பிச் செல்ல இருப்பவர்கள் என்று தம்மை அமைதிபடுத்திக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இதுவே இஸ்லாத்தின் அழகாகும்.

புனித நூலான திருக்குர்ஆனை உலகத்தில் உள்ள லட்சக்கணக்கானோர் முழுவதுமாக மனணம் செய்து வைத்திருக்கின்றனர். ‘வேறு எந்த புத்தகமும் பைபிள் உட்பட உலகத்தில் அதிகமானோர் மனனம் செய்து வைத்திருக்கவில்லை’ என்பதை எடுத்துரைத்தார்.

முஸ்லிம்கள் என்றால் ‘தீவிரவாதிகள்’, இஸ்லாமிய பள்ளிகளில் மாணவர்களுக்கு வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கு பயிற்சி கொடுக்கிறார்கள் என்றெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்பட்டு வரும் பொய்ப்பிரச்சாரங்களை சுட்டிக்காட்டினார். தீவிரவாதிகளின் முதல் எதிரி முஸ்லிம்களே ஆவார்கள். இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்திற்கு துணை நிற்பதில்லை என்பதையும் யூசுப் எஸ்ட் அவர்கள் விளக்கப்படுத்தினார்.

அதிகமானோர் இஸ்லாத்தை ஏற்றுக்கொளளாமல் போவதற்குக் காரணம் அவர்ளிடம் இஸ்லாம் சரிவர எத்திவைக்கப்படவில்லை என்பதே ஆகும். இஸ்லாத்தை எடுத்துச் சொல்பவர்கள் யாரேனும் அமெரிக்க ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ்ஷிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறோமா? நாம் பிரார்த்திப்போம் “புஷ்ஷிற்கும் இஸ்லாத்தின் பக்கம் நேர்வழி காட்டு” என்று. இஸ்லாம் நமக்கு நேரான வழியைக் காட்டிக் கொடுத்திருக்கின்றது மற்றும் இந்த உலகத்திலுள்ள அறியாமைகளை விட்டும் விலக இஸ்லாம் வழிவகுத்துத் தந்துள்ளது. நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் ஏனெனில் இந்த உலகத்திலுள்ள 1.5 மில்லியன் முஸ்லிம்களுக்கு மத்தியில் நானும் முஸ்லிமாக வாழ இறைவன் வழிவகை செய்ததற்காக என்று யூசப் எஸ்ட் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

முஸ்லிம்கள் சோதிக்கப்படும் போது பொறுமை கொள்ள வேண்டும், அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கவில்லை இந்த உலகத்தில் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களுக்கு சோதனைகள் எதுவும் வராது என்று. எனினும் நல்லவர்கள் சோதிக்கப்படும் போது பொறுமை கொண்டால் அதன் கூலியாக இறைவன் மறுமையில் வழங்கி கண்ணியப்படுத்துவான், என எஸ்ட் அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுரை வழங்கினார்.

யூசுப் எஸ்ட் அவர்கள் அதே வளாகத்தில் “இன்றையை சமுதாயத்தில் முஸ்லிம் இளைஞர்கள்” என்ற தலைப்பின் கீழ் உரையாற்றும் போது குழந்தைகளுடன் பெற்றோர்கள் தங்களுடைய நேரத்தைச் செலவிடவேண்டும், என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினார். பெற்றோர்கள் தங்கள் நேரங்களை குழந்தைகளுடன் கழிப்பதினால் குழந்தைகள் நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்கின்றனர். அதேசமயம் குழந்தைகள் தனிமையில் இருக்கும் போது தவறான பழக்கங்ளை கற்றுக்கொள்வதைவிட்டும் தவிர்க்கப்படுகின்றனர்.

அதைத் தொடர்ந்து ஜித்தாவில் பல்வேறு பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார். இதே மேடையில் பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த ஒரு சகோதரர் இஸ்லாத்தைக் ஏற்றுக்கொண்டார். இஸ்லாத்தில் சேர்ந்த அந்த சகோதரரை யூசுப் எஸ்ட் அவர்கள் “ஷஹாதா”வை (வணக்கத்திற்குறியவன் இறைவன் மட்டுமே! முஹம்மது(ஸல்) இறைவனின் திருத்தூதர் என்பதை) சொல்லித்தர பிலிப்பைன் சகோதரரும் மொழிந்தார்.

யூசுப் எஸ்ட் அவர்கள் 1991 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைப்புவிடுத்துக்கொண்டிருக்கும் அழைப்பாளர் ஆவார்.

அதைத்தொடர்ந்து இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையைச் சார்ந்தவரான ஹாமூத் அல்-ஷிமைம்ரி பேசுகையில் அழைப்புப்பணியின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவங்களை எடுத்துரைத்தார். “நாம் செய்யக்கூடிய அழைப்புப்பணியின் விளைவாக யாரேனும் ஒருவர் இஸ்லாத்தை தழுவினாலும் இந்த உலகத்தில் நாம் சாதித்த அனைத்தைவிடவும் சிறந்ததாகும் எனவும் அதைத்தொடர்ந்து திருக்குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியவை ஆகியவைகளைக் கூறி அழைப்புப் பணியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த ஒரு சகோதரர் இஸ்லாத்தைக் கூறி அழைப்புவிடுத்ததன் காரணமாக 25 பிலிப்பைன் சகோதரர்கள் இஸ்லாத்தை தழுவக் காரணமாக இருந்தார், என்பதையும் ஹாமூத் அல்-ஷிமைம்ரி மேற்கோள் காட்டினார்.

அதைத் தொடர்ந்து ஜித்தா தஃவா சென்டரைச் சேர்ந்த ஷேக் முஹம்மது சூஃபி மற்றும் வாஜித் அக்காரி, அறிமுக உரையும், மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முஹம்மது அலி நன்றியுரையும் ஆற்றினர். இந்நிகழ்ச்சியை ஜித்தா தஃவா சென்டரும், இந்தியன் இஸ்லாஹி சென்டரும் இணைந்து நடத்தினர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *