1232. அல்லாஹ்விடம் நற்பலன் பெறுபவராக இறந்து போகிற எந்த (நல்ல) அடியாரும் இந்த உலகமும் அதிலுள்ளவை அனைத்தும் அவருக்குக் கிடைக்கும் என்றிருந்தாலும் கூட உலகிற்குத் திரும்பி வர விரும்ப மாட்டார்; இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவரைத் தவிர ஏனெனில், உயிர்த்தியாகத்தின் சிறப்பை (மறுமையில்) அவர் காண்கிறார். எனவே, இந்த உலகிற்கு மீண்டும் வந்து மறுபடியும் ஒருமுறை (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்படுவதை அவர் விரும்புவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1233. இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘ஜிஹாத் என்னும் (இறைவழியில் புரியும்) அறப்போருக்குச் சமமான ஒரு நற்செயலை எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அப்படி எதையும் நான் காணவில்லை” என்று கூறிவிட்டு, ‘அறப்போர் வீரன் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றுவிட்டால் (அவனுக்கு) இணையான நற்செயல் புரிந்திட வேண்டி) நீ உன் வணக்கத் தலத்திற்குச் சென்று இடைவிடாமல் தொழுது கொண்டும் தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டும் இருக்க உன்னால் முடியுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ‘அது யாரால் முடியும்?’ என்று பதிலளித்தார்.